அன்பே வடிவமாக...
அன்புள்ள சிநேகிதியே,

இது பெரிய கதை. சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன். என் அக்காவுக்கும் எனக்கும் 20 வயது வித்தியாசம் இருக்கும். அக்கா, என் அப்பாவின் முதல் மனைவியின் மகள். அவர்கள் இறந்த பிறகு, என் அம்மாவைத் திருமணம் செய்து கொண்டார். இரண்டு அண்ணன்களும் நானும் பிறந்தோம். எனக்கு 5 வயது இருக்கும் போது அக்கா மேற்படிப்புக்கு அமெரிக்கா சென்றாள். அக்கா என்னிடம் ரொம்பப் பாசமாக இருப்பாள். நான் அப்போதே அவள் பிரிவை வலுவாக உணர்ந்தேன். திரும்பி வரும் நாளுக்காகக் கடவுளை பிரார்த்திப்பேன். ஆனால் 3 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்காவிலேயே யாரையோ (வேறு மதத்தவர்) கல்யாணம் செய்து கொண்டு விட்டாள் என்று வீட்டில் பெரிய தகராறு. எனக்குத் தெரிந்தும் தெரியாத நிலை. அண்ணன்மார்கள் இருவரும் அப்பாவுடன் சேர்ந்து கொதித்து எழுந்தார்கள். என் அம்மா ஒன்றும் பேசவில்லை. அப்பா கோபக்காரர். அக்காவைப் பற்றி இனிமேல் யாரும் பேசக்கூடாது, யாருக்கும் கல்யாணத்தைப் பற்றித் தெரிவிக்கக் கூடாது என்று வீட்டில் உத்தரவு. நான் வாயை மூடிக் கொண்டிருந் தாலும் என் அக்காவின் அழகு முகம் என் கண்முன்னால் வந்து கொண்டே இருக்கும். எதிர்த்துப் பேசக்கூடத் தெரியாத அவள் எப்படி மாறிப் போனாள் என்று அடிக்கடி நினைத்துக் கொள்வேன்.

போன 25 வருடத்தில் அக்கா 2, 3 தடவைதான் இந்தியா வந்திருப்பாள். அப்போதும் தனியாகத்தான் வருவாள். ஒரு நாள்கூட முழுதாகத் தங்கமாட்டாள். என்னால் தனித்து அவளுடன் பேசச் சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை. ஏதோ வேற்று மனிதர் விருந்துக்கு வந்து விட்டதைப் போன்ற உணர்வு. நான்கு வருடங்களுக்கு முன்னால் தான் வாய்ப்புக் கிடைத்தது. எனக்கு அப்போது திருமணம் நிச்சயம் ஆகி இருந்தது. என் கணவர் தொழில் சம்பந்தமாக அமெரிக்கா வரக்கூடிய வாய்ப்புகளைப் பற்றிச் சொன்னேன். மிகவும் சந்தோஷப்பட்டாள். அப்போது தன்னுடைய மின்னஞ்சல் முகவரி, போன் நம்பர் எல்லாம் கொடுத்தாள். தனது இரண்டு மகன்களைப் பற்றிப் பேசினாள். கணவரைப் பற்றி அதிகம் பேசவில்லை. எனக்கு எவ்வளவோ கேட்க வேண்டும் என்ற ஆசை. ஆனால், மனதில் ஒரு சங்கடம்; நேரமின்மை வேறு காரணம்.

என் திருமணம் முடிந்து, ஜெர்மனியில் 2 ஆண்டுகள் இருந்தோம். இப்போது அமெரிக்காவுக்கு வந்து ஒரு வருடத்துக்கு மேல் ஆகிறது. வந்தவுடன் அக்காவுடன் பேச, இருக்க நிறையச் சந்தர்ப்பம் கிடைக்கும் என்று ஆவலாக இருந்தேன். ஆனால் எனக்கு பெரிய அதிர்ச்சி! எப்போது கூப்பிட்டாலும் கனிவு குரலில் இருந்தாலும், அதிக நேரம் பேசுவதில்லை. வீட்டுக்கு வரும்படியும் கூப்பிட்டதில்லை. எனக்கு இது புதிராக இருந்தது.

போகப்போகத் தெரிந்து கொண்டேன். அவளுடைய கணவர் ஒரு முரட்டு மனிதர். ஆரம்பக் காலத்தில் அக்காவைப் போட்டு அடித்திருக்கிறார் என்றும் கேள்விப்பட்டேன். எங்களுடைய தூரத்து உறவினர் கள் அவர்கள் இருக்கும் இடத்தில் தான் இருக்கிறார்கள். அக்காவைத் தவிர்த்து யாரும் அந்த மனிதரிடம் வாழ்க்கை நடத்தியிருக்க முடியாது என்று கதை கதையாகச் சொன்னார்கள். தமிழர் கூட்டங்கள், கோவில், விருந்து என்று எதற்கும் வருவதில்லை. ஆகவே அடிக்கடி பார்த்துக் கொள்ளும் சந்தர்ப்பங்களும் குறைவு என்றார்கள். நான் அக்காவின் பையன்களை கூப்பிட்டுப் பேசி பார்த்தேன். (இருவரும் கல்லூரியில் இருக்கிறார்கள்) உறவே இல்லாத காரணத்தால் அவர்கள் என்னிடம் அந்தரங்கமாகத் தங்கள் பிரச்சனைகளை பகிர்ந்து கொள்ள விரும்பியதாகத் தெரியவில்லை.

