மகதி
பின்னணிப் பாடகி மகதி, அகில இந்திய வானொலியின் ஏ கிரேட் ஆர்டிஸ்ட், கர்நாடக இசைக்கான கேரள அரசு விருது, தமிழ்நாடு அரசின் சிறந்த பின்னணிப் பாடகி விருது, இன்டர்நேஷனல் தமிழ் பிலிம் அவார்ட் (ITFA), 'இசையருவி' சானல் விருது, எம்.ஜி.ஆர். சிவாஜி ஆர்ட் கேலரி அவார்ட், வெரைடி ஃபிலிம் அவார்ட், பாரத் கலாச்சாரின் யுவகலா பாரதி என்று விருதுகள் குவித்தவர். எம்.ஏ. ஆங்கில இலக்கியம் பயின்றவர். அவரிடம் சில நறுக் கேள்விகளும் சுருக் பதில்களும்....

கே: உங்களை இசையுலகில் 'மழலை மேதை' என்று அடையாளம் காண வைத்த சம்பவம் எது?
ப: 1988, டிசம்பர் 25 அன்று மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்பில் மாண்டலின் சீனிவாஸ் கச்சேரி. அம்மா மடியில் உட்கார்ந்தபடி ராகங்களைச் சொன்னேன். எனக்கு 3 வயசுதான். உடனடியாக சபா செகரட்டரி என்னை மேடைக்கு அழைத்துச் சென்றார். சீனிவாசும், கன்யாகுமரியும் வாசிக்க, ராகங்களைக் கண்டு பிடித்துச் சொன்னேன். பல பத்திரிகைகள் என்னை 'மழலை மேதை' என்று செய்தி வெளியிட்டுப் பிரபலப்படுத்தின.

கே: பெற்றோர்கள் உங்கள் இசையறிவை எப்படி அடையாளம் கண்டனர்?
ப: எனக்கு 2 வயது இருக்கும். ஒரு கோயிலில் அப்பாவின் கச்சேரி. அவர் ராக ஆலாபனையை ஆரம்பித்த உடனேயே நான் 'கணபதி, கணபதி' என்று மழலையில் சொல்லிக் குதித்தேனாம். அப்பா தொடங்கியது 'வாதாபி கணபதிம்' என்ற ஹம்சத்வனி பாடலை. 3, 4 வயதுக்குள் சுமார் 60, 70 ராகங்களை அடையாளம் காண முடிந்தது என்னால்.

கே: இது எப்படிச் சாத்தியமானது?
ப: அம்மாவின் தாத்தா சங்கீத கலாநிதி பழமாநேரி சுவாமிநாத ஐயர் பெரிய வயலின் வித்வான். தியாகராஜ சுவாமிகளின் சிஷ்யப் பரம்பரையில் வந்தவர். அப்பா திருவையாறு சேகர் வாய்ப்பாட்டுக் கலைஞர். டாக்டர். பாலமுரளியின் சிஷ்யர். அம்மா வசந்தியும், இசை மேதை டி.ஆர். மஹாலிங்கத்தின் சிஷ்யை. அதனால்தான் இது சாத்தியமாகி இருக்கும் என்று நினைக்கிறேன்.

கே: முதல் கச்சேரி எங்கு, எப்போது?
ப: முதல் கச்சேரி, ஒரு சின்னக் கச்சேரி, நான் இரண்டாம் வகுப்பு படித்தபோது ஒரு கோயிலில் நடந்தது.

கே: முதல் திரைப்பாடல் வாய்ப்பு எப்போது, எப்படி?
ப: நான் பிறந்தது சென்னையில், வளர்ந்தது கேரளத்தில். 12ம் வகுப்பு வரை அங்குதான் படித்தேன். இசையும் கற்று வந்தேன். என்னைப் பற்றிய பத்திரிகைச் செய்திகளை என் அம்மா ஒரு ஃபைலாக்கி வைத்திருந்தார்கள். ஒருமுறை சென்னைக்கு வந்தபோது இளையராஜா சாரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஃபைலைப் பார்த்துவிட்டு அவர் "நீ பாடுவியா, கேரளாவில் இருந்து வர்றியே, தமிழ் தெரியுமா?" என்றார்.

"நான் தமிழ்ப் பொண்ணுதான் சார்" என்றேன்.

