தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-14)
இதுவரை: ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணிபுரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகச் சொல்லவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறுகிறாள். மூவரும் அக்வாமரீன் என்னும் நிறுவனத்துக்குச் செல்கின்றனர். அங்கு வேலை செய்யும் யாவ்னா என்ற இளம்பெண் மற்றும் நிறுவனரான தாமஸ் மார்ஷ் இருவரையும் சந்தித்தனர். தாமஸின் குடும்பத்தைப் பற்றி சூர்யா சரியாக யூகித்துத் தாமஸுக்குத் தன்மேல் பெரும் நம்பிக்கை பிறக்கச் செய்தார். யாவ்னாவும் தாமஸும், நீருப்பகற்றல் துறையின் சில நவீன நுட்பங்களைப் பற்றியும் அக்வாமரீனின் சில தனிப்பட்ட சொந்த நுட்பங்களைப் பற்றியும் விவரித்தனர். அக்வாமரீனின் சொந்த நுட்பங்கள் சேர்க்கப்பட்ட உப்பகற்றல் தளம் பழைய தளங்களைவிடப் பலமடங்கு அதிக தூய நீரை, மிகக் குறைந்த செலவில், மிகச் சிறிய சாதனத்தைக் கொண்டு உற்பத்தி செய்து உலகின் தூயநீர்த் தேவையைப் பூர்த்திக்க முடியும் என்று விளக்கினர். அதில் என்ன பிரச்சனை என்று ஆராய்வதற்காக, அக்வாமரீனின் மத்திய கன்ட்ரோல் கூடத்துக்குத் தாமஸ் அழைத்துச் சென்றார். மேற்கொண்டு என்ன நடக்கிறது?

தாமஸ் அழைத்ததும் ஓடோடி வந்த அக்வாமரீனின் தலைமை விஞ்ஞானி ஜேம்ஸ் கோவால்ஸ்கி, தம் நிபுணர் குழாத்தாலேயே கண்டறிய முடியாத பிரச்சனையை உப்பகற்றல் பற்றி ஒன்றுமே அறியாத சூர்யா எப்படி ஆராய்ந்து எதைக் கண்டு பிடிக்கப் போகிறார் என்று அலட்சியப் படுத்தவே, அவரது அவநம்பிக்கையைத் தகர்த்தெறியுமாறு அதிர்வேட்டு யூகம் ஒன்றை சூர்யா வழக்கம்போல் எடுத்து வீசினார்!

"ஜேம்ஸ், உங்க திறமை வாய்ந்த விஞ்ஞானிகள் உப்பகற்றல் நுட்பங்களை அந்தத் துறையின் துல்லியமான நுணுக்க ரீதியா ஆராய்ஞ்சும் பிரச்சனையின் மூலகாரணம் புலப்படாதபோது என்னால் எப்படி முடியும்னு நீங்க கேக்கறது ரொம்ப நியாயந்தான். ஆனா இதை வேற கோணத்துல பாருங்களேன். பிரச்சனையில் ஆழமாக அழுந்தியிருப்பவர்களுக்குப் புலப்படாத சில தடயங்கள் வெளியாருக்குச் சட்டெனத் தெரியக்கூடும். உதாரணமா, உங்க மனைவி ஒரு அக்கவுன்டன்ட், ஆனா அவங்களே பலமுறை சரி பார்த்தும் கண்டுபிடிக்க முடியாத உங்க பேங்க் அக்கவுண்ட் செக் பேலன்ஸ் தவறை நீங்க சட்டுன்னு ஒரே தடவை பார்த்து, ஒரே கேள்வியால கண்டு பிடிச்சிட்டீங்க இல்லையா, அந்த மாதிரின்னு வச்சுக்குங்களேன்!"

சூர்யாவின் யூகக் கணையால் அதிர்ந்தே போன ஜேம்ஸின் முகம் போன கோணல்கள் கிரணுக்கு அடக்க முடியாத சிரிப்பை வரவழைத்தன. கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு ஷாலினியிடம் "ஆளு அய்யோ பாவம், அஸ்திவாரமே ஆடி, சும்மா அதிருதில்லேங்கற மாதிரி அலறிட்டார் பாரு!" என்று முணுமுணுத்தான். ஷாலினி வழக்கம்போல் அவனைக் கண்டித்து அடக்காமல், தானும் முறுவலித்துக் கொண்டு, "சரி இரு. சூர்யா எப்படி இதை யூகிச்சார்னு பார்க்கலாம்," என்றாள்.

