பேராசிரியர் நினைவுகள்: உவமை - ஆடற்கூத்தியா அஸ்திவாரமா?
நாங்கள் ஆசிரியரிடம் வள்ளுவத்தில் கற்ற பால பாடங்களில் ஒன்று வள்ளுவ உவமை. உவமை என்பது ஓர் அணி மட்டுமே என்ற கருத்தில்தான் அதுவரை இருந்தோம். இருந்தது நாங்கள் மட்டுமல்லாமல், தொல்காப்பியர் உள்ளிட்ட அனைத்து இலக்கண நூலாசிரியர்களும் உவமயியல் என்றும், உவமை அணி என்றுமே சொல்லிப் போயிருக்கிறார்கள். இதில் குறிப்பிடத்தக்கது, அப்பைய தீக்ஷிதர் இயற்றிய சித்திர மீமாம்சையில் வரும் கூற்று. தமிழில் இப்பகுதி இவ்வாறு செய்யப்பட்டுள்ளது:

உவமை யென்னுந் தவலருங் கூத்தி
பல்வகைக் கோலம் பாங்குறப் புனைந்து
காப்பிய வரங்கிற் கவினுறத் தோன்றி
யாப்பறி புலவ ரிதயம்
நீப்பறு மகிழ்ச்சி பூப்ப நடிக்குமே

இதை செல்வக்கேசவ முதலியார் என்பவர் இயற்றியதாகத் தெரியவருகிறது. இந்த இலக்கண வரையறையின்படி, 'உவமை எனப்படும் குற்றம் நிறைந்த கூத்துக்காரி, மிக நேர்த்தியான பற்பல கோலங்களைப் பூண்டு, காப்பியம் என்னும் அரங்கத்தில் மிக்க அழகுடன் தோன்றுவாள்; யாப்பு அறிந்த புலவர் இதயத்தில் நீத்தற்கு இயலாத மகிழ்ச்சி தோன்றுமாறு நடனமாடுவாள், கூத்திடுவாள்' என்றே தொன்றுதொட்டு உவமை, இலக்கண ஆசிரியர்களால் வரையறுக்கப்பட்டு வந்திருக்கிறது. 'உவமை என்பது ஒப்பனைக்கான ஒரு கருவியே' என்பதே எல்லாக் கவிஞர்களும் கையாண்டிருக்கும் உவமைகள் அனைத்துக்கும் பொருந்தி வரக்கூடிய உண்மை. அற்புதமான உவமைகளைக் கையாண்டவன் என்று பாராட்டப்படும் காளிதாசனுடைய உவமைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. உவமை என்பவள் மிக அபூர்வமான அழகுடையவள்; மிக நேர்த்தியாக அரங்கில் தோன்றி நடிக்க வல்லவள். ஆனாலும், தவலருங் கூத்தி. குற்றம் நிறைந்தவள். தவல், தவலரும் என்ற ஆட்சிக்கு, குற்றம்--fault--என்பது பொருள். இவள் ஏன் குற்றம் நிறைந்தவள் என்றால், உவமையை ஓர் அளவுக்குமேல், எல்லைக்குமேல் விரிக்க முடியாது என்பதே. எந்த உவமையாக இருந்தாலும், அதில், பேசப்படும் பொருளுக்கு எது பொருத்தமாக இருக்கிறதோ அந்த அம்சத்தை மட்டுமே கொண்டு, மற்றவற்றை ஒதுக்க வேண்டும். இதில் தெளிவில்லாமல் போனால் 'வதனமே சந்திர பிம்பமோ' பாடல்கூட அதன் பொருளிலிருந்து விலகிப் போகும். 'என்னாப்பா... மூஞ்சி சந்திரனைப் போல இருக்குதாமே? அப்ப இந்த மூஞ்சிக்கு அமாவாசை உண்டா? தேய்பிறை உண்டா? இல்லாட்டி இந்தக் கால விஞ்ஞானிகள் சொல்றாங்களே, அப்படி மேடுபள்ளம் நிறைந்திருக்குமா? அம்மை போட்ட முகமா?' என்றெல்லாம் ஆபத்தாக விரிக்க முடியும். அழகு, ஒளி, குளிர்ச்சி, வட்ட வடிவம்--இவ்வளவு மட்டும்தான் அந்த 'சந்திர பிம்பமோ'வுக்குள் அடங்க முடியும். மற்றவற்றை எல்லாம் அந்தால ஒதுக்கி வச்சுரத்தான் வேணும். குற்றம் நிறைந்த--தவலரும்--கூத்தி என்று சொன்னது பொருத்தந்தானே? குற்றம் நிறைந்ததுதான்; ஆனால் அழகு சேர்க்கவும் வல்லது; புலவர்கள் மனத்தில் எல்லையில்லாத இன்பத்தை ஏற்படுத்துமாறு நடனமாட வல்லது என்றே எல்லா இலக்கண ஆசிரியர்களும்--எந்த மொழியாயினும்--வலியுறுத்தி வந்திருக்கிறார்கள்.

