GATS: முத்தமிழ் விழா
ஜூலை 14, 2012 அன்று, அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் (GATS) முத்தமிழ் விழா லேனியர் உயர்நிலைப் பள்ளி அரங்கில் நடந்தேறியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பித்த விழாவை, ஜெயா டிவி புகழ் பாடகி கிருத்திகா சூரஜித் தொகுத்து வழங்கினார். சங்கத் தலைவர் தங்கமணி பால்ச்சாமி வரவேற்றுப் பேசினார். சூப்பர் சிங்கர் போட்டியை அமெரிக்க அளவில் நடத்த திட்டமிட்டு, அதன் துவக்கமாகப் பல பாடகர்கள் பாடி அசத்தினார்கள். அடுத்து, கவியரசு கண்ணதாசன் பற்றி உமையாள் முத்து அவர்கள் சிறப்புரை வழங்கினார்கள். செல்வி. ஹரிணி இந்திரகிருஷ்ணன் சிலப்பதிகாரத்தை தனது நாட்டியத்தில் நிகழ்த்திக் காட்டினார். கண்ணகியின் மனக் குமுறலைத் தத்ரூபமாகக் கண்முன் கொண்டு வந்தது சிறப்பு.

'வீரமங்கை வேலுநாச்சியார்' நாட்டிய நாடகம் அடுத்து வந்தது. ஸ்ரீராம் சர்மா இயக்கத்தில் மணிமேகலை சர்மா வேலு நாச்சியாராகவே வாழ்ந்து காட்டினார். பல உள்ளூர்க் கலைஞர்கள் குறுகிய காலத்தில் பயிற்சி மேற்கொண்டு, குழுவினருடன் ஆடியும், நடித்தும் தம் திறமையை நிரூபித்தனர். பின்னணியில் வைக்கப்பட்ட கலை வடிவங்கள், வரைபடங்கள் அனைத்தும் சங்கத்தினரால் வடிவமைக்கப்பட்டு, நாடகத்துக்கு அழகு சேர்த்தன. தேசிய கீதத்துடன் விழா நிறைவடைந்தது.

உமா பாபா,
அட்லாண்டா

© TamilOnline.com