சூர்யாவின் யூகத்திறனை ஏற்கனவே சொந்த அனுபவத்திலேயே உணர்ந்திருந்த தாமஸும், யாவ்னாவும் கூட ஜேம்ஸின் குடும்பத்தைப் பற்றிய உள்விஷயத்தை சூர்யா எப்படிக் கண்டறிந்தார் என்று அறியும் ஆர்வத்துடன் கவனித்தனர்.

அளவிலாத ஆச்சர்யமும் ஓரளவு பயமும் கலந்த உணர்வால் உந்தப்பட்ட ஜேம்ஸ், தடுமாற்றத்துடன், "எ...எ...எப்படி! இது இன்னிக்குக் காலையில எங்க வீட்டுக்குள்ளே நடந்த வி...வி...விஷயமாச்சே, என்னையும் என் மனைவியையும் தவிர யாருக்கும் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லையே!" என்றவர், திடீரென எழுந்த சந்தேகத்தால் தாமஸிடம் சீற்றத்துடன் கேட்டார், "தாமஸ், எனக்குத் தெரியாம எங்க வீட்டுக்குள்ளயே சின்ன எலக்ட்ரானிக் வேவு சாதனங்களைப் பொருத்தி எங்களை வேவு பாக்க ஆரம்பிச்சுட்டிங்களா? சே, சே! இந்த அளவுக்குக் கீழ்த்தரமா இறங்குவீங்கன்னு நான் எதிர்பார்க்கலை. அது மட்டுமில்லாம, இந்த மாதிரி துப்பறிவாளருக்கு அந்த விவரத்தையெல்லாம் கொடுத்து, அவங்களை வேற எங்கமேல ஏவிவிட்டிருக்கீங்க போலிருக்கே? ரொம்ப மோசமாயிருக்கே…" என்று அடக்க முடியாத கோபத்துடன் அடுக்கிக் கொண்டே போனவரை சூர்யா இடைமறித்தார்.

"சே, சே! வீட்டுக்குள்ளயாவது வேவு பாக்கறதாவது?! அதெல்லாம் ஒண்ணுமில்லை ஜேம்ஸ். உங்ககிட்ட இருக்கற தடயங்களை வச்சு இந்த நிமிஷம் நானே யூகிச்சதுதான்!"

ஜேம்ஸ் கோபம் தணியாமல் பல்லைக் கடித்துக்கொண்டு வார்த்தைகளை வெடுக்கெனத் துப்பினார்! "ஆங்! நம்பறாமாதிரி எதாவது சொல்லுங்க. இவ்வளவு விவரங்கள் எங்கிட்ட வெளியில தெரியறா மாதிரி என்ன இருக்கு?"

சூர்யா முறுவலுடன், "இது ஒண்ணும் பிரம்ம வித்தையேயில்லை ஜேம்ஸ். என் கண்ணுல பளிச்சுன்னு தெரிஞ்சதுதான்! மறந்துட்டீங்க போலிருக்கு," என்று ஜேம்ஸின் அகன்ற கோட் பாக்கெட்டைச் சுட்டிக் காட்டினார்.

ஜேம்ஸ் விழிக்கவே, சூர்யா கூறியதைப் புரிந்து கொண்டுவிட்ட கிரண் முந்திக்கொண்டு விளக்கினான், "ஹை! எனக்குத் தெரிஞ்சுடுச்சு. நானே சொல்றேன். ஜேம்ஸ், உங்க கோட் பாக்கெட்டுக்குள்ள இப்பதான் சில வினாடிகளுக்கு முன்னாடி உங்க ஆப்பிள் ஐ-பேட் டேப்லட்டைப் போட்டுக்கிட்டீங்க. அதை எடுத்து ஆன் பண்ணுங்க?!" என்றான்.