இந்த முன்முடிபை (preconceived or prejudiced notion) முதலில் தலையிலிருந்து இறக்கி வைத்த பின்னரே வள்ளுவத்துள் காலடி எடுத்து வைக்கவேண்டும் என்பது ஆசிரியர் கற்பித்த முதல் பாடங்களில் ஒன்று. 'உவமை என்னும் தவலரும் கூத்தி'யாகவே மற்றவர்களுடைய கவிதைகளில் நடமாடித் திரிந்த 'நாடகக் கூத்தியை' வள்ளுவர் தன்னுடைய மிக முக்கியமான கருத்தறிவிப்புக் கருவியாக (communication tool) பயன்படுத்தியிருக்கிறார் என்பதை உணர்ந்தாலொழிய, வள்ளுவரின் இதயங்காண்பது என்பது, இயலவே இயலாத ஒன்று' என்பார் ஆசிரியர். 'நீங்கள் உவமையைப் பற்றி இதுவரையில் கற்றுக்கொண்டதை எல்லாம் கொஞ்சம் அப்புறத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு, வள்ளுவத்துக்குள் நுழையுங்கள்' என்று திரும்பத் திரும்ப வலியுறுத்துவார்.

'மற்ற அனைத்துப் புலவர்களுக்கும் உவமை என்பவள் தவலரும் கூத்திதான். அணிதான். அலங்காரம்தான். முகப்பூச்சு, உதட்டுப்பூச்சு, நகைகள், நேர்த்தியான ஆடைகள் எல்லாம் தரித்து, மிக அழகாகக் காட்சியளிப்பவள்தான்; ஆனால் தவலரும் கூத்தி. அவளிடத்தில் குற்றம் உண்டு. ஓர் எல்லைக்கு அப்பால் உவமையை விரித்துப் பொருள் காண்பது இயலாத ஒன்று. இது வள்ளுவரைத் தவிர்த்த மற்ற எல்லாக் கவிஞர்களுக்கும் பொருந்தும். ஆனால், வள்ளுவருடைய உவமைகளுக்கு இது பொருந்தவே பொருந்தாது' என்பது அவருடைய ஆணித்தரமான வாதம்; நோக்கு. 'மற்றவர்களுடைய கவிதைகள், காப்பியங்களில் உவமை அணியே என்றாலும், திருக்குறளில், உவமைதான் அஸ்திவாரம். மற்றவர்களுக்கு அது கோபுரத்தில் ஒரு பொம்மை. வள்ளுவத்திலோ, அது கோபுரத்தைத் தாங்கும் அடிக்கட்டு. வள்ளுவ உவமைகளை எல்லையில்லாமல் விரித்துக் கொண்டே போகலாம். அத்தனை விரிவுக்கும் அது விரிவது மட்டுமல்லாமல், அவர் சொல்ல வரும் பொருளோடு ஒத்துப் போகும் என்பதுதான் ஆச்சரியமான உண்மை. இந்த அடிப்படை புரிந்தால்தான் திருக்குறள் புரியும்' என்று நான் அவரோடு பழகிய சுமார் இருபத்திரண்டு ஆண்டுகளில் எத்தனை நூறு, ஆயிரம் முறைகள் சொல்லியிருப்பார் என்பதற்குக் கணக்கில்லை.

