மரகதத் தீவுகள்
கடற்கரை இருக்கும் இடத்திற்கு போகலாம் என்றான் என் மகன். குளிர்ச்சியான மலைப் பிரதேசம் தான் எனக்குப் பிடிக்கும் என்றேன் நான். பச்சைப் பசேல் என்று நிறைய மழையுடன் கேரளத்தைப் போல இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்றார் என் கணவர். கோடைவிடுமுறைக்கு அந்தமான் செல்லலாம் என்று முடிவானது.

போர்ட்பிளேயர் எங்கள் அனைவரின் ஆசையையும் நிறைவு செய்தது. பச்சைப்பசேல் என்ற மழையால் நனைந்த ஊர். கடலின் உப்புக் கலந்த வாசனை, உயர்ந்தும் தாழ்ந்தும் மலைப்பிரதேசம் போன்ற அமைப்பு.

ஆரவாரம் இல்லாத அமைதியான மக்கள். இந்தி, வங்காளம், ஆங்கிலம் கலந்த தமிழில் பேசிய மக்கள்! டீல்ஹவுஸ் என்ற விடுதியை மழையின் ஊடே சென்றடைந்தோம். எப்படி வெளியே செல்வது என்று நாங்கள் கேட்க, ''அட, இங்க மழை ஜட்கா அடிக்கும்'' என்று அங்கிருந்த பெண்மணி அழகாகக் கூறினார்.

முதல்நாளே மழைக்கு வேண்டிய ஆயுதங்களோடு வெளியே கிளம்பினோம். சாத்தம் என்ற சிறிய தீவு போர்ட்பிளேயருடன் பாலம் மூலம் இணைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த பழமையான மரமறுக்கும் மில் ஆசியாவிலேயே மிகப் பெரியதாம். பாதுக், குர்ஜான், மார்பில், சாடின் வுட் போன்ற மரவகைகள் இங்கு கப்பல் மூலம் வந்து, விதவிதமாக வெட்டப்பட்டு இந்தியா முழுவதற்கும் போகிறது. கப்பல் நிறுத்தும் படகுத்துறை (wharf) இங்கு இருந்தது.

அடுத்து விலங்கியல் பூங்காவை அடைந்தோம். (எத்தனை நேர்மையான ஆட்டோ ஓட்டுநர்கள்? நியாயமான பணத்தைப் பெற்று எங்கு வேண்டுமானாலும் நம்மை அழைத்து செல்கின்றனர்!) அந்தமானில் எங்கும் காண முடியாத செடி வகைகளும் விலங்கு வகைகளும் ஏராளம். ஒலி ஒளி அறையில் இத்தீவுகளின் அழகான இயற்கையைப் படம் பிடித்து நமக்கு விருந்து படைக்கின்றனர். நிகோபர், புரா, வைட் பெல்லீட், கிரீன் எமரல்ட் புறா பருந்து, அந்தமான் பரகீட் போன்ற வித்தியாசமான பறவைகளும், லெதர் பாக் ஆமை, பச்சைக் கடல் ஆமை, நீர் உடும்பி, முதலைகள், மலைப்பாம்பு வகைகளும் நம்மை ஒரு டிஸ்கவரி சேனலுக்கு கொண்டு சென்றது. கொட்டும் மழையில் நத்தைகள், மண்புழுக்கள் ஆகியவற்றைத் தாண்டி தாண்டி நடந்து ஆட்டோ பிடித்து ஆந்த்ர பாலஜிகல் மியூசியம் சென்றோம்.

இங்கு அந்தமானின் பழங்குடியினர் பற்றி மிக விரிவாகக் காட்சி வைத்து உள்ளனர். அங்கு வசிக்கும் ஜராவா இனத்தவரைப் பற்றியும் அங்கு எப்படி அவர்கள் வந்தடைந்தனர், அவர்களின் படகுகள், வீடு, உடை, அணிகலன்கள், ஆயுதங்கள், சமையல் பாத்திரங்கள் என்று அனைத்து அம்சங்கள் குறித்தும் அழகிய மாடல்களும், உண்மையான பொருட்களும் அங்கு வைக்கப்பட்டுள்ளன.

இன்றும் ஜராவா இனத்தவர் இரும்பு கால மனிதர்கள் போல ஆடையின்றி வேட்டையாடி காடுகளில் வசித்து வருகின்றனர். இவர்களைக் காணும் வாய்ப்பு அடுத்த நாளே கிட்டியது.

