மேயர் பதவிக்கு அனு நடராஜன்
தமிழ்க் கல்வி மாநாடு, கிரிக்கெட் அசோசியேஷன் விருந்து, அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட் நிதி திரட்டும் நிகழ்ச்சி - எங்கெல்லாம் சமுதாய நிகழ்வுகள் நடக்கின்றனவோ அங்கெல்லாம் அனு நடராஜனைப் (பார்க்க: தென்றல், அக்டோபர் 2010) பார்க்கலாம். ஃப்ரீமான்ட் நகரத் திட்டக் குழு உறுப்பினராகத் தனது பயணத்தை 2003ல் தொடங்கிய அனுவை, டிசம்பர் 2004ல் மேயர் பாப் வசர்மான் நகர நிர்வாகக் குழு (city council) உறுப்பினராக நியமித்தார். 2011ல் பாப் மரணமுற்றபின் துணைமேயரான அனுவே தற்காலிக மேயராக ஜனவரி 2012வரை பொறுப்பு வகித்தார். டிசம்பர் 2010ல் ஃப்ரீமான்ட் நகர மக்கள் பெருவாரியாக அவரை நகர்மன்ற உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற வைத்தனர். 2012 நவம்பரில் நடக்கவிருக்கும் ஃப்ரீமான்ட் மேயருக்கான பொதுத்தேர்தலில் அனு போட்டியிடுகிறார். இதில் வெற்றி பெற்றால், இந்த நகரத்தின் முதல் பெண் மேயர் என்று மட்டுமல்லாமல், முதல் ஆசியப் பெண் மேயர் என்ற பெருமையையும் அவர் பெறுவார்.

ஃப்ரீமான்ட் நகரத்தில் 17 ஆண்டுகளாக வசித்து வருவதோடு, அதன் நிர்வாகத்தில் பல நிலைகளில் பங்கேற்றிருக்கும் அனு நடராஜன், அதன் சிறப்புகள், பிரச்சனைகள் ஆகியவற்றை மிக நன்றாக அறிவார். அவர் கூறுகிறார், "விரைந்த வணிக வளர்ச்சி, நிறைய திறந்தவெளிகள், நல்ல பொழுதுபோக்கு வாய்ப்புகள், இத்தனையும் கொண்டது இந்த அழகிய நகரம். சென்ற ஆண்டில் மட்டும் இங்கே முப்பது சுத்தசக்தித் தொழில்நுட்ப வணிகங்கள் (Clean tech businesses) தொடங்கப்பட்டுள்ளன. 2200 பேடன்ட்களுக்கு நம் நகரத்தினர் உரிமம் பெற்றுள்ளனர். இவ்வாறு புத்தாக்கம், வேலை வாய்ப்பை அதிகரித்தல், தூய சூழல் மற்றும் பசுமைத் தொழில்களைப் பெருக்குதல் போன்றவை பல்கிப் பெருக ஆவன செய்து, இந்த நகரத்தின் எதிர்காலத்தை இன்னும் வளமாக்குதல் எனது செயல்திட்டமாக இருக்கும்."

பல இனத்தினரும் வயதினரும் கலந்து வாழும் நகரமான ஃப்ரீமான்டின் பசிஃபிக் காமன்சில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள நியூ சென்ச்சுரி தியேட்டர்ஸ் சிறப்பானதொரு வணிக, பொழுதுபோக்கு வளாகமாக இருக்கப் போகிறது என்று கூறும் அனு, அதே நேரத்தில் நகரத்தின் பாதுகாப்பு அம்சங்களையும் மறக்கவில்லை. "ஓர் இளம்பெண்ணின் தாயாரான எனக்கு, நமது குழந்தைகள் விளையாடவும், குடும்பங்கள் சேர்ந்து களிக்கவும் பாதுகாப்பான இடங்கள் தேவை என்பது தெரியும்" எனத் தெளிவுபடுத்துகிறார்.

ஒரு முன்னணி நகரத்தின் எதிர்காலம் மேலும் ஒளிபெற வேண்டுமென்றால், "தெளிந்த சிந்தனை, தீர்க்கமான, திடமான தொலைநோக்குப் பார்வை வேண்டும்" என்கிறார் அனு. ஃப்ரீமான்ட் மக்கள், வணிகர்கள், சமூகச் செயல்வீரர்கள் அனைவரிடமிருந்தும் நகரத்தின் மேன்மைக்கான வழிமுறைகளைக் கேட்டறிய விரும்புகிறார் அவர். "154 நாடுகளிலிருந்து வந்தவர்கள் வசிக்கும் ஃப்ரீமான்ட், விரிகுடாப் பகுதியின் 4வது பெரிய நகரமாகும். இதில் ஆசியர்கள் 51.5 சதவீதம். அதிலும் இந்திய அமெரிக்கர்களின் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். இந்த வேற்றுமையில் ஒற்றுமையை நான் கொண்டாடவும், வெளிச்சம் போட்டுக் காட்டவும் நான் விரும்புகிறேன்" என்று பெருமையோடு கூறுகிறார் அவர்.

முன்னரே இந்த நகரம் அவருக்கு வெற்றி மாலை சூட்டியுள்ளது என்ற போதும், ஒவ்வொரு தேர்தலும் புதிய சவால்களைக் கொண்டது. நிதி திரட்டவும், கொள்கை பரப்பவும், இப்படி ஒருவரை மேயராக்கும் வாய்ப்பு உள்ளது என்பதை எல்லோர் பார்வைக்கும் கொண்டுசெல்லவுமான பெரும் பணியில் தன்னார்வத் தொண்டர்களின் பங்கு மிக முக்கியமானது. "இதற்கு 300, 400 பேராவது தேவை" என்கிறார் அனு.

தொண்டராக விரும்பினால் தொடர்புகொள்ள
மின்னஞ்சல்: anu@anu4fremont.com
வலைமனை: anu4fremont.com
ஃபேஸ்புக்கில் விரும்புக: Anu4fremontMayor

எல்லாவற்றிலும் முன்னோடியாக இருக்கும் ஃப்ரீமான்ட் நகரத்துக்கு அனு நடராஜனை மேயராக தேர்ந்தெடுத்து, அவரை அதன் முதல் பெண் மேயராக்கலாமே!

© TamilOnline.com