அவருடைய கட்டுமான நேர்த்தியைக் (structural beauty) காணவேண்டும் என்றால், அசைநிலைகளைத் தவிர்த்து, அளபெடைகளையும் உம்மைகளையும்கூட மனத்தில் ஆழ நிறுத்திக் கொள்ளவேண்டும். அப்படிப் பார்த்தால்தான் அவர் சொல்லும் அழகு, கேலி, கிண்டல், குத்தல், நயம்பட உரைத்தல், வலியுறுத்துதல் என்று பல்வேறுபட்ட பாவ நயங்களை மனத்தின் அடியாழத்தில் பொருந்த வாங்கிக் கொள்ள முடியும். ஒரேயொரு உம்மையையோ, அளபெடையையோ விட்டுவிட்டால் கூட, குறளுக்குக் கொடுக்க வேண்டிய கவனத்தைக் கொடுக்கத் தவறியவர்களாவோம். அதனால் ஏற்படும் நஷ்டம் நமக்குத்தான். நீங்க எவ்வளவு உயரம் ஏறி முயன்றாலும் வள்ளுவன் சிண்டு உங்க கைக்கு அகப்படாது. அவர் எங்கோ உயரத்தில் நின்னுகிட்டு சிரிச்சிட்டிருப்பார்' என்ற அவருடைய வாக்கியங்கள் எனக்கு எப்போதும் மறக்க முடியாதவை. நிறைய எடுத்துக்காட்டுகள் உண்டு. இப்போதைக்கு ஒரே ஒரு குறளை எடுத்துக்காட்டாகப் பார்க்கலாம்

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.

சூது அதிகாரத்தின் முதற்குறள். 931ம் குறள். 'அப்பா, சூதாடாதே' என்று தொடங்குகிறார். 'வேண்டற்க'; 'வேணாம்ப்பா... அது ஒனக்கு வேணாம்'. தொடங்கும்போதே நம் முகத்தைப் பார்த்துவிடுகிறார் வள்ளுவர். 'ஏன் வேணாம்? ஒக்காந்து ஒரு கை ரம்மி ஆடினா, தாயம் ஆடினா, ஆடுபுலி ஆடினா, குதிரை ரேஸ் ஆடினா, எவ்வளவு பணம் ஜெயிக்க முடியும் தெரியுமாய்யா தாடி!' என்று நம் மனத்துக்குள் குறுகுறுக்கும் நச்சு வாக்கியத்தை அவர் படிக்கவே படித்துவிட்டார்! அடுத்த சீரைப் பாருங்கள். 'வென்றிடினும்'. ஜெயிப்பதாகவே இருந்தாலும். அங்கே 'வென்றிடினும்' என்றொரு உம்மை போட்டார் அல்லவா, (அதாங்க.... அந்தக் கடசி எழுத்தப் பாருங்க... அங்க ஒரு ம் இல்ல, அது) என்ன பொருள் அதற்கு? 'எலேய்! நீ ஜெயிக்க மாட்ட. அப்படியே ஒருக்கால் ஜெயிக்கவே ஜெயிக்கிறன்னு ஒரு பேச்சுக்காக வச்சுக்குவம்' என்ற குத்தல், நையாண்டி, கேலி, இகழ்ச்சிப் புன்னகை எல்லாம் மனத்திரையில் தெரிகிறதா? அந்த ஒரு 'ம்' என்ற எழுத்தைத் தவறவிட்டால் போச்சு, எதுவும் தட்டுப்படாது!

