கவனக் குறைபாடும் மிதமிஞ்சிய துறுதுறுப்பும்
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. அதேபோல, மிகைச் செயல்பாடும் அதே நேரத்தில் கவனக் குறைபாடும் கைகோத்து ஒரு சில குழந்தைகளையும் வயதானவர்களையும் பாதிக்கலாம். Attention deficit/hyperactivity disorder (ADHD) எனப்படும் இந்த நோய் தற்போது குழந்தைகளிடமும், முதியோரிடமும் அதிகம் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நோய் கொண்டவர்களை உளவியல் துறைக்கு அதிகம் காணக்கிடைக்கிறது. ஆறு அல்லது ஏழு வயதுக் குழந்தைகளைப் பள்ளிகளில் ஆசிரியரோ அல்லது மற்ற உறுப்பினரோ கவனித்து வந்தால் இந்த நோய்க்கான அறிகுறிகள் தெரியவரும்.

அறிகுறிகள்
இந்த நோய் உள்ளவர்கள் அதிகத் துறுதுறுப்பு உள்ளவர்களாகவும், கவனக் குறைபாடு மிகக் கொண்டவர்களாகவும், அல்லது இரண்டும் கலந்து இருப்பவர்களாகவும் காணப்படலாம். இரண்டு அல்லது மூன்று வயதிலேயே இந்த நோய்க்கான ஆரம்பக்குறிகள் தெரிய வரலாம். ஏழு வயதுக்கு முன்னர் இது கண்டுபிடிக்கப்படும். நாம் காணவரும் நிலையில் வயதானவர்களிடம் கவனமின்மையும், குழந்தைகளிடம் துறுதுறுப்பும் மேலோங்கிக் காணப்படும்.

கவனக்குறைபாடு அறிகுறிகள்
* கவனக்குறைவால் ஏற்படும் விபரீதங்கள் அதிகரிக்கும். பள்ளிப் பாடங்களில் கவனக்குறைவால் சின்னச் சின்ன தவறுகள் ஏற்பட்டு தேர்வு முடிவு பாதிக்கப்படலாம்.
* மற்றவர்கள் இவரிடம் பேசும்போது, இவர்களின் கவனம் வேறெங்கோ இருக்கும்.
* குறித்த நேரத்தில் வீட்டுப்பாடம் செய்ய முடியாமல் தவிப்பர்.
* உடமைகளைத் தொலைப்பார்கள்; ஒழுங்குபடுத்தும் திறனில் (organization skills) பின்தங்கிக் காணப்படுவர்.
* மறதி அதிகம் இருக்கும். விரைவில் கவனம் வேறு திசையில் சிதறிவிடும்.

மிதமிஞ்சிய துறுதுறுப்பு அறிகுறிகள்
* ஒரு நிமிடம் சும்மா இருக்க முடியாமல் அங்கும் இங்கும் ஒடுவதும், அசைவதும் காணப்படும்.
* பள்ளி வகுப்பில் அமராமல் அடிக்கடி வெளியே செல்வார்கள்.
* தகாத வேளையில் அலைவதும், ஏறுவதும், இறங்குவதும் வழக்கமாகும்.
* மிக அதிகமாகப் பேசுவதும், மற்றவரைப் பேச விடாமல் தடுப்பதும், கேள்வியை முடிப்பதற்குள் விடையைப் பரபரப்பாகச் சொல்வதும், தங்கள் முறை வருவதற்கு முன்னரே முந்திக் கொள்வதும் இவர்களுக்குப் பழகிப்போன விஷயம்.

