ஜூலை 7, 2012 அன்று, தென் கலிஃபோர்னியாவில் பூர்ணா வேணுகோபாலனின் பரத நாட்டிய அரங்கேற்றம் நடந்தேறியது. பூர்ணாவின் குரு, நாட்டியாஞ்சலி ஸ்கூல் ஆஃப் டான்ஸை நிறுவிய டாக்டர். மாலினி கிருஷ்ணமூர்த்தி. புஷ்பாஞ்சலி, வர்ணம், நிறையத் தமிழ் பாடல்கள் கொண்டதாக இருந்தது நிகழ்ச்சி. இதன் மணிமகுடம் சிலப்பதிகாரக் காவியத்தை ஒருவராகவே ஆடி, கோவலனையும், கண்ணகியையும், மாதவியையும், பாண்டிய மன்னனையும் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியதுதான். 'ஆடிக்கொண்டார்' பாடலுக்குக் கண்ணப்ப நாயனாராகக் கண்ணை எடுத்து லிங்கத் திருமேனியில் வைக்கும் கட்டத்தில் பூர்ணாவின் அபிநயத்தில் பலர் கண்கள் கசிவதை உணர்ந்தேன்.
டாக்டர். மாலினி எப்போதுமே தனித்துவத்தோடு நடனம் அமைப்பதில் வல்லவர். அது இந்த அரங்கேற்றத்திலும் தெரிந்தது. பாடல்களுக்கு இடையே அழகான ஸ்லைடுகளைத் திரையிட்டு, வரப்போகும் பாடலின் கதையை மாலினி ஆங்கிலத்தில் விளக்கியதும், பூர்ணா மூன்று வயதிலிருந்து ஆடியவற்றைக் காட்டியதும் மிக நன்றாக இருந்தது. குரு மாலினி (நட்டுவாங்கம்), கே.எஸ். பாலகிருஷ்ணன் (வாய்ப்பாட்டு), வி. கணேசன் (மிருதங்கம், தபலா), சி.வி. சுதாகரன் (புல்லாங்குழல்) பக்கவாத்தியங்களுடன் மூன்றரை மணி நேரம் ரசிகர்களைக் கட்டிப் போட்டார் பூர்ணா. இவர் வருகிற செப்டம்பர் மாதம் யூனிவர்சிடி ஆஃப் லவெர்னில் சேரப் போகிறார் என்பது உபரித் தகவல்.
கீதா பென்னெட், தென் கலிஃபோர்னியா |