'டே யப்பா, சூதாடினா ஜெயிச்சிரலாம்னு கற்பனை பண்ணாதே. அது ஒன் ஜென்மத்துல நடக்காத காரியம். நீ (ஒன் மொகரக்கட்டக்கு) ஒருவாட்டிகூட சூதாடி ஜெயிக்கப் போறதில்ல. அப்படியே தப்பித் தவறி குருட்டாம் போக்கில் ஏதோ ஒருமுறை நீ ஜெயிச்சுரரேன்னு வச்சி்ப்பம். அப்பக்கூட இந்த சூது வேணாம்ப்பா' என்று அடுத்த அடி விழுகிறது. 'ஏன்யா வேணாம்? ஜெயிச்சா கசக்குதோ? நாய் வித்த காசு குரைக்காது; நரி வித்த காசு ஊளையிடாது. எனக்கு வேண்டியது பணம். அது கிடைக்கும்னா நீ ஏன் குறுக்கால பூந்து தடுக்கற' என்று மனம் முணுமுணுக்கிறதா? சொல்கிறார். 'வென்றதூஉம்' அந்த அளபெடையை கவனியுங்கள். (அளபெடைனா வேற ஒண்ணும் இல்ல... ரொம்ப உயரத்துக்குத் தூக்கிப் போட்டார் என்பதை இந்தக் காலத்தில் எப்படி எழுதுகிறார்கள்? தூஊஊஊஊக்கிப் போட்டார் என்றுதானே? அதுதான் அளபெடை. இங்கே தூ-வில் உள்ள ஊ-வை நீட்டிக் கொள்வதுபோல நீட்டிக் கொள்ள வேண்டும்.) வென்றதும் என்று சொல்லாமல், வென்றதூஉம் என்று நீட்டியதால், விரைவுப் பொருள் சொல்லப்பட்டது. 'எந்த வினாடி ஜெயிக்கிறாயோ, அதே வினாடியில் தோற்கவும் செய்கிறாய்' என்று புதிர் போடுகிறார். 'என்னது! ஜெயிச்சா, ஜோபி நிறைய பணத்த அள்ளித் திணிச்சோமா, வெளில வந்தோமா, அவ்ளோதான். அதுக்கப்புறம் அது எதுக்கு எனக்கு? அப்புறம் எங்க தோப்பு வந்தது? எல்லாம் ஜெயிப்பு மட்டும்தானே' என்று மனம் இடக்கு பண்ணுகிறதில்லையா? அங்கே ஓர் உவமை போட்டார் வள்ளுவர். 'வென்றதூஉம், தூண்டிற்பொன் மீன் விழுங்கிற்று அற்று'. 'எலே ஜெயிப்புன்னா என்னடா? நீ சூதாடி ஜெயிப்பது எப்படித் தெரியுமா? தூண்டிலாக வளைந்திருக்கும் இரும்புத் துண்டை மீன் வந்து கவ்வியதைப் போல. அதை முதலில் புரிந்துகொள்' என்று தாடிக்குள் புன்னகையை ஒளித்துக்கொண்டவாறு நகர்கிறார் வள்ளுவர். (பொன் என்றால் இரும்பு என்றும் பொருள். அதாவது அந்தக் காலத்துத் தமிழ்லனு வச்சுக்கங்களேன்!)

தூண்டிற்பொன் மீன் விழுங்கியற்றா? அது என்னது அது? இங்கே உவமையை விரிக்காவிட்டால் ஒன்றும் புரியாது. குளத்தங்கரைக்குப் போவோம். அங்கே ஒருவன் மீன் பிடித்துக் கொண்டிருக்கிறான். கருமமே கண்ணாக, தூண்டிலில் ஒரு புழுவைச் செருகி (தூண்டிற் புழுவினைப் போல் வெளியே சுடர்விளக்கினைப் போல்--பாரதி பாட்டு நினைவுக்கு வருகிறதா?) தண்ணீருக்குள் தூண்டிலை அதிவேகமாக வீசுகிறான் அவன். அவன் கையில் ஒரு கம்பு. நுனியில் ஒரு கயிறு. கயிற்றின் நுனியில் தூண்டில். தூண்டில் நுனியில் புழு. தண்ணீர் மட்டத்தில் ஒரு தக்கை, அந்தக் கயிற்றில் கட்டப்பட்டு மிதந்து கொண்டிருக்கிறது. 'மீன் சிக்கிவிட்டது' என்பதை அறிவிக்கும் கருவி அது.

குளத்தின் நீர்ப்பரப்புக்கு மேல் அமைதியாகத் தென்படுகிறது. ஆனால் நீர்ப்பரப்புக்கு அடியிலோ, ஆயிரக்கணக்கான மீன்கள், உள்ளே திடுமென்று ஓசையுடன் வந்து விழுந்த தூண்டிலைப் பார்க்கின்றன. அவை தூண்டிலையா பார்க்கின்றன? உண்மையில் அதன் நுனியில் துடித்துக் கொண்டிருக்கும் புழு, 'வா, வா, வந்து என்னைக் கவ்வு' என்று அத்தனை ஆயிரம் மீன்களையும் ஒரே சமயத்தில் தன்னை நோக்கி இழுக்கிறது. 'நீ நான்'என்று போட்டிபோட்டுக் கொண்டு நூறாயிரம் மீன்கள், தூண்டிலை நோக்கிப் பாய்கின்றன. ஒரே ஒரு மீன்தான் வெல்கிறது. அத்தனை மீன்கூட்டத்தையும் எட்டி, நெக்கித் தள்ளிவிட்டு, வெகு சாமர்த்தியமாகப் பாய்ந்து கவ்வி விட்டது! வெற்றிக் கொடி நாட்டியாகிவிட்டது! ஆனால், பறப்பது வெற்றிக் கொடியா அல்லது பற்றிய மீனுடைய உயிரா?