எனது சகோதரி அன்பே உருவானவள். எப்போதும் ஒரு புன்சிரிப்பு. அமெரிக்காவுக்கு ஒரு நாள் வருவேன், மறுபடியும் என் அக்காவுடன் ஒன்று சேருவேன் என்ற சிறு வயதுக் கனவெல்லாம் போய்விட்டது. ஏன் அப்படி ஒரு கெட்ட மனிதரை தேர்ந்தெடுத்தாள்? ஏன் இன்னும் அவருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்? ஒருநாள் வீட்டுக்கே சென்று (மிக தூரம்) எல்லாவற்றையும் நேரே பார்த்துவிட வேண்டும் என்ற வேகம் வருகிறது. சில சமயம் அழுகை கூட வருகிறது. நான் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் விலாசம் தெரிவித்தால் நீங்கள் தொடர்புகொண்டு உள் விஷயம் சேகரித்து எனக்கு உதவ முடியுமா? என் கணவரின் திட்டப்பணி இன்னும் 6 மாதம்தான் இருக்கும். காலநீட்டிப்பு ஆகுமா என்று தெரியவில்லை. அதற்குள் ஏதாவது நல்லது நடக்குமா என்று ஏங்குகிறேன்.

இப்படிக்கு
..................

அன்புள்ள சிநேகிதியே,

எனக்கே குழப்பமாக இருக்கிறது. இருந்தும் பல்வேறு காரணங்களால், நீங்கள் தொலைபேசி எண் தெரிவித்தாலும் நான் உங்கள் சகோதரியை அழைத்துப் பேசி, உண்மையைக் கண்டறிந்து, உங்களை ஒன்று சேர்க்கும் முயற்சி இந்த 'அன்புள்ள சிநேகிதியே'வின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது. ஆகவே இயலாமைக்கு முதலில் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் சகோதரியை நீங்கள் அன்பே வடிவமாக வருணிக்கும் போது அந்தப் பண்புதான் அவர் துணிந்து மணம் செய்து கொண்ட மனிதரைப் புரிந்து கொண்டு இத்தனை வருடங்கள் அவருடன் வாழ்க்கையை நடத்தும் மனவலிமையைக் கொடுத்திருப்பதாகத் தோன்றுகிறது.

உங்கள் பார்வையிலும், உறவினர் பார்வையிலும் அவருடைய கணவர் கெட்டவராகத் தெரிந்தாலும், உங்கள் சகோதரியின் கோணத்தில் பார்க்கும் போது அந்த மனிதருக்கு வேறு நல்ல குணங்கள் தெரிந்திருக்கலாம். அவை நமக்குத் தெரிய வாய்ப்பில்லை.

உங்களைப் போலவே உங்கள் சகோதரியும் உங்களைப் பார்ப்பதற்கு, இல்லை வீட்டிற்குக் கூப்பிடுவதற்குச் சரியான நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார் என்று தோன்றுகிறது.

உங்களுக்குள் வயது வித்தியாசம் இருக்கும் காரணத்தினாலும் பல வருடங்கள் தொடர்பு இல்லாமல் இருந்ததாலும் உங்களிடம் தன் மனத்துயரங்களைக் கொட்டி அழ முடியாமல் போயிருக்கலாம். என் கணிப்பின் படி அவர் சுபாவத்திலேயே தன் பிரச்சனைகளைத் தானே புன்னகையுடன் சந்தித்துச் சமாளிப்பவர்; மனிதர்களை அப்படியே ஏற்றுக் கொண்டு அனுசரித்து போகக்கூடியவர்.

அவர் உங்களை வீட்டிற்குக் கூப்பிடாததற்கு ஏதோ பின்னணி இருக்கிறது என்று உங்களுக்குப் புரிந்து இருக்கிறது. என்ன பின்னணி என்பது புதிராகவே இருந்து விட்டுப் போகட்டும். உங்களுக்கு வேண்டியது உங்கள் சகோதரியின் ஆதரவு. அது எப்போதும் இருக்கும். அவரது தொலைபேசி அழைப்பை, விருந்தோம்பல்களை எதிர் பார்க்காதீர்கள். எப்போது அவருடைய பாசக்குரலைக் கேட்க வேண்டுமோ அப்போதெல்லாம் பேசுங்கள். பொதுவான கேள்விகளை ஆர்வமாகக் கேளுங்கள். நீங்கள் செய்வதை, செய்யப் போவதைப் பற்றி, நிறையப் பேசுங்கள். அவர் பேச நேரமின்மையைத் தெரியப்படுத்தினால் அதை ஏற்றுக்கொள்ள மனதைத் தயாராக்கிக் கொள்ளுங்கள். அவரும் உங்களைப் போலவே உங்களை நேரில் பார்க்கும் சந்தர்ப்பத்தை எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறார். இது நிச்சயம்.

தளர வேண்டாம் மனம்.

வாழ்த்துக்கள்
சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com