பாரடாங் என்ற தீவிற்கு விடியற்காலை நான்கு மணிக்கே பேருந்து மூலம் பயணமானோம். நூற்றி இருபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள இவ்விடம் அடர்த்தி யான காடுகளைத் தாண்டி அமைந்துள்ளது. இக்காடுகள் ஜராவா இனத்தவர் வசிக்கும் காட்டு வாரியத்தின் ரிசர்வ் பகுதியாகும். இம்மக்களுக்கு ஆடை, உணவு ஏதும் நாம் அளிக்கக் கூடாது. மேலும் புகைப்படம் கூட எடுக்க அனுமதி இல்லை.

சாம்பல் நிற இருட்டில் மழையில் நனைந்து கொண்டே பேருந்து செல்ல, தூங்கும் விழிகளைத் தட்டி எழுப்பியது இயற்கை அன்னையின் கரங்கள். வானளாவிய மரங்கள், அவற்றின் மேல் ஏரி செல்லும் கொடிகள், கிளோராக்ஸால் துவைக்கப்பட்ட வெள்ளை இலைகள், வெவ்வேறு வடிவங் களில் பனை இலைகள், குறுக்கும் நெடுக்கும் செல்லும் குரங்குகள் என்று நகர்ந்தன காட்சிகள். திடீர் என்று 'ஓ....' என்று அலறல்.

வெளியே சாலையோரம் ஜராவா மக்கள் பனை இலையை குடையாக ஏந்திக் கொண்டு நம்மைப் பார்த்து கையசைத்தனர். கையில் வில்லும் அம்பும் வேறு. சில வருடங்கள் முன்புவரை இவர்கள் நகர வாசிகளை அம்பு எய்தி தாக்கியவர்கள். இப்போது, அதுவும் சுனாமிக்குப் பிறகு, இந்திய அரசு செய்த உதவியில் மிகவும் சமாதானமாக நடந்து கொள்கின்றனர் என்றார் பேருந்து நடத்துனர்.

முக்கியத் தீவின் படகுத் துறையை அடைந்த பேருந்து அங்கு காயலில் நின்று கொண்டிருந்த படகின் மேல் ஏறியது. நான்கு பஸ்கள், மூன்று கார்கள் மற்றும் சில மக்களுடன் நீரை கடந்து படகு பரடாங் தீவை அடைந்தது. அப்படியே பஸ் சாலையின் மேல் ஏறிக்கொண்டது.

நாங்கள் அங்கேயே இறங்கிக்கொண்டோம். மேலும் அந்தமானின் வடக்கு மூலையான ரங்கட் என்ற ஊர் வரை பேருந்து செல்லு மாம். எங்களுடன் சில ஜராவா இனத்தவரும் ·பெர்ரியில் மிகுந்த பாதுகாப்புடன் காட்டு இலாகா லாரியில் மிகுந்த பாதுகாப்புடன் காவல்துறையினர் வேறு எங்கு செல்ல வேண்டுமானாலும் அழைத்துச் செல்கின்றனர்.

ஜராவா இளைஞர்கள் இருவர் நிக்கர், டி ஷர்ட் அணிந்து கொண்டு நம்முடன் பேச வந்தனர். கையில் அம்புடன் அவர்கள் ஹிந்தி மொழியில் ஒன்று இரண்டு வார்த்தைகளில் பேசுகின்றனர். சிலர் அவர்களுடன் சகஜமாகப் பழகினர். எங்களிடமிருந்து பெற்ற பணத்தில் சமோசா, வடை எல்லாம் வாங்கிக் கொண்டு அடுத்த படகில் காட்டுக்குள் திரும்பிச் சென்றனர்.

ஆப்பிரிக்க இனத்தவர் போலக் கருமையான சுருட்டை முடியுடன் இருந்த அவர்களின் மூக்கு மட்டும் நீண்டு கூர்மையாக இருந்தது. கண்கள் முட்டை முட்டையாக வெள்ளைப் பகுதி பளிச்சென்றும் இருந்தது. அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆவலாக இருந்தும் எங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டோம்.

முதலில் மண் எரிமலையைக் காண ஜீப்பில் சென்றோம். அழகிய கிராமங்களைக் கடந்து காட்டினுள் சென்றோம். மழை தொடர்ந்து பெய்தது. பான்சோதான் எங்களையும், காமிராக்களையும் பாதுகாத்தது. வண்டியில் இருந்து இறங்கி காட்டு இலாகா அமைத்த பாதையில், சிறுகுன்று என்று சொல்லப்பட்ட காட்டினுள் நடந்தோம். இருபக்கமும் அடர்ந்த மூங்கில் காடு. இடையிடையே அழகிய வடிவங்களில் இலைகள். மலர்கள் ஏனோ நிறையக் காண முடியவில்லை. மழைநீர் மேலிருந்து சாம்பல் நிறத்தில் ஓடி வந்தது. நீரில் நடந்து போய் மண் கக்கும் ஏரிமலையை அடைந்தோம். கால்கள் சாம்பல் நிற மண்ணில் வழுக்க வழுக்க மேலேறினோம். அதிசயமான அனுபவம். அந்த இடம் முழுதும் மண்தான். சில சமயங்களில் திடீர் என்று மண்ணைப் பீய்ச்சி அடிக்குமாம் பூமி.

அன்று நாங்கள் தெரிந்து கொண்டது இந்தியாவின் ஒரே ஒரு எரிமலை அந்த மானின் பாரன் தீவில் உள்ளது என்பது தான். முதல்நாள் தான் அது வெடித்ததாம். அத்தீவு தெற்குப் பகுதியில் உள்ளது. அதன் பக்கத்தில் மக்கள் எவரும் வசிக்கவில்லை. கப்பல் மூலம் அங்கு செல்லலாம். ஆனால் அரசு அனுமதியுடன் தான் செல்ல வேண்டும்.

பரடாங் ஜெட்டிற்கு திரும்பி அங்கிருந்து படகு ஒன்றின் மூலம் சுண்ணாம்புக்கல் குகையைக் காணச் சென்றோம். காயலில் திறந்த படகில் மழையில் நனைந்தவாறே சென்றோம். நதி போல் அமைதியான நீரின் இரு புறமும் மான்கிரோவ் காடுகள். மரங்களின் கிளைகள் நீரின் உள்சென்று அதிலிருந்து சிறு காம்புகள் மறுபடியும் நீரில் இருந்து எழுந்து வெளியே நீட்டிக் கொண்டிருந்தன. சுந்தரவனக் காடுகள் போன்றவை இவை.

இவ்வடர்ந்த மரங்களுக்கு ஊடே படகு செல்ல ஒரு பாதை அமைந்திருந்தது. படகைச் செலுத்திய இருவர் இரு பக்கமும் இடித்துக் கொண்ட படகை எப்படியோ கொண்டு சேர்த்தனர். படகில் இருந்து இறங்கி மரப்பாலம் ஒன்றைக் கடந்து அடுத்த தீவினுள் சென்றோம். மறுபடியும் இடைவிடாத அடைமழை. காடு, வயல் வரப்பு என்று தட்டுத்தடுமாறி எப்படியோ அந்தக் குகையை அடைந்தோம். நான்கு ஐந்து வீடுகள் கொண்ட சிறு கிராமம் ஒன்றைக் கடந்த நான், ஒரு பெண்மணியைப் பார்த்து ஹிந்தியில் "எப்படி இங்கு வசிக்கிறீர்கள்?" என்று கேட்டேவிட்டேன். ஆனால் இடைஞ்சல்கள் இல்லாத அமைதியான வாழ்க்கை.

குகையினுள் அழகிய வடிவங்களில் சுண்ணக்கல் அமைப்புகள். செயற்கை சேராத அதிசய வடிவங்கள். தாமரை மொட்டு, தேவதை லிங்கம் என்று நாங்கள் ஒவ்வொரு வடிவமும் கண்டு மகிழ்ந்தோம். படகு ஓட்டியவன் கையில் ஒரு வெள்ளை வெளிச்சம் பாய்ச்சும் fluorescent டார்ச்சுதான் வைத்திருந்தான். சாட்டனுகா ரூபி பால்ஸ் நினைவுக்கு வந்தது. இங்கும் குகை மேலே இருந்து ஒரு துவாரம் வழியே மழை நீர் கசிந்து வந்து வடிவங்களுக்கு ஒரு தங்க மினு மினுப்பைத் தந்தது. மறுபடியும் ஒரு மலைக் குகையை இருட்டில் ஆழ்த்திவிட்டு வந்த வழியே நனைந்துகொண்டே படகை அடைந்தோம். பாதுகாப்பு, போலீஸ் என்று ஆள் நடமாட்டமே இல்லாத அமைதியான தீவு.

(மேலும் வரும்...)

ஷமிலா

© TamilOnline.com