அடுத்தவர் பலவீனத்தை அணுகத் தெரிய வேண்டும்
அன்புள்ள சிநேகிதியே

நிறைய முறை யோசித்து விட்டுத்தான் இந்தக் கடிதத்தை அனுப்புகிறேன். உங்களுடைய கருத்து என் விஷயத்தில் என்னவாக இருக்கும் என்று தெரிந்துகொள்ள ஆசை. எங்கே 'தவறு செய்கிறேன்' என்பதையும் நீங்கள் கண்டிப்பாக எழுதலாம். எனக்குத் திருமணம் ஆகி 16 வருடங்கள் ஆகிவிட்டன. குழந்தைகள் இரண்டு பிறந்தாகி விட்டது. இருந்தும் எனக்கும் என் கணவருக்கும் உறவுமுறை இன்னும் நிலைப்படவில்லை. எதனால் என்று எனக்கே புரியவில்லை. என்னைப் பொறுத்தவரை யாரும் என்னைக் குறை கூறாத அளவுக்கு நடந்துகொள்வேன். என் அப்பா, அம்மாவோ, ஸ்கூல் டீச்சரோ அல்லது மேற்பார்வையாளரோ யாருமே, என்னை 'ஏன் செய்யவில்லை?' அல்லது 'ஏன் செய்தாய்?' என்று கேட்கும் அளவுக்கு வைத்துக்கொள்ள மாட்டேன். எனக்கு எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு வேண்டும். நியாயம் வேண்டும். வம்பு, தும்பில் கலந்து கொள்ள மாட்டேன். யார் பொருளுக்கும் ஆசைப்பட மாட்டேன். என் கடமையிலிருந்து என்றுமே தவறியதில்லை. ஒரு நல்ல மகளாக, நல்ல மாணவியாக, நல்ல மனைவியாக, தாயாகத்தான் என் பொறுப்புக்களை கவனித்துக் கொள்கிறேன்.

High Profile job அத்துடன் tension சேர்ந்துதான் வருகிறது. இருந்தாலும் வீட்டில் மனைவிக்குரிய கடமைகளைத் தவறியதே இல்லை. சில சமயம் வேலையிலிருந்து களