வீண் சண்டை
அது ஒரு அடர்ந்த காடு. கடும் கோடைப் பஞ்சம் நிலவிய காலம் அது. ஒரே ஒரு குட்டையில் சிறிதளவு ஊற்று நீர் இருந்தது. மிகுந்த தாகம் கொண்ட புலி ஒன்று நீர் அருந்துவதற்காக அங்கே வந்தது. அதே சமயத்தில் தாகத்துடன் அங்கு வந்து சேர்ந்தது ஒரு சிறுத்தைப்புலி.

"முதலில் வந்தது நான்தான். ஆகவே நான்தான் தண்ணீரை முதலில் குடிப்பேன்" என்றது புலி.

"அதெல்லாம் ஒன்றுமில்லை. நீ கரைமேலிருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருக்கும் போதே நான் இங்கு நீர் இருப்பதைப் பார்த்து விட்டேன். ஆகவே நான்தான் முதலில் குடிப்பேன்" என்றது சிறுத்தைப்புலி.

இரண்டும் "நான்தான் முதலில், நான்தான் முதலில்..." என்று சொல்லிச் சண்டையிட ஆரம்பித்தன.

வானில் இரை தேடிப் பறந்து கொண்டிருந்த கழுகுகள் இதைக் கவனித்தன. இரண்டில் ஒன்று இறந்தாலும், நமக்கு நல்ல விருந்தாகுமே என்று நினைத்த அவை பறந்து வந்து சண்டை நடந்து கொண்டிருந்த இடத்திற்கு அருகே உள்ள மரங்களில் அமர்ந்தன. அவற்றைக் கவனிக்காமல் புலியும், சிறுத்தையும் மூர்க்கமாகச் சண்டை போட்டுக் கொண்டிருந்தன. தற்செயலாக மேலே மரங்களில் கழுகுகள் அமர்ந்திருப்பதை அவை இரண்டும் கவனித்தன.

இளங்கழுகுகளில் ஒன்று, "சே... இந்தச் சண்டை எப்போது முடியுமோ? சீக்கிரமாக ஒன்று செத்து விழுந்தால் நாம் பசியாறலாம். நேரம் போய்க் கொண்டிருக்கிறது" என்று அலுத்துக் கொண்டது. மற்றொரு வயதான கழுகு, "இதோ பார் அலுத்துக் கொள்ளாதே! பொறுமையாக இரு. ஒருவேளை சண்டையில் இரண்டுமே மடிந்தால் நல்ல விருந்து கிடைக்கும் அல்லவா? காத்திரு" என்றது.

இதைப் புலியும் சிறுத்தையும் கேட்டன. "பார்த்தாயா, நம் அழிவிற்காகக் காத்திருக்கும் இந்தக் கழுகுகள் கூட்டத்தை? நாம் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொன்று, இவற்றுக்கு உணவாக வேண்டுமா என்ன?" என்றது புலி.

"வேண்டாம் புலி அண்ணா. தண்ணீருக்காகத் தானே சண்டை. முதலில் நீங்கள் கொஞ்சம் நீரை அருந்துங்கள். மிச்ச நீரை நான் அருந்துகிறேன். அடித்துக் கொண்டு சாவது எத்தனை முட்டாள்தனம்!" என்றது சிறுத்தைப் புலி.

இரண்டும் குட்டை நீரைக் குடித்துவிட்டுச் சென்றன. காத்துக் கொண்டிருந்த கழுகுகள் ஏமாந்து போயின.

சுப்புத்தாத்தா

© TamilOnline.com