பேய் மழை (நாவலின் ஒரு பகுதி)
பிற்பகல் இரண்டு மணிக்குத் தொடங்கிய மழை இன்னும் விடவில்லை. இப்போது - இரவு மணி பதினொன்று.

சிறிதுநேரம் கூட விடாமல், ஒரு கணம் கூட ஓயாமல் அடித்துக் கொண்டிருந்தது மழை. வெயில் தாள முடியவில்லை. வெயிலின் கொடுமையிலிருந்து தப்ப நீலமலைக்கோ குற்றாலத்துக்கோ அல்லது கொடைக்கானலுக்கோ போய்ப் பதுங்கிக் கொள்ளலாமா என்று எண்ணியவர்கள் கூட, எப்போது இந்த மழை ஓயப் போகிறது, குளிர் தாள முடியவில்லையே என்று ஏங்கும் நிலைக்குக் கொண்டு வந்து விட்டது, சிலமணி நேரம் பெய்த அந்த மழை.

சாதாரண மழையா?

பேய் மழை!

வெளியே தலையைக் காட்டினால் தலையைச் சீவிக் கொண்டு போய்விடுமோ என்று எண்ணி அஞ்சும்படி காற்று வேறு வீசிக் கொண்டிருந்தது. காற்று வலுவாக வீசினால் மேகங்கள் இடம்பெயர்ந்து விடும். அதனால் மழை நின்று விடும் என்று எல்லோரும் எண்ணினார்கள். எவ்வளவு காற்றடித்தாலும் மேகங்கள் நகர்ந்து செல்ல இயலாத அளவுக்கு வானவெளி முழுவதும் மேகக் கூட்டங்கள் நிறைந்து விட்டனவா?

பளிச் பளிச்சென்று கண்களைப் பறிக்கும் மின்னல் தோன்றி மறைந்தபோது அணைந்துவிட்ட தெரு விளக்குகளின் வெளிச்சத்திற்குப் பதிலாக இயற்கை அவ்வப்போது ஈடு செய்வதைப் போலிருந்தது. மின்னல் மறைந்ததும், காதைப் பிளக்கும் பேரிடி. இடி இடித்தால் மழை நின்று விடும் என்று சொல்லுவார்கள். ஆனால் அன்று இயற்கையே வழக்கத்துக்கு விரோதமாக இருந்தது.

தெருவிளக்குகள் தாம் அணைந்து விட்டனவே தவிர, வீடுகளில் விளக்குகள் எரிந்து கொண்டுதான் இருந்தன.

அரக்கோணம் புகைவண்டி நிலையத்திலிருந்து சிறிது தள்ளித் தொலைவில் அமைந்திருந்த அந்தச் சிறிய பங்களாவின் எல்லாச் சன்னல்களும் கதவுகளும் மூடியிருந்தன. கீழே, வலப்பக்கமாக இருந்த அறையின் ஒரு சன்னல் மட்டும் திறந்திருந்தது.

உள்ளே அறைக்குள், சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து பளுவான புத்தகம் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தான், சொல்லழகன். அவன் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்த அந்த அறைக்குள் புதிதாக நுழைபவர்கள், அறைக்குச் சுவர்களே இல்லையா என்று வியப்படைவார்கள். எல்லாப் பக்கங்களிலும் சுவர்களே தெரியாதபடி ஆயிரக்கணக்கான புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

சொல்லழகனின் அமைதியான முகத்தையும், அகன்ற நெற்றியையும் அடக்கமான அவன் பார்வையையும் பார்ப்பவர்கள், இத்தனை புத்தகங்களையும் இவன் இந்த இளம் வயதிலேயே படித்து ஆராய்ந்திருக்க வேண்டும், இல்லாவிட்டால் முகத்தில் இப்படி ஓர் ஒளி தோன்றாது என்று உறுதியுடன் நம்புவார்கள். அவன் பார்வை அடக்கமாக இருந்த போதிலும் குறுகுறுப்புக் குவிந்த அது எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் தன்மையுடையதாக இருக்கும். அவன் தொடர்ந்து படித்துக் கொண்டேயிருந்தான்.

மழைச்சாரல் அடித்ததால், சன்னல் திரை முழுவதும் நன்றாக நனைந்து விட்டிருந்தது.

