மா. ஆண்டோ பீட்டர்
கணித்தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும், உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் செயற்குழு உறுப்பினராகவும் பங்காற்றிய மா. ஆண்டோ பீட்டர் (45) சென்னையில் ஜூலை 12, 2012 அன்று காலமானார். கணித்தமிழ் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டிருந்த அவர், அதன் ஆரம்ப காலத்திலேயே பல்வேறு தமிழ் எழுத்துருக்களையும், மென்பொருட்களையும் உருவாக்கி அளித்தவர். எளிய தமிழில் கிராமப்புற மாணவர்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் கணினி பற்றிய நூல்களை எழுதியவர். ஏப்ரல் 26, 1967 அன்று தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் பிறந்த ஆண்டோ பீட்டர், கணிதத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். கணினித் தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்டு, அதைப் பயின்று தேர்ந்தார். மேலாண்மையியலிலும் பட்டம் பெற்றார். நடுத்தர வர்க்கத்தினரும் பயன்பெறும் வகையில் குறைந்த கட்டணத்தில் பயிற்சி தரும் 'சாஃப்ட்வியூ' கணினி மென்பொருள் நிறுவனத்தை உருவாக்கி நடத்தினார். கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் CSC என்ற கல்வி நிறுவனத்துடன் இணைந்து மல்டிமீடியா பயிற்சிகளை அளித்து வந்தார். திரைப்படத்துக்கெனத் தனியாக 'தமிழ் சினிமா' என்னும் இணைய தளத்தைத் தொடங்கி நடத்தினார். தமது நூல்களுக்காகத் தமிழ் வளர்ச்சித் துறை விருது, பாரதி இலக்கியச் செல்வர் விருது, பெரியார் விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றவர். கணினி மற்றும் அச்சு ஊடகம் தொடர்பான பல்வேறு அமைப்புகளில் முக்கியப் பொறுப்புகள் வகித்தவர்.



© TamilOnline.com