எந்தக் கணத்தில் மீன் அந்தத் தூண்டிலைப் பற்றியதோ, அதே கணத்தில் வெடுக்கென்று தூண்டில் உயர்த்தப்படுகிறது. அடுத்த கணம், நீர் மட்டத்துக்கு வெளியே, இதுவரையில் தான் சுவாசித்தறியாத வெளியில் மூச்சிரைக்கத் துடிக்கிறது மீன். தூண்டில் பிடித்த கை, மீனை லாகவமாக உருவி எடுத்துக் கூடையில் போட்டுக் கொள்கிறது. பிறகு? சில நிமிடங்கள் துள்ளித் துடித்து நெளிந்து எகிறி... என்னென்னவோ செய்து பார்க்கிறது மீன். கூடையின் உயரமோ, அதன் துள்ளலுக்கு எட்டாததாக இருக்கிறது. அதன் கல்லறை, அந்த மூங்கில் கூடைக்குள் முடிந்துவிடுகிறது. அப்புறம் இருக்கவே இருக்கிறது--அண்ணாத்தல் செய்யாது அளறு என்று இன்னொரு குறள் பேசும் 'புலால் உண்ணும் வயிறு என்னும் நரகக் குழி.' வேறு வழி உண்டோ? இப்போது ஜெயித்த மீன் ஜெயித்ததா அல்லது.... தோற்றதா? உயிரையே இழந்தது! தோல்வியைக் காட்டிலும் பெரிதல்லவா மரணம்! உயிரிருந்தால் இன்னொரு முறை ஆடிப் பார்த்துவிடலாம். அதுதான் உயிரே போய்விட்டதே! அப்புறம் என்ன வெற்றி, தோல்வி!

கொழுத்த புழுவுக்குப் பின்னால் இப்படியொரு நரகக் குழி காத்திருக்கிறது என்று தெரிந்திருந்தால், அத்தனை ஆயிரம் மீன்கள் அந்தப் புழுவைக் கைப்பற்ற (இல்லையில்லை, வாய் பற்ற!) விரைந்திருக்குமா, அல்லது, அத்தனை பேரையும் வென்றுவிட்ட மமதையுடன் அந்த மீன்தான் போட்டி போட்டுக்கொண்டு வந்து இதைப் பற்றியிருந்திருக்குமா? எந்தக் கணத்தில் வென்றதோ, அதே கணத்தில் தோற்றது. செத்தும் போனது. உடலும் மிச்சமின்றி தின்று தீர்க்கப்பட்டது!

'சூதும் அப்படித்தானப்பா. ஜெயிச்சுட்டேன்னு நினைக்காதே. எந்தக் கணத்தில் வெல்கிறாயோ, அதே கணத்தில் நீ தோற்கிறாய்' என்று வள்ளுவர் எச்சரிப்பது, இந்த உவமையை முற்றிலும் விரித்துப் பார்த்தாலொழிய எப்படிப் புலப்படும்? அந்த உம்மையையும் அளபெடையையும் விட்டுவிட்டால் வள்ளுவரின் செய்நேர்த்தி எப்படி ரசிக்கும்?

இப்படித்தான் ஒருநாள் பேசிக்கொண்டிருக்கையில், அமுக்கமான கேலிப் புன்னகையுடன் ஆசிரியர் கேட்டார். 'என்னப்பா ஹரி! ஒப்புரவறிதல் படிச்சிருக்கீங்களா?' 'ஓ! படிச்சிருக்கேன் சார்' என்றேன். 'அது சரி. ஊருணி நீர் நிறைந்தற்றே, பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால், மருந்தாகித் தப்பா மரத்தற்றால்' என்று மூன்று குறள் ஒன்றைத் தொடர்ந்து ஒன்று வருகிறதே, மூன்றும் ஒரே பொருளில்தானே பேசப்படுகின்றன? அது எதுக்கு சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்றார்?' என்று கொக்கி போட்டார். அவர் இப்படிக் கொக்கி போடும்போதெல்லாம் அந்த நீலச்சாயம் படிந்த (blue tinted) கண்ணாடியின் வழியே அவருடைய கண்கள் சுருங்கிய வண்ணம் சிரிக்கும். அந்தச் சிரிப்பில், 'எங்கே சொல்லு பாக்கலாம்' என்ற சவால் இருக்கும்.

இந்தக் குறட்பாக்களின் பின்னால் நான் அலைந்த கதையை அடுத்த முறை சொல்கிறேன்.

ஹரி கிருஷ்ணன்

© TamilOnline.com