ஜூன் 9, 2012 அன்று ஸ்ரீ லலிதகான வித்யாலயா நிறுவனர் குரு லதா ஸ்ரீராமின் சிஷ்யை சஹானா ராஜனின் இசை அரங்கேற்றம் அமேடார் தியேட்டர், பிளசண்டனில் நடைபெற்றது. நாட்டைகுறிஞ்சி ராகத்தில் அமைந்த சலமேலவுடன் நிகழ்ச்சி துவங்கியது. பெயருக்கேற்ப சஹானாவில் ராக ஆலாபனையும், கல்பனா ஸ்வரமும் நிறைவாக இருந்தன. தொடர்ந்து ஷண்முகப்ரியாவில் தீக்ஷிதரின் 'மஹாசுரம்' க்ருதியின் ஆலாபனையும் கல்பனா ஸ்வரமும் விறுவிறுப்பு. கதனகுதூகல ராகத்தில் பாடிய 'ரகுவம்ச சுதா', ராஜனின் வீணையுடன் சேர்ந்து ஜொலித்தது. தர்பாரி கானடா ராக மீரா பஜன், த்விஜாவந்தியில் 'அகிலாண்டேஸ்வரி' ஆகியவற்றை சஹானா மனமுருகிப் பாடினார். பக்கம் வாசித்த சுசீலா நரசிம்மன் (வயலின்), ரவீந்திரபாரதி ஸ்ரீதரன் (மிருதங்கம்) இருவரும் மிகவும் அனுசரணையாக இருந்தனர். சஹானாவின் திறமை அறிந்து, அதற்கேற்ப இசை பயிற்றுவித்து அரங்கேற்றம் செய்வித்த பெருமை குரு லதா ஸ்ரீராமையே சாரும்.
கௌசல்யா, பிளசண்டன் , கலிஃபோர்னியா |