"நீ கச்சேரி பண்ணுவேன்னு இந்த மேகசின்ல போட்டிருக்கே. சரி, எங்கே பாடு கேக்கலாம்" என்றார்.

நான் உடனே ஒரு கீர்த்தனை பாடினேன். "இப்போ நீ பாடினது என்ன ஸ்ருதி இருக்கும்?" என்றார்.

"ஆறு இருக்கும் சார்.." என்றேன்.

அவர் தனது ஹார்மோனியத்தில் வாசித்துப் பார்த்தார், சரியாக ஆறு இருந்தது. உடனே, "தமிழ் படிக்க வருமா?" என்று கேட்டு ஒரு பாடலைப் பாடக் கொடுத்தார். பாடினேன். சில நிமிடங்கள் யோசித்தவர், "சினிமாவுல பாடுறியா?" என்று கேட்டு, ஸ்டூடியோவுக்குள் போகச் சொன்னார்.

என்னுடைய 17 வயதில் முதன்முதலில் ராஜா சாரைப் பார்த்துப் பேசிய ஐந்தாவது நிமிடத்திலேயே அவர் இசையமைப்பில் பாடும் வாய்ப்புக் கிடைத்தது. வாழ்வில் மறக்கவே முடியாதது அது. அந்தப் பாடல் இடம்பெற்ற படம் வெளியாகவில்லை என்பது வேறு விஷயம்.

கே: கர்நாடக இசை, சினிமா இசை, ஸ்டேஜ் ஷோ, விளம்பர ஜிங்கிள்ஸ், வெளிநாடுகளில் கச்சேரி எல்லாவற்றிற்கும் எப்படி நேரம் கிடைக்கிறது?
ப: கஷ்டமாகத்தான் இருக்கிறது. அதுவும் பயணங்களால் எனது குழந்தையைப் பிரிந்திருப்பது ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது. எனது கணவரும் மருத்துவத் துறையில் இருப்பதால் எப்போதும் பிசிதான். இருந்தாலும் இருவருமாகச் சமாளிக்கிறோம்.

கே: உங்களுக்கு அதிக சந்தோஷத்தைத் தருவது எது?
ப: எல்லாமே இசை சார்ந்ததுதானே. கர்நாடக இசை, சினிமா இசை என்று பிரித்துப் பார்ப்பதில்லை. எல்லாமே பிடித்ததுதான்.

கே: உங்களுக்கு நடிக்கவும் வாய்ப்பு வந்திருக்குமே!
ப: வந்தது, வந்து கொண்டிருக்கிறது. எனக்குத் திரையில் தோன்ற ஆர்வமில்லை. ஸ்க்ரிப்டில் தொடங்கி எப்படி ஒரு படம் எடுக்கப்பட்டு, தியேட்டரில் வெளியாகிறது என்பதுவரை கற்றுக் கொள்ளும் ஆர்வம் உண்டு.

கே: உங்கள் கணவருக்கு இசை ஆர்வம் உண்டா?
ப: உண்டு. அவர் என் அம்மாவின் சிஷ்யர். நன்றாகப் புல்லாங்குழல் வாசிப்பார்.

கே: சின்ன வயதிலேயே புகழ் வந்திடுச்சு. இதில் நீங்க மிஸ் பண்றது என்னென்ன?
ப: புகழ் வரும், போகும். நான் அதைச் சம்பாதிக்க மிக உழைத்திருக்கிறேன். பல விஷயங்களை மிஸ் செய்ய வேண்டியிருக்கிறது. அது தவிர்க்க முடியாதது. ஐஸ்க்ரீமோ, கூல் ட்ரிங்ஸோ ஜாஸ்தி சாப்பிட முடியாது. இஷ்டம்போல ஜாலியா சுத்த முடியாது. நடிகர்கள் அளவுக்கு இல்லைன்னாலும் எதாவது எங்கேஜ்மெண்ட் இருந்துகிட்டே இருக்கும். குடும்ப விழாக்களில் கூட முன்கூட்டியே போய் கலந்துக்க முடியாது. செப்டம்பர் 2ம் தேதி குருவாயூர்ல ஒரு முக்கியமான திருமணம். 29ம் தேதி எம்.எஸ்.வி சாருக்கு முதல்வர் தலைமையில பாராட்டு விழா இருக்கு. அந்த நிகழ்ச்சில ஒரு பாட்டு பாடறேன். அதை முடிச்சிட்டுதான் நான் குருவாயூர் புறப்பட முடியும். குறிப்பா, குடும்பத்தோட அதிக நேரம் செலவழிக்க முடியலைன்னு சொல்லலாம்.

