தென்றல் பேசுகிறது...
'மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் அரசாங்கம்' என்ற ஜனநாயகத்தைப் பற்றிய வர்ணனை மிகப் பிரபலமானது. ஆனால், உலகெங்கிலும் பார்க்கும்போது, அரசியல்வாதிகளால் அரசியல்வாதிகளுக்காக அரசியல்வாதிகளே நடத்திக்கொள்ளும் அரசாங்கங்கள்தான் கண்ணில் படுகின்றன. அதுவும் தேர்தல் அருகில் வரவர கட்சி அரசியலின் தீவிரம் மக்கள் நலத்தைக் கருத்தில் கொள்ளாததாக, 'நான் செய்வதுதான் சரி' என்று மார் தட்டுவதாக இருக்கிறது. முன்னோடி ஜனநாயக நாடான அமெரிக்காவில் நடப்பதும் இதற்கு விதிவிலக்கல்ல. இப்படி நாம் சொல்லக் காரணம் உள்ளது.

உலகமே பொருளாதாரச் சிக்கலில் மாட்டிக்கொண்டு விழி பிதுங்குகிறது. 'தி கிரேட் டிப்ரஷன்' என்றழைக்கப்படும் சிம்மசொப்பனத்தின் நுழைவாயிலில் நிற்கிறோமோ என்று கூட அஞ்ச வேண்டியிருக்கிறது. அப்படி நேர்கையில் முதலில் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட வேண்டியவர்கள் ஏழை, எளியவர்கள்தாம். அதற்கான நிதியை அரசாங்கம் பெறுவதற்கான வழி சிலரிடம் இருக்கும் மிதமிஞ்சிய செல்வத்தை மறுவினியோகம் செய்வதன் மூலம்தான். ஒபாமா அரசின் மருத்துவ கவனச் சட்டம், உயர்நிலைச் செல்வந்தர்களுக்கு வரிச்சலுகைகளைக் குறைத்தல் போன்றவை இந்தத் திறக்கு நோக்கியே செல்பவை. அதனாலேயே வரவேற்கத்தக்கவையும் கூட. ஆனால், குடியரசுக் கட்சியினர் நிரம்பிக்கிடக்கும் காங்கிரஸோ, ஒபாமா எது செய்தாலும் - அதன் காரண காரியங்களைப் பார்க்காமல் - எதிர்ப்பதாகக் கங்கணம் கட்டிக்கொண்டு செய்துவருகிறார்கள். இதுவரையில் அவர்களது அங்கீகார விகிதம் (approval rating) பத்துமுதல் பன்னிரண்டு சதவீதமே என்பதிலிருந்தே இது தெரியவரும். இதனால் வரவிருக்கும் தேர்தலில் அரசியல் லாபம் கிடைக்கும் என்று அவர்கள் மனப்பால் குடிக்கிறார்கள். சிந்திக்கத் தெரிந்த ஒவ்வொரு அமெரிக்கரும் இந்த நோய்வாய்ப்பட்ட மனநிலையைப் புரிந்துகொண்டு, நாட்டின் மறுமலர்ச்சிக்கும், வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புப் பெருக்கத்துக்கும் உதவும் ஒபாமாவின் கொள்கைகளின் நியாயத்தைப் புரிந்துகொண்டு, சரியான நேரத்தில் தமது ஆதரவைத் தருவது இரண்டு வகையில் நல்லது. ஒன்று, மக்களாட்சியைச் சுயநலத்துக்காகக் கடத்திக்கொண்டு போய்விட அமெரிக்கர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பதைப் புரியவைக்கும்; இரண்டு, என் கட்சி, உன் கட்சி என்பதைவிட நாட்டு நலனுக்கே முதலிடம் என்றெண்ணுகிற அறிவுபூர்வமான மக்களைக் கொண்ட நாடு அமெரிக்கா என்பதை உலகுக்குப் புரியவைக்கும்.

*****


இருண்ட மேகக் கூட்டத்தில் வெள்ளிக் கீற்று என்று சொல்லப் போனால், அது அண்மையில் நடந்த ஒலிம்பிக்ஸில் அமெரிக்க விளையாட்டு வீரர்கள் எந்த நாட்டையும் விட அதிகமாக வென்று குவித்த பதக்கங்கள்தாம். உழைப்பு, சாதனை, புத்தாக்கம் என்ற சொற்களுக்கு இன்னமும் அமெரிக்கா தாயகமாக இருக்கிறது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது இது. இந்தச் சாதனைக்குள் பொதிந்திருக்கும் மற்றொரு உண்மை என்னவென்றால், பதக்கம் வென்றவர்களில் பெரும்பான்மையோர் பெண்கள் என்பதுதான். இனம், மதம், பாலினம், நிறம், மொழி போன்ற வேற்றுமைகளைக் கடந்து, முன்னேறத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் சமவாய்ப்பைத் தருவதிலேயே ஒரு நாட்டின் முன்னேற்றம் இருக்கிறது என்ற உண்மையை மீண்டும் கோடிட்டுக் காட்டியுள்ள ஒரு தேசத்தில் நான் வசிக்கிறேன் என்று ஒவ்வொரு அமெரிக்கரும் பெருமைப்படலாம். ஆனால், அந்தச் சமத்துவத்தை மதிப்பதும், அதைத் தக்கவைக்க உழைப்பதுமே அந்தப் பெருமையைத் தக்கவைத்துக் கொள்வதற்கான விலை என்பதை மறந்துவிடக் கூடாது.

*****


ஒரு நல்ல கவிஞராக சுஜாதாவால் உலகுக்கு அறியத் தரப்பட்டு, ஒரு நல்ல இலக்கிய இதழின் ஆசிரியராக, நல்ல நூல்களின் பதிப்பாளராக உயரங்களை எட்டியிருக்கும் மனுஷ்யபுத்திரனின் நேர்காணல் தென்றலின் மகுடத்தில் மற்றுமொரு சிறகு. இளமையும் திறமையும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற கர்நாடக இசைக்கலைஞர், சினிமாப் பாடகர் மகதியின் விறுவிறுப்பான மினிநேர்காணல் வாசக உள்ளத்துக்கு மொறுமொறுப்பான தீனி. ஃப்ரீமாண்ட் நகரவையின் மேயர் பதவிக்குப் போட்டியிடும் அனு நடராஜன் அந்த நகரத்தைப் பற்றியும், அதன் மேம்பாட்டுக்குத் தம்மால் என்ன செய்யமுடியும் என்பதையும் கோடிட்டுக் காட்டுகிறார் தமது உரையாடலில். திகட்டாத சிறுகதைகள், தெறிப்பான கவிதைகள் என்று தென்றல் உருவாகியுள்ளது, உங்களுக்காகவே!

வாசகர்களுக்கு விநாயக சதுர்த்தி மற்றும் விழாக்கால நல்வாழ்த்துக்கள்.


செப்டம்பர் 2012

© TamilOnline.com