சாதனைப் பெண் காவ்யா
டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில், பள்ளியிறுதி வகுப்பு முடித்தவர் 'குறள்' காவ்யா. அவரது சாதனை என்ன தெரியுமா? 1330 திருக்குறளையும் மனப்பாடமாகச் சொல்வதுதான்! எந்தக் குறளை எந்த வரிசையில் கேட்டாலும் அதனைத் தமிழ் மற்றும் ஆங்கில விளக்கத்துடன் தெளிவாகக் கூறுகிறார். பெற்றொருக்கு ஒரே மகளான காவ்யா, 2000ம் ஆண்டு அவரது ஆறாம் வயதில் அமெரிக்காவுக்கு வந்தார். அப்போதே இருபதுக்கும் மேற்ப்பட்ட குறள்கள் மற்றும் தெய்வ வழிபாட்டுப் பாடல்களை மனப்பாடமாக அறிந்திருந்தார்.

"தமிழின் தொன்மையையும் சிறப்பையும் விளக்கத் திருக்குறளை விடச் சிறந்த நூல் வேறில்லை என்பதால், அதைக் கற்றுக் கொடுக்க முடிவெடுத்தோம்" என்கிறார் காவ்யாவின் தாயார் வாசுகி. தினமும் 10 குறள்கள் என அட்டவணை போட்டு கற்றுக் கொடுக்க ஆரம்பித்து ஒரு வருடத்துக்குள் எல்லாக் குறள்களும் மனப்பாடமாகி விட்டனவாம். குறள் எண்ணைக் கூறினால், குறளை விளக்கத்துடன் சொல்லப் பயிற்சி அளித்திருக்கிறார். இதில் வியப்பு என்னவென்றால், இவர்களின் தாய்மொழி தெலுங்கு; வீட்டில் பேசும் மொழியும் தெலுங்குதான்!

குறளின் விளக்கத்தைச் சொன்னாலும் அதன் பொருளை முழுமையாக உணர்ந்து கொள்ள முடியவில்லை என்ற காவ்யாவின் குறை உலகத் தமிழ் அறக்கட்டளை வெளியிட்ட ஆங்கில மொழியாக்கத்தின் உதவியால் தீர்ந்தது. காவ்யா தனது 13ம் வயதில் ஆங்கிலத்திலும் விளக்கம் கூறப் பயின்றார்.

அடுத்த முயற்சி குறளை ராகத்துடன் பாடுவது. தமிழ் நாட்டில் சாந்தா சுப்ரமணியம் அவர்களிடம் கணினி வழியே கற்கத் தொடங்கி, 100 குறள்களுக்கு மேல் ராகத்துடன் பாடத் தேர்ச்சி பெற்றுள்ளார். காவ்யா கர்நாடக இசை, பரதம், கரகாட்டம் ஆகியவற்றிலும் தேர்ச்சி பெற்றிருக்கிறார். ஹுஸ்டனில் நடந்த குடியரசு தின விழாவில் தனது சகோதரியுடன் கரகாட்ட நிக்ழ்ச்சியை நடத்தி பாராட்டுப் பெற்றிருக்கிறார். காவ்யாவும் அவரது சகோதரி ரோஷினியும் கரகத்தைத் தலையில் சுமந்து ஆடத் துவங்கினால் தமிழக கிராமங்களில் நடக்கும் திருவிழாக் கொண்டாட்டத்தில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும்.

காவ்யா டெக்சாஸ் மாநிலக் கல்லூரியில் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளதைத் தெரிவித்தார். தியான முறைகளின் மூலம் நோய்களை கட்டுபடுத்த முடியுமா என்ற ஆராய்ச்சியை மேற்கொள்ள விரும்புகிறாராம்.

யசோதா இளங்கோ,
மிசௌரி

© TamilOnline.com