கே: தினமும் சங்கீத சாதகம் செய்வீங்களா? எவ்வளவு நேரம்?
ப: தினமும் 2 மணி நேரம் சாதகம் செய்கிறேன்.

கே: உங்கள் குழந்தை இசையில் உங்களைப் போலவா?
ப: நிச்சயமாக. அவனுக்கு 1 1/2 வயசு. ஆரம்பத்தில் Rhythm side நிறைய ஆர்வம் காண்பித்தான். வீட்டில இருக்கும் மைக் போன்ற எதையாவது எடுத்து 'ஆ' என்று பாடுகிறான். ஸ்ருதியை நன்றாக கவனிக்கிறான். அவன் கர்ப்பத்தில் இருக்கும் போது நிறையக் கச்சேரி பண்ணியிருக்கிறேன். டிசம்பர் மியூசிக் சீசன் முழுவதும் பாடியிருக்கிறேன். அவன் பிப்ரவரியில் பிறந்தான். அவன் இயல்புப்படி வரட்டும் என்று நினைக்கிறோம்.

கே: அமெரிக்காவில் நீங்கள் செய்யப்போகும் நிகழ்ச்சி லைட் மியூசிக்கா, கர்நாடக சங்கீதமா?
ப: இந்த முறை லைட் மியூசிக் மட்டும்தான்.

கே: அமெரிக்க ரசிகர்களிடம் உங்கள் எதிர்பார்ப்பு என்ன?
ப: முன்பே நான் அமெரிக்காவில் கர்நாடக இசை, திரையிசை கச்சேரிகள் செய்திருக்கிறேன். நல்ல வரவேற்பு கொடுத்தார்கள். விஷயம் தெரிந்தவர்கள். அவர்கள் முன் பாட மிக உற்சாகமாக இருக்கும். அதைத்தான் எதிர்பார்க்கிறேன்.

கே: நீங்கள் விரும்பி அணியும் உடை?
ப: புடவை, அதிலும் பட்டுப்புடவை. லெகிங், குர்தி அணியவும் பிடிக்கும்.

கே: மிகப் பிடித்த வெளிநாடு?
ப: அமெரிக்கா, ஆஸ்திரேலியா. ஹனிமூனுக்கு மலேசியாவில் உள்ள 'லங்காவி' தீவுக்குப் போனோம். அது ரொம்பப் பிடிக்கும்.

கே: நீங்கள் பாடியதில் உங்களுக்குப் பிடித்த பாடல் என்ன?
ப: எல்லாப் பாடல்களுமே பிடிக்கும். என் முதல் பாடலான 'என்ன மறந்தாலும்' பாடலை மறக்க முடியுமா! 'முதல் மழை', 'நெஞ்சே.. நெஞ்சே' பாடல்களும் பிடிக்கும்.

கே: பிறர் பாடியதில்?
ப: கோழி கூவுது படத்தில் 'ஏதோ மோகம்', அபூர்வ சகோதரர்கள் படத்தில் 'புது மாப்பிள்ளைக்கு' எல்லாம் ரொம்பவே பிடிக்கும்.

கே: இப்போது நீங்கள் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்...
ப: 'கும்கி' படத்தில் வரும் 'அய்யய்யோ', ரொம்ப க்ரிஸ்பியான பாட்டு.

கே: மிக நெருங்கிய நண்பர்?
ப: மிக நெருக்கமானவர்கள் என்றால், டாக்டர் பாலகோபால், டாக்டர் மாலா பாலகோபால்.

கே: அமெரிக்காவில் மிகவும் சந்திக்க விரும்பும் ஒரு நபர்?
ப: ஒபாமாவைச் சந்திக்கத்தான் ரொம்ப ஆசை. ஒருநாள் நடக்கும் என்று நம்புகிறேன்.

படபடவென்று கேள்வி முடிக்கும் முன்னேயே பதில் வருகிறது. உற்சாகமான இளம்பாடகியின் உற்சாகமான பதில்களை ரசிகர்களுக்குத் தரும் அவசரத்தில் நாமும் விடை பெறுகிறோம்.

உரையாடல்: அரவிந்த்

© TamilOnline.com