ப்ரியா சூரி: நாட்டிய அரங்கேற்றம்
ஜூன் 30, 2012 அன்று கிரீன்ஃபீல்ட் மேல்நிலைப் பள்ளிக் கலையரங்கத்தில் ப்ரியா சூரியின் நாட்டிய அரங்கேற்றம் நிகழ்ந்தது. ப்ரியா, நாட்டியார்ப்பணா நிறுவன இயக்குநர் குருகிருபா பாஸ்கரின் மாணவி. புஷ்பாஞ்சலியுடன் நிகழ்ச்சி தொடங்கியது. ராகமாலிகையில் மிஸ்ர அலாரிப்பும் குருவந்தனமும் சமர்ப்பித்தார். தொடர்ந்த ஆதிசங்கரரின் ராஜராஜேஸ்வரி அஷ்டகம் அருமை. ரீதிகௌளையில் அமைந்த 'ஸ்ரீ கிருஷ்ண கமலநாதோ' மற்றும் நாச்சியார் திருமொழியான 'வாரணமாயிரம்' இரண்டும் மிகவும் சிறப்பாக இருந்தன. இடைவேளையில் நடந்த சிவாசூரியின் ட்ரம்ஸ் ஃப்யூஷன் அட்டகாசம். அடுத்து, குந்தலவராளியில் அமைந்த 'கால் மாறி ஆடிய கனக சபேசன்' பதத்தைக் காணக் கண் கோடி வேண்டும். மீரா பஜன், தீராத விளையாட்டுப் பிள்ளை, தில்லானா என அனைத்துமே அபாரமாக இருந்தன. இந்தியாவிலிருந்து வந்திருந்த விதூஷி தீப்தி ஸ்ரீநாத் (வாய்ப்பாட்டு), எஸ்.வி. பாலகிருஷ்ணா (மிருதங்கம்), ரகுநாதன் (புல்லாங்குழல்), மாஸ்டர் அர்ச்சித் பாஸ்கர் (கீ-போர்ட்) என எல்லோருமே நாட்டியத்துக்கு வலுச் சேர்த்தனர். நட்டுவாங்கமும், பாட்டும், உடுக்கையும், ருத்ரமும் சேர்ந்து நிகழ்ச்சியை மேலும் சோபிக்கச் செய்தன. அற்புதமான ஆடலமைப்பு. நன்றி உரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

மேலும் விவரங்களுக்கு: www.natyarpana.com

லலிதா வெங்கட்ராமன்,
மில்வாக்கி, விஸ்கான்சின்

© TamilOnline.com