அரக்கோணம் புகைவண்டி நிலையத்தில் அப்போது புகைவண்டி ஒன்று வந்து நிற்கும் ஓசை கேட்டது.

சொல்லழகன் எழுந்து சன்னல் திரையைச் சிறிது விலக்கிவிட்டுப் பார்த்தான். பெங்களூரிலிருந்து சென்னைக்குப் போகும் வண்டி அது. சாதாரணமாகவே சிறிது தாமதமாக வரும் புகைவண்டிகள் மழைக்காலத்தில் எங்கே ஒழுங்காக வரப்போகின்றன? ஏழுமணிக்கு வர வேண்டிய அந்தப் புகைவண்டி நான்கு மணி நேரத்துக்கு மேல் தாமதமாக வந்திருந்தது. புகைவண்டி நிலையத்திலிருந்து ஒரு பெண் சேலைத் தலைப்பை இழுத்துத் தலையில் போட்டுக் கொண்டு கொட்டும் மழையில் ஓடி வந்து கொண்டிருந்தாள். யார் அவள்? என்ன அவதியோ? மழையில் ஒரு மாட்டு வண்டிகூடக் கிடைக்கவில்லையோ என்னவோ?

அவள் புகைவண்டி நிலையத்திலிருந்து வெளியே வந்ததும், எப்படியோ ஓடி மறைந்து விட்டாள்.

சொல்லழகன் வெளியே பார்த்துக் கொண்டேயிருந்தான். மின்னல் ஒன்று பளிச்சிட்டது. அந்த வெளிச்சத்தில் அந்தப் பெண் எப்படிப் போயிருப்பாள் என்று பார்த்தான். அவளைக் காணோம்!

அவன் திரையை மூடிவிட்டுக் கைக்கடிகாரத்தைப் பார்த்தான்.

மணி 11-15.

மீண்டும் அவன் புத்தகத்தை எடுத்தான். படிக்கத் தொடங்கினான். ஒரு பக்கம் தான் புரட்டிப் படித்திருப்பான்.

வெளியே -

ஏதோ ஓசை கேட்டது. நான்கைந்து பேர்கள் உரக்கக் கத்துவதும், இங்கும் அங்கும் ஓடுவதும் அவனுக்கு நன்றாகக் கேட்டது. மீண்டும் அவன் எழுந்து சன்னல் திரையை விலக்கிவிட்டு எட்டிப் பார்த்தான்.

அவனுடைய பங்களாத் தோட்டத்தில் அவன் எண்ணியபடியே நான்கைந்து பேர்கள் இங்கும் அங்கும் ஓடுவதும் மின்பொறி விளக்குகளை அடித்துத் தேடுவதுமாக இருந்தார்கள். செடிகளின் மறைவுகளிலும், சுவர்களின் ஓரங்களிலும் அவர்கள் பார்த்தார்கள்.

"எங்கேயும் காணோமே!" என்றான் ஒருவன்.


"அதற்குள் எப்படி மறைந்திருக்க முடியும்?" என்றான் மற்றொருவன்.

எல்லாரும் இங்கும் அங்கும் ஓடினார்கள். விழித்தார்கள்.

மழைக்காக நீண்ட கோட்டும், இரப்பர் நடையன்களும் அணிந்திருந்த ஒரு மனிதர், "பங்களாவுக்குள் போயிருந்தாலும் போயிருப்பாள். கதவைத் தட்டுங்கள்" என்றார். அவர் குரலில் அழுத்தம் இருந்தது. உறுதி தெரிந்தது.

புகைவண்டி நிலையத்திலிருந்து மழையில் நனைந்தபடி ஓடிவந்த அந்தப் பெண்ணின் நினைவு வந்தது, சொல்லழகனுக்கு. அவன் திரையை மூடிவிட்டு, படிக்கும் அறையிலிருந்து கூடத்துக்கு வந்தான். அவன் வெளிக்கதவைத் திறக்க வருவதற்குள், படபடவென்று கதவை ஒருவன் தட்டினான்.

சொல்லழகன் மெல்ல நடந்து சென்று கதவைத் திறந்தான். வெளியே நின்றிருந்த அத்தனை பேர்களும் உள்ளே வந்தார்கள். அவர்கள் உள்ளே நுழைந்ததும், அவர்கள் மீதிருந்து வழிந்த மழைத் தண்ணீர் தரையை நனைத்தது.