எது சாதாரணம்? எது அசாதாரணம்?
நம்மில் பலருக்கு இத்தகைய குணங்கள் இருக்கலாம். குழந்தைகளுக்கு அதிகச் சுறுசுறுப்பு இருப்பது சகஜம். கவனக்குறைவும் வந்து போகலாம். அப்போது எது நோய் என்ற கேள்வி வரலாம். இந்த குணங்களின் காரணமாகப் பள்ளியில் சரியாகப் படிக்க முடியாமல், மதிப்பெண் வாங்க முடியாமல், வீட்டுப்பாடம் சரிவரச் செய்ய முடியாமல் போனால் மருத்துவரை நாடுவது அவசியம். தவிர, சமூகச் செயல்பாட்டில் வழிமுறை தவறினால் இந்த நோய் இருப்பதாகச் சந்தேகிக்கலாம். அதாவது, இவர்களுக்கு நண்பர்கள் அதிகம் இருக்கமாட்டார்கள். அடிக்கடி மனக்கசப்பும், உறவு முறிவும் ஏற்படலாம். ஆண் குழந்தைகளிடம் அதிக வன்முறை காணப்படும்.

பக்கவிளைவுகள்
இந்த நோய் காரணமாக இவர்களின் படிப்பு தடைப்படலாம். சமூகக் கோட்பாடுகள் உடைபடலாம். வன்முறை அதிகரிக்கலாம். மன அழுத்தம் மற்றும் அயர்ச்சி ஏற்படலாம்.

காரணங்களும் தீர்வுகளும்
இந்த நோய் பெரும்பாலும் மரபணுக்கள் காரணமாக வரக்கூடியது. கர்ப்ப காலத்தில் தாயார் புகைபிடித்தல், மது அருந்துதல், நச்சுபொருள்களை (toxins) உட்கொள்ளுதல் போன்றவற்றைச் செய்தால் குழந்தைகளுக்கு இந்நோய் ஏற்படலாம்.

இந்த நோய் இருக்கும் பல குழந்தைகள் மருந்தின் உதவி இல்லாமல், தமது அசாதாரண குணாதிசயங்களைப் பழக்கவழக்கத்தினால் மட்டுமே கட்டுக்குள் கொண்டு வரமுடியும். இவர்களில் பலர் வாழ்க்கையில் வெற்றியாளர் ஆகவும் வாய்ப்புகள் உண்டு. ஆனால் ஒரு சிலருக்கு மேற்கூறிய விளைவுகள் ஏற்படலாம். இந்த நோயைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் போகலாம். அப்படிப்பட்டவர்களுக்கு மருந்துகள் தேவைப்படும். மருந்துகள் (Ritalin, Concerta) மூலம் கவனக்குறைவைப் போக்க முடியும். குறிப்பாக உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இந்த மருந்துகள் துணைபுரியும். ஆனால் இவற்றால் பின்விளைவுகள் ஏற்படலாம். உடல் எடை குறைவது, தூக்கம் குறைவது, மனநிலை பாதிக்கப்படுவது போன்றவை நிகழலாம். வயதானவர்கள் பலர் இந்த மருந்துகளுக்கு அடிமையாகலாம். மேலும், இந்த மருந்துகளை எடுத்துக் கொள்வதால் மதிப்பெண் கூடும் என்று எண்ணுவது தவறு.

இந்த நோய் இருக்கிறதா, இவர்கள் குணாதிசயங்கள் இயல்பானவைதாமா என்று கண்டுபிடிக்கச் சில வழிமுறைகள் உள்ளன. அமெரிக்க உளவியல் துறையும், குழந்தைகள் நலத் துறையும் இதற்கெனச் சில பரிசோதனைகளை வகுத்துள்ளன. இவை பெரும்பாலும் கேள்வி பதிலை அடிப்படையாகக் கொண்டவை. அறிகுறிகள் எவ்வளவு அடுத்தடுத்து வருகின்றன என்பதை வைத்தும் இந்த நோய் இருக்கிறதா என்பது முடிவு செய்யப்படும். அதற்குப் பிறகு மருந்து தேவையா என்பது முடிவு செய்யப்படும்.

பிற வழிகள்
தியானம், யோகப் பயிற்சி மூலம் மனதைக் கட்டுக்குள் கொண்டு வரலாம். நல்ல உணவுப் பழக்கம், சீரான உடற்பயிற்சி, வைட்டமின்கள் உதவலாம். சில மூலிகைகள் உதவலாம். மனப் பயிற்சி நல்ல பலனைத் தரும்.

மரு. வரலட்சுமி நிரஞ்சன்

© TamilOnline.com