BATM: பி.ஏ. கிருஷ்ணனுடன் சந்திப்பு
ஜூலை 11, 2012 அன்று எழுத்தாளர் பி.ஏ. கிருஷ்ணன் அவர்களுடன் வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றத்தினர் ப்ளசன்டன் நகரத்தில் இரவு விருந்து ஒன்றை நடத்தினர். இவர் 'புலிநகக் கொன்றை', 'கலங்கிய நதி' ஆகிய குறிப்பிடத் தக்க நாவல்களின் ஆசிரியர். மன்ற உறுப்பினர்களும் இலக்கிய ஆர்வலர்களும் நிகழ்ச்சிக்குக் குடும்பத்துடன் வந்து பங்கேற்றனர். பொருளாளர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். வெங்கடேஷ் பாபு கிருஷ்ணனின் நாவல்களை அவையோருக்கு அறிமுகப்படுத்தினார். பிறகு பேசிய கிருஷ்ணன், அரசாங்க அதிகாரியாகப் பணிபுரிந்த தான் எப்படி எழுத்தாளரானார் என்பதை சுவாரசியமாக பேசினார். பின்னர் அவையோரின் கேள்விகளுக்குப் புள்ளிவிவரங்களோடு அருமையாகப் பதில் அளித்தார். மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் பாலு கிருஷ்ணராஜ், கிருஷ்ணனுக்குச் சால்வை போர்த்தினார். உடனிருந்த துணைவியார் ரேவதி கிருஷ்ணனுக்கு நர்மதா சரவணன் சால்வை போர்த்தினார். அமெரிக்காவில் வளர்ந்து தமிழ் கற்றுக் கொண்ட செல்வன். விஷ்ணு சரவணன் சுந்தரத் தமிழில் நன்றி கூறியது பெருமகிழ்ச்சியைக் கொடுத்தது.

வெங்கடேஷ் பாபு,
ப்ளசன்டன்

© TamilOnline.com