கோட்டுப் போட்டவர், சொல்லழகனைப் பார்த்தார். "மன்னிக்க வேண்டும். புகைவண்டியிலிருந்து ஒரு பெண் இறங்கி ஓடி வந்துவிட்டாள். இந்தப் பக்கமாகத்தான் வந்தாள். தோட்டத்தில் காணோம். உள்ளே வந்து ஒளிந்திருப்பாளோ என்று எண்ணி கதவைத் தட்டினோம்" என்றார்.

சொல்லழகன் அவரை விளக்கு வெளிச்சத்தில் பார்த்தான். நாற்பத்தைந்து வயது இருக்கும் அவருக்கு. நல்ல உயரம். எடுப்பான தோற்றம். மேலுதட்டில் பென்சிலால் வரையப்பட்டதைப் போன்ற மெல்லிய மீசை. அவர் கண்கள் பங்களாக் கூடத்தை ஆராய்ந்தன. அவருடன் வந்த நான்கு பேர்களும் மேலும் உள்ளே போய்த் தேடலாமா வேண்டாமா என்று சிந்தனை செய்தபடி நின்றார்கள்.

"இங்கே எவரும் வரவில்லையே! பங்களாவில் கதவை நான் தாழிட்டு வைத்திருந்தேன். ஆகையால் என்னை அறியாமல் எவரும் உள்ளே வர முடியாது" என்றான் சொல்லழகன்.

"பின்பக்க வழியாக வந்திருக்கலாமல்லவா?" என்றார் அந்தக் கோட்டுக்காரர்.

"பின்பக்கமும் கதவு தாழிடப்பட்டிருக்கிறது. தோட்டத்து வீட்டில் பணியாட்கள் தூங்குகிறார்கள். பங்களாவில் இப்போது என்னைத் தவிர வேறு எவரும் இல்லை. உள்ளே எவரும் வந்திருக்க முடியாது!" என்றான் சொல்லழகன்.

"எதற்கும் ஒரு தடவை உள்ளே நீங்கள் பார்த்து விடுங்கள்" என்றார் கோட்டுக்காரர்.

"எவ்வளவு பெரிய பெண்?" என்று கேட்டான் சொல்லழகன்.

"பதினெட்டு வயதுப் பெண். பார்த்தால் அழகாக இருப்பாள். படித்த பெண்தான். ஆனால் அவளுக்கு அண்மையில் மூளைக்கோளாறு ஏற்பட்டுவிட்டது!"

"என்ன?"

"ஆமாம். மூளைக் கோளாறுதான். காட்பாடியிலிருந்து சென்னைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை தரலாம். அப்போதாவது குணமாகாதா என்று எண்ணி அவளை அழைத்துச் சென்றேன். நானும் அவளும் புகைவண்டியின் முதல் வகுப்புப் பெட்டியில் இருந்தோம். இவர்கள் எல்லாம் மூன்றாம் வகுப்புப் பெட்டியில் இருந்தார்கள். எல்லோருமே சிறிது அயர்ந்து தூங்கிவிட்டோம். மாலை சரியான நேரத்துக்கு காட்பாடிக்கு வந்த புகைவண்டி இங்கு வர இவ்வளவு நேரம் பிடித்தால் தூங்காமல் என்ன செய்வது?" என்றார் கோட்டுக்காரர்.

"காட்பாடியில் எனக்குத் தெரிந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அந்தப் பெண் உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டான் சொல்லழகன்.

"அவள் என்னுடைய மகள். சொந்த மகளல்ல, அண்ணன் மகள்தான். ஆனாலும் இப்போது எனக்கு அவள் சொந்த மகளைப் போலத்தான். என்னுடைய அண்ணன் இரண்டு திங்களுக்கு முன்பு ஒரு கார் விபத்தில் இறந்து விட்டார். அந்தக் கவலையில்தான் இவளுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது"

"பைத்தியமா?" என்று வியப்புடன் கேட்டான் சொல்லழகன்.

"ஆமாம். வேலூர் மருத்துவ விடுதியில் அவளைக் குணப்படுத்த இயலவில்லை. சென்னைக்கு அழைத்துச் சென்று பெரிய டாக்டர்களிடம் சிகிச்சை கொடுக்கலாம் என்று எண்ணினேன்."

