உள்ளே வெளியே.....
''டேய் பரத், எப்படிடா இருக்கே என்று மிக ஆச்சர்யத்துடன் கேட்டான் விக்ரம்.

பரத் சட்டென்று அடையாளம் கண்டு பிடிக்க முடியாமல், ''நீங்க யாரு?'' என்றான்.

''அட, என்னை தெரியலையா? நான்தான் விக்ரம். நாம இரண்டு பேரும் ஒரே காலேஜ்லே படிச்சோமே!''

"நம்பவே முடியலடா. நீயா அந்த விக்ரம்! இப்படி ஆளே மாறிட்டே'' என்றான் பரத்

''பத்து வருஷமாச்சுல்ல. மாறிப் போயிட்டேன். ஆமா நீ எங்க இந்த பெஸ்ட் பை கடையில?''

''ஒரு புதுவீட்டுக்குப் போறேன். ஒரு நல்ல டெலிவிஷன் வாங்கலாம்னு யோசிக்கிறேன்.''

''சரி, நல்ல டிவி வாங்கலாம்னு முடிவு பண்ணிட்டே. ஆனா எந்த டிவின்னு முடிவு பண்ணியா?'' என்று விக்ரம் கேட்டான்.

''அதுதான் ரொம்ப குழப்பமா இருக்கு. இவ்வளவு சாய்ஸ் இருக்கும்போது எப்படித் தீர்மானிக்கிறது?'' என்றான் பரத்.

விக்ரம் உடனே, ''அது ரொம்ப சுலபம். நேரா அந்த சேல்ஸ்மேன்கிட்ட போ. சும்மா பேச்சுக்குடு.

அப்படியே அவன் வீட்டிலே என்ன டெலிவிஷன் வச்சிருக்கான்னு கேளு. அந்த டெலிவிஷன் நல்லதாத்தாண்டா இருக்கும்.''

''அது எப்படிச் சொல்றே விக்ரம்?''

''அதுவா? ரொம்ப சுலபம். அவன் இந்தக் கடையிலே வேலை செய்யறான். டெலிவிஷனைப் பத்தி ரொம்ப நல்லாத் தெரியும். அதனால் அவன்கிட்ட என்ன இருக்கோ அதுதான் பெஸ்ட்.''

''நீ சொல்றது சரியாத்தான் இருக்கும். ஆமா, இந்த விஷயம் உனக்கு எப்படித் தெரியும்?''

விக்ரம் உடனே, ''அது ரொம்ப சுலபம்டா. எனக்கு பங்குச் சந்தையில ரொம்ப ஆர்வம் உண்டு. அதனால, ஒரு கம்பெனியோட பங்குகளை வாங்கறதுக்கு முன்னாடி, அந்தக் கம்பெனியோட அதிகாரிகள் யாராவது அதே பங்குகளை வாங்குகிறார்களா என்று பார்ப்பேன். அப்படி வாங்கியிருந்தாங்கனா நான் வாங்குவதும் சரி, அப்படி இல்லேன்னா நான் வாங்க மாட்டேன். இது ரொம்ப சுலபம்.''

''ஒரு கம்பெனிப் பங்குகளை அதன் அதிகாரி எப்ப வாங்கறார்னு நமக்கு எப்படித் தெரியும்?'' என்றான் பரத் வியப்போடு.

''அதுவா? எப்ப ஒரு கம்பெனி அதிகாரி அந்தக் கம்பெனிப் பங்குகளை வாங்கினாலும், உடனே இரண்டு நாளில SECக்குச் சொல்லணும்னு ஒரு சட்டம் இருக்கு."

''அதை எங்கே போய்த் தெரிஞ்சுக்கறது?''

விக்ரம், ''அதுவா, http://finance.yahoo.com லே போய் நீ ஒரு கம்பெனியோட ticker symbol கொடுத்து insider trading-னு மெனுவிலே கிளிக் செய்தா அந்தக் கம்பெனியோட பங்குகளைச் சமீபத்தில யாரு வாங்கியிருக்கா, யாருக்கு வித்திருக்கான்னு தெரிஞ்சுடும்.''

உதாரணத்திற்கு CHK என்ற ஒரு Energy Companyயோட பங்குகளைச் சமீபத்துல அந்த கம்பெனியோட டைரக்டர்கள் வாங்கியிருக்காங்க. அதனால நானும் அந்தக் கம்பெனியோட ஷேர்ஸ் வாங்கியிருக்கேன்."

''இது ரொம்ப நியாமானதாகவும், அதே சமயத்தில் சுலபமாகவும் இருக்கு. நானும் இனிமே இதே மாதிரி செய்யலாம் போல இருக்கே'' என்று சொல்லிக் கொண்டே அந்த பெஸ்ட் பை விற்பனையாளரைத் தேடிச் சென்றான் பரத்.

சிவா மற்றும் பிரியா

சிவா மற்றும் பிரியா 'Dollarwise Penny foolish' என்ற நூலை எழுதியுள்ளனர். மேலும் அறிய:www.wisepen.com

© TamilOnline.com