ஜூலை 7, 2012 அன்று, அபூர்வா குமாரின் பரதநாட்டிய அரங்கேற்றம் மாசசூஸட்ஸில் உள்ள லிட்டில்டன் உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. கலைமாமணி இராசரத்தினம் பிள்ளையிடம் பயின்ற ஜோதி ராகவன் இவரது குரு. நிருத்யாஞ்சலி நடனப் பள்ளியின் தலைவரும் உரிமையாளருமான ஜோதி ராகவன் ஆடல் கலைக்கான பெரு மதிப்புடைய விருதை National Endowment of Arts அமைப்பிலிருந்து பெற்றுள்ளார். இவர் இந்திய நிகழ்கலை அகாதமியின் தலைவரும் ஆவர். பன்னிரண்டு வருடங்களாக இவரிடம் அபூர்வா இக்கலையைப் பயில்கிறார்.
தோடய மங்களத்துடன் நிகழ்ச்சி ஆரம்பித்தது. தொடர்ந்து, அலாரிப்பு, ஜதிஸ்வரத்தில் அபூர்வா அழகாக ஆடினார். 'நாதனை அழைத்து வா சகியே' என்ற காம்போதி ராக வர்ணத்தில், பிரிவுத் துயரத்தைத் தனது அபிநயத்தால் அள்ளித் தந்தார். அன்னமாசார்யாவின் 'பாவயாமி கோபால பாலம்' கீர்த்தனத்தில் கோபாலன்மீது கொண்ட தெய்வீகக் காதலை வெளிப்படுத்திய விதம் நெஞ்சைத் தொட்டது. காவடிச் சிந்து, ஜாவளியைத் தொடர்ந்து கல்யாணவசந்தத்தில் பாரதியாரின் 'காக்கைச் சிறகினிலே நந்தலாலா' பாட்டுக்குத் தில்லானா சிறப்பாக ஆடினார். ஜோதி ராகவன் (நட்டுவாங்கம்), ஸ்ரீகாந்த் கோபாலகிருஷ்ணன் (வாய்ப்பாட்டு), நாராயணசாமி (மிருதங்கம்), ரேவதி ராமசுவாமி (வீணை), ப்ரயுத் நாடுதொட்டா (புல்லாங்குழல்) சிறப்பான பக்கமாக அமைந்தன. அபூர்வா தனது நன்றியுரையில் குருவினால்தான் இந்தக் கடின உழைப்பும் ஈடுபாடும் தனக்கு வந்ததாக கூறினார்.
ஸ்ரீவித்யா பாலசந்தர் |