சொல்லழகன் சிந்தனையில் ஆழ்ந்தான். பிறகு "உள்ளே வந்து உட்காருங்களேன்." என்றான் எல்லோரையும் பார்த்து.

"உட்கார நேரமில்லை. அந்தப் பெண்ணைக் கண்டுபிடித்தாக வேண்டும். அவளை விட்டு வைப்பது ஆபத்து!" என்றார் கோட்டுக்காரர்.

"ஆபத்தா, ஏன்?" என்று புரியாமல் கேட்டான் சொல்லழகன்.

கோட்டுக்காரர் திரும்பி மற்றவர்களைப் பார்த்து, "தோட்டத்தின் பின்புறம் மற்ற இடங்களிலும் தேடிப் பாருங்கள்!" என்று சொல்லி அனுப்பிவிட்டுக் கூடத்தை அடைந்தார். மழையில் நனைந்திருந்த கோட்டைக் கழற்றி ஒரு நாற்காலியின் மீது போட்டுவிட்டு, மற்றொரு நாற்காலியில் உட்கார்ந்தார்.

சொல்லழகன்
அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். "மலர்விழியின் மேல் குற்றம் சொல்லிப் பயனில்லை’ என்றார் அவர்.

"மலர்விழியா, யார் அது?" என்றான் சொல்லழகன்.

"அவள்தான் என் மகள். இப்போது நாங்கள் தேடிவந்த பெண். என்னிடம் பணமிருந்தும் பயன் என்ன? அவளுடைய மூளைக் கோளாறைச் சரி செய்ய எவராலும் முடியவில்லையே. இரண்டு நாள்களுக்கு முன்பு நான் தூங்கிக் கொண்டிருந்தபோது, என்னை அவள் கொலை செய்ய வந்தாள்!"

சொல்லழகனுக்கு தூக்கிவாரிப் போட்டது!

"உங்களை, மலர்விழி கொலை செய்ய வந்தாளா?" என்று வாய்விட்டுக் கேட்டான்.

"ஆமாம். நீங்கள் நம்ப மாட்டீர்கள். இந்த உலகத்தில் இப்போது அவளுக்கு என்னைத் தவிர வேறு எவருமே இல்லை. எனக்கும் அவளைத் தவிர வேறு எவரும் கிடையாது. இருந்தும் மன அமைதி இல்லாமல் இருக்கிறேன். கண்களை இழந்தவன் போல் இருக்கிறேன். எங்களுக்கு இருக்கும் சொத்துக்களுக்கு வாரிசு வேண்டாமா? மலர்விழி இப்படி மாறுவாள் என்று கனவிலும் கருதவில்லை"

"அவள் ஏன் உங்களைக் கொலை செய்ய வேண்டும்?"

"அவளுக்கே தெரியாது! ஆம். அவள் என்ன செய்கிறாள் என்பது அவளுக்கே தெரியாது. அதுதான் மூளைக் கோளாறு. இரண்டு நாள்களுக்கு முன், தூங்கிக் கொண்டிருந்த நான் ஏதோ ஓசை கேட்டுக் கண்களை விழித்துப் பார்த்தேன். இருட்டில், கையில் கத்தியுடன் அச்சம் தரும் வகையில் மலர்விழி என் கட்டிலுக்கு அருகில் வந்து விட்டாள்! நான் கூச்சல் போட்டதும் கத்தியைப் போட்டுவிட்டு, அழத் தொடங்கிவிட்டாள் ஐயா, அழத் தொடங்கிவிட்டாள்."

"அதுதான் தொடக்கமா?" என்று கேட்டான் சொல்லழகன்.

"இல்லை" என்று சொல்லிவிட்டுக் கைக்குட்டையால் முகத்தை மெல்லத் துடைத்துக் கொண்டார் கோட்டுக்காரர்.

"மூளைக் கோளாறு எப்போது முதல்?" என்று கேட்டான் சொல்லழகன்.