இன்னும் புரியாமல் அந்த ஸ்லேட் கணினியை வெளியெடுத்து இயக்கிய ஜேம்ஸ் அதில் தெரிந்த விஷயத்தைப் பார்த்தவுடன் அசடு வழிந்தார். "ஓ! என் மனைவி அனுப்பிய மின்னஞ்சலை நீங்க வந்தப்போதான் பாத்துக்கிட்டிருந்தேன். அதுல இருந்ததைப் பாத்துட்டுதான் சொன்னீங்களா? நல்ல கூர்த்த பார்வைதான், வெரி குட்! ஆனா அனுப்பினது என் மனைவிதான்னு எப்படித் தெரியும்?"

சூர்யா விளக்கினார், "அதுல அனுப்பினவங்களோட முழுப் பெயர் தெரஸா கோவால்ஸ்கின்னு இருக்கு. முதல் வாக்கியமே, ‘மை வொண்டர்ஃபுல் ஹஸ்பண்ட் டு மை ரெஸ்க்யூ அகெய்ன்!’ அப்படின்னு இருக்கு. உங்களுக்கு சாளேஸ்வரப் பார்வை இருக்கறதுனால எழுத்துக்களை ரொம்பப் பெரிசா ஆக்கிப் படிச்சிருக்கீங்க. அதுனால நீங்க பக்கத்துல வந்தவுடனே எல்லாம் எனக்குப் பளிச்சுன்னு தெரிஞ்சிடுச்சு" என்றார்.

தாமஸும், யாவ்னாவும் படபடவெனக் கைதட்டினர். ஜேம்ஸும் கோபம் பறந்து, மனம்விட்டுச் சிரித்துவிட்டு சூர்யாவைப் பாராட்டினார், "பிரமாதம் சூர்யா! நான் என் ஐ-பேடைப் பாக்கெட்டுக்குள்ளை போடறத்துக்கு முன்னாடி சில நொடிகளுக்குள்ள அதையெல்லாம் கிரகிச்சு என்னை ஆட வச்சுட்டீங்களே. சரி நீங்க சொன்னதை நானும் ஏத்துக்கறேன். எங்க விஞ்ஞானிகளோட நீங்களூம் சேர்ந்து ஆராய்ஞ்சா பலன் விளையக்கூடும். இப்ப என்ன பார்க்கணும் நீங்க?"

தாமஸ் முறுவலுடன் "இதுல பாருங்க ஜேம்ஸ், உங்க தகராறுல, என் தலைமேலயே ஒரு சந்தேக இடி விழுந்துடுச்சு!" என்று சொன்னதும், ஜேம்ஸ் வெட்கித் தலை குனிந்தார். "சாரி தாமஸ். கோபத்துல தாறுமாறா என்னென்னவோ பேசிட்டேன், மன்னிச்சுக்குங்க" என்றார்.

தாமஸ் கையை அலட்சியமாக வீசி ஜேம்ஸின் முதுகைத் தட்டிக் கொடுத்தார். "சே, சே! அதெல்லாம் ஒண்ணும் வேணாம். உங்க நிலைமையில நானும் அப்படித்தான் நினைச்சிருப்பேன். நடக்க வேண்டியதைப் பாக்கலாம் வாங்க. சூர்யா, நீங்க உங்களுக்கு வேண்டியது என்னன்னு சொல்லுங்க."

சூர்யா ஜேம்ஸிடம் கேட்டுக்கொண்டார். "இந்த முறைக்கான பழுதின் விவரங்களை உங்க விஞ்ஞானிகள் சேகரிச்சாச்சுன்னா, உங்க உப்பகற்றல் சாதனத்தை ரீஸெட் பண்ணி முதல்லேந்து ஆரம்பியுங்க. பழுதாகறப்போ இந்தத் திரையில என்ன காட்டுதுன்னு பாக்கணும்." ஜேம்ஸ் தலையாட்டிவிட்டு தன் குழுவினரிடம் எதோ கலந்தாலோசித்து விட்டு வந்தார். "ஆச்சு, வாங்க ரீஸெட் செய்யலாம்." என்று மின்திரைகளருகில் அழைத்துச் சென்று திரையில் தெரிந்த ஒரு வட்ட சின்னத்தின் மேல் விரலால் இரண்டு முறை அழுத்திவிட்டு மற்றொரு மின்திரையில் ஓடிய வாக்கியங்களைச் சுட்டிக் காட்டி "ஆரம்பிச்சாச்சு, பாருங்க" என்றார்.

சூர்யா அந்த வாக்கியங்களையும் பச்சையாக ஒளிர்ந்து கொண்டிருந்த வட்டங்களையும் ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டிருந்தார். சில நிமிடங்கள் எதுவும் பழுதாகவில்லை. கிரண் பொறுமையிழந்து ஒரு பக்கமாக நகர்ந்து தன் கைக்கணினியை எடுத்து அலுவலக மின்னஞ்சல்களைப் படிக்க ஆரம்பித்தான். யாவ்னா "அதோ, அதோ பாருங்க!" என்று கூவவே அவசரமாக மீண்டும் வந்து சேர்ந்துகொண்டான். ஒரு மின்திரையில் மேலிருந்து கீழாக வரிசையாக இருந்த பல வட்டங்களில் கடைசிக்கு முந்திய வட்டம் பச்சை நிறத்திலிருந்து மஞ்சளாக மாறி விட்டிருந்தது. அதன் பக்கத்தில் தோன்றிய அறிக்கையை சூர்யா ஆர்வத்துடன் படிக்கலானார். சில நொடிகளில் அந்த வட்டம் மஞ்சளும் போய் சிவப்பாகவே மாறிவிட்டது!

கிரண், "என்ன, டேஞ்சர் காட்டுது?!" என்றான்.

தாமஸ் சோகமாக, "ஆமாம். ஒவ்வொரு சின்னமும் எங்க சாதனத்தின் ஒரு ஸ்டேஜ் எந்த நிலையில இருக்குன்னு காட்டுது. அதுல கடைசி ஸ்டேஜுக்கு முந்தின ஸ்டேஜ்ல ஏதோ பழுது வந்திருக்கு. சூர்யா கேட்ட மேல்விவரங்களும் அது பக்கத்துல இருக்கு படிக்கலாம்" என்றார்.

அதை ஏற்கனவே படித்துக் கொண்டிருந்த சூர்யா சட்டென நிமிர்ந்து ஜேம்ஸ் பக்கம் விர்ரெனத் திரும்பி, "ஜேம்ஸ், க்விக்! சாதனத்தை மீண்டும் ரீஸெட் செய்யுங்க!" என்று தூண்டினார். ஜேம்ஸ் வியப்புக் கலந்த குழப்பத்துடன், "திரும்ப ரீஸெட் பண்ணணுமா? ஏன்? அதான் பழுதாகறப்போ பாத்துட்டீங்களே?" என்று தயங்கவே கிரண் இடை மறித்தான். "சூர்யா ஸாஃப்ட்வேர், மென்பொருள் பொறியியலாளராயிட்டார் போலிருக்கு. அவங்கதான் தப்பா ஓடற பழுதை ரீப்ரொட்யூஸ் பண்ணனும்னு ப்ரோக்ராமை திரும்பத் திரும்ப ஓட்டிக்கிட்டிருப்பாங்க!"

சூர்யா முறுவலுடன் விளக்கினார். "கிட்டத்தட்ட அப்படித்தான்னு வச்சுக்கலாம்! ஆனா கொஞ்சம் வித்தியாசம். அதே பழுதைத் திரும்ப வரவழைச்சு ஆராயறதில்லை என் நோக்கம். அடுத்த முறை அதே வருதா, இல்லை வேற வருதா, அதே வந்தாலும் எச்சரிக்கை அறிக்கை மாறுதான்னு பாக்கணும்."

ஜேம்ஸ் சிலாகித்தார். "இது நல்ல வழிமுறைதான். நீங்களும் விஞ்ஞான ரீதியா ஆராய்ச்சி செய்றீங்களே. இதோ பாருங்க" என்று மீண்டும் ரீஸெட் செய்தார்.
மின்திரையில் சின்னங்கள் வண்ணங்களை மாறிமாறிக் காட்டி மீண்டும் பச்சை நிறமாகக் காட்சியளித்தன. கிரண் சிரித்துக்கொண்டு, "இது எப்படியிருக்கு தெரியுமா? லாஸ் வேகாஸ் ஸ்லாட் மெஷின்ல பட்டனைத் தட்டித்தட்டி ஜாக்பாட் விழாதான்னு ஏங்கறமாதிரி இருக்கு!" என்றான்.

ஷாலினி கடிந்துகொண்டாள், "சே என்ன கிரண் இது?! இவ்வளவு சீரியஸ் விஷயத்தை சூதாட்டத்துக்கு இணையாக்கிக் கிண்டல் பேசறயே?"

தாமஸ் தலையாட்டி மறுத்து, "இல்லை, ஷாலினி, கிரண் சொல்றா மாதிரி ஒருவேளை ஜாக்பாட் மாதிரி பிரச்சனையோட காரணம் கிடைச்சா நல்லாத்தான் இருக்கும்…" என்றார்.

மின்திரையில் மீண்டும் ஒரு சிவப்புச் சின்னம் பளிச்சிட்டது. ஆனால் இம்முறை அது அடுக்கு வரிசையில் கீழ் மட்டத்தில் இருந்த கடைசிச் சின்னத்தைச் சிவப்பாகக் காட்டியது. சூர்யா கேட்டார், "ஹூம்... போனமுறை கடைசிக்கு முந்திய ஸ்டேஜ், இந்தமுறை கடைசி ஸ்டேஜ். ஸோ, வேறவேற ஸ்டேஜ் பழுதாகுது. பிரச்சனை ஒரு நுட்பத்துல மட்டும் இல்லைன்னு புலப்படுது. ஆனா, சாதனத்துல இருக்கற பல ஸ்டேஜ்கள் எப்பவும் ஒரே வரிசை முறையில பழுதாகுதா, இல்லை முன்கூட்டியே சொல்ல முடியாதபடி ரேன்டமா வேறவேற ஸ்டேஜ்கள் பழுதாகுதா?"

ஜேம்ஸ் வியப்புடன் பாராட்டினார்; "இது ரொம்ப நல்ல கேள்விதான் சூர்யா. நானும் எங்க விஞ்ஞானிகள் குழுவும் ஓவ்வொரு பழுதையும் ஆழ்ந்து ஆராய்வதில முழுகிட்டதுனால, பழுதுகள் ஒரே வரிசையான ஸ்டேஜ்களில ஏற்படுதா, இல்லை வேறவேற பேட்டர்ன்ல ஏற்படுதான்னு யோசிச்சுப் பார்க்கவே இல்லை. இது ஒரு முக்கியமான கோணம். உங்கமேல எனக்கு இப்ப நம்பிக்கை வளருது. கண்டுபிடிக்க உங்களால நிச்சயம் உதவ முடியும்."

தாமஸ், "எனக்கும் இந்த விஷயம் தோணவே இல்லை... ஜேம்ஸ் இந்த பழுதுவரிசை விவரத்தை எப்படிக் கண்டு பிடிக்கறது? பலப்பல முறை ரீஸெட் செஞ்சு எந்த பேட்டர்ன் வருதுன்னு பாக்கணுமா? ரொம்ப நேரமாகுமே? ஸிஸ்டத்துக்கும் எதாவது இன்னும் அபாயம் வருமோ?"

சூர்யா குறுக்கிட்டார். "அது அவசியமில்லை. பழைய பழுதுகள் நடந்த போதெல்லாம் உங்க மேல்நோக்கும் கணினியின் பதிப்பீட்டுல (log files) குறிக்கப்பட்டிருக்கும். அதையெல்லாம் எடுத்து எந்தெந்த ஸ்டேஜ்ல நடந்ததுங்கற விவரத்தை மட்டும் கோர்வையாப் பாத்தாப் போதும் தெரிஞ்திடும்."

ஜேம்ஸ் மீண்டும் பாராட்டினார். "சூப்பர் யோசனை சூர்யா. நிறைய வேலையை மிச்சப்படுத்தீட்டிங்க, ரொம்ப நன்றி. இதோ, இப்பவே அந்தப் பழைய பழுதுக் குறிப்பீட்டை கணினியில காட்டறேன், ஸ்டேஜ் வரிசையா, ரேண்டமா, எப்படின்னு பாத்துடலாம்."

குறிப்பீடுகளிலிருந்து சூர்யா கண்டறிந்தது அக்வாமரீன் குழுவினருக்கும் இன்னும் பல மடங்கு வியப்பளிப்பதாக இருந்தது!

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com