"விபத்து நடந்த அன்றே அது தொடங்கி விட்டது. மலர்விழியும் அந்தக் காரில் சென்றிருக்கிறாள். காரை என் அண்ணன் பழனிமலையே ஓட்டிச் சென்றார். விரைவாகக் கார் செலுத்துவதில் தேர்ந்தவர். ஆனால் அன்று ஏற்பட்ட அந்த விபத்தை விதி என்றுதான் சொல்ல வேண்டும். பழனிமலை ஓட்டிச் சென்ற கார் ஒரு விளக்குக் கம்பத்தின் மீது மோதிவிட்டது. ஆனால் அதை எவரும் நம்பவில்லை. நானும் நம்பவில்லை. பழனிமலை அதே இடத்தில் இறந்து விட்டார். மலர்விழி அதிர்ச்சியால் மயங்கி விழுந்து கிடந்தாள். கார் விபத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியால் ஒரு மாதிரி ஆகிவிட்டாள் என்று எண்ணினேன். அவளுக்கு உடலில் காயம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் அதிர்ச்சியினால் அவளுக்கு மூளைக் கோளாறு ஏற்பட்டு விட்டது."

"சொல்லுங்கள். பழனிமலை என்பவரைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். மணிலாக் கொட்டை ஏற்றுமதித் தொழிலில் பெரும் பணம் தேடியவர் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். எப்போதோ எங்கோ பார்த்ததாகக் கூட நினைவு!"

"அதே பழனிமலைதான். இப்போது எல்லாப் பொறுப்புகளும் என் தலைமீது விழுந்துவிட்டன. தந்தையை இழந்துவிட்ட அதிர்ச்சியில் நல்ல மனநிலையில் அவள் இல்லை என்று அடிக்கடி அவளைப் பேசும்படத்திற்கும், கடற்கரைக்கும், விருந்துகளுக்கும் அழைத்துச் சென்றேன். எங்கேயாவது திருமணம் நடந்தால் நான் போகும்போதெல்லாம் மலர்விழியையும் அழைத்துச் செல்லுவேன். சில நாள்களுக்குப் பிறகு அவள் அறையில் சில பொருள்களைக் கண்டதும் என் கண்களையே நம்ப முடியவில்லை!"

"என்ன அவை?" என்று ஆவலுடன் கேட்டான் சொல்லழகன்.

"ஒரு வெள்ளி டம்ளர், புதிய நடையன்களுள் ஒன்று, கண்ணாடிக் கோப்பை, ரிப்பன் முதலியன."

சொல்லழகன் ஒன்றுமே புரியாமல் விழித்தான்.

"போகுமிடங்களிலிருந்து எதையாவது ஒன்றை எடுத்துக் கைப்பையில் போட்டுக் கொண்டு வந்துவிடுவாள். எனக்கு இது தெரியவே தெரியாது. ஒருநாள் எல்லாவற்றையும் இவள் அறையில் பார்த்ததும்தான் புரிந்தது. நான் கேட்டால் அவை எப்படித் தன் அறைக்கு வந்தன என்பதே தெரியாது என்று சொல்லிவிட்டாள். நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?"

"மலர்விழியின் மீது இரக்கமாக இருக்கிறது. அதைவிட உங்களைப் பார்த்தால் மிகவும் இரக்கமாக இருக்கிறது."

"என்மீது நீங்கள் இரக்கப்பட்டுப் பயனில்லை. அது என் தலைவிதி. எப்போதும் விதியில் நம்பிக்கை இல்லாதவன் நான். என் அண்ணன் ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானதும் என்னையும் அறியாமல் விதியின்மேல் எனக்கு நம்பிக்கை பிறந்து விட்டது."

"பழியைப் போட ஏதாவது ஒன்று வேண்டுமல்லவா? உங்கள் பெயரைச் சொல்லவேயில்லையே" என்றூ கேட்டான் சொல்லழகன்.

"நாகமாணிக்கம்" என்றார் அவர். பிறகு "இன்னும் அவர்களைக் காணோமே" என்றார்.

"வந்து விடுவார்கள். இப்போது நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?" என்றான் சொல்லழகன்.

புகைவண்டி நிலையத்திலேயே மீண்டும் தேடிப் பார்க்கிறேன். வேறு பெட்டியில் ஏறிக் கொண்டிருப்பாளா? புகைவண்டி புறப்படும் நேரமாகி விட்டதே!" என்று சொல்லிக் கொண்டே நாகமாணிக்கம் எழுந்தார்.

மலர்விழியைத் தேடிச் சென்றவர்கள் ஏமாற்றத்துடன் அயர்ந்து திரும்பி வந்தார்கள்.

"எங்கேயும் காணோம். நடந்து சென்ற சுவடுகளும் தெரியவில்லை. மழையில் கரைந்து விட்டிருக்கிறது" என்றான் ஒருவன்.

"புகைவண்டி நிலையத்திலிருந்து ஒரு பெண் வெளியே வந்ததைப் பார்த்தேன். பிறகு அவள் எப்படி மறைந்தாள் என்று தெரியவில்லை. ஆகையால் அவள் மழையில் எங்கே ஓடுவது என்று தெரியாமல் மீண்டும் புகைவண்டியிலேயே வேறு பெட்டியில் ஏறிக் கொண்டிருக்கலாம் அல்லவா?" என்றான் சொல்லழகன்.

"நாங்கள் புகைவண்டியிலேயே போய்ப் பார்க்கிறோம். அவளை ஒருவேளை நீங்கள் கண்டால் எப்படியாவது என்னுடன் தொடர்பு கொண்டு என்னிடம் சேர்த்து விடுங்கள். உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன்," என்றார் நாகமாணிக்கம்.

"பணம் பெரிதல்ல. மலர்விழியைக் கண்டால் எப்படியும் உங்களுடன் தொடர்பு கொள்கிறேன்" என்றான் சொல்லழகன். எல்லோரும் திரும்பி புகைவண்டி நிலையத்தை நோக்கிச் சென்றார்கள்.

சொல்லழகன் வெளிக்கதவைத் தாளிட்டான். திரும்பினான். மெல்ல நடந்தான்.

அவன் இப்போது பங்களாவில் தனியாக இருப்பது அச்சம் தருவதைப் போலிருந்தது. எல்லாவற்றிற்கும் மனநிலைதான் காரணம் என்பதை அவன் அறிவான். நாகமாணிக்கம் மலர்விழியைப் பற்றிச் சொன்னதும் அவள் இங்கே எங்கேயாவது இருப்பாளோ, அவளால் ஏதாவது ஆபத்து நேருமோ என்ற அச்சம் எவருக்கும் எழும். சூழ்நிலைதான் அதற்குக் காரணம். அவர்கள் போன பிறகுதான் தனிமையில் அந்த அச்சத்தை அவன் உணர்ந்தான்.

அப்போது -

ஏதோ அரவம் கேட்டது.

அந்த அரவம் மாடி மீதிருந்துதான் கேட்டது. அவன் மாடியை நோக்கிச் சென்றான். மாடிப்படிகளில் ஒன்றுமில்லை. கூடத்திலும் ஒன்றுமில்லை. மாடியின் மீது கூடத்துக்கு அப்பால் இருந்த அறைக்குள் சென்றான். அங்கே நாற்காலி ஒன்று உருண்டு கிடந்தது. அந்த அறையின் சன்னல் திறந்து கிடந்தது.... அவன் சன்னல் பக்கம் பார்த்தான். தொலைவில்....

புகைவண்டி நிலையத்தை நெருங்கி விட்டிருந்தார்கள் நாக மாணிக்கமும் அவருடன் வந்தவர்களும்.

சொல்லழகன் சன்னல் பக்கமாகத் தலையை நீட்டி, நாகமாணிக்கத்தைக் கைதட்டி அழைக்க மெல்லக் கைகளை உயர்த்தினான்.

அப்போது-

அவன் மண்டையின் மீது ஓர் அடி விழுந்தது.

செத்தோம் என்று எண்ணியபடி கீழே விழுந்தான் சொல்லழகன். ஆனால் நினைவு முழுவதையும் அவன் இழந்து விடவில்லை.

எவரோ நடந்து செல்வது போல் இருந்தது. நீர்த்துளிகள் முகத்தில் தெறித்தன.

அவன் வலி தாளாமல் புரண்டான். முகத்தில் விழுந்த நீர்த்துளிகள் அரைகுறையாக இருந்த அவன் மயக்கத்தைப் போக்கடித்தன.

புகைவண்டி ஒரு தடவை ஊதிவிட்டுப் புறப்படும் ஓசை கேட்டது.

சொல்லழகன் மெல்ல எழுந்து உட்கார்ந்து பார்த்தான். அவன் எதிரே -

வாயிற்படியை மறைத்துக் கொண்டு அவனையே அச்சம் தரும் வகையில் பார்த்துக்கொண்டு நின்றாள் அந்தப் பெண்!

தமிழ்வாணன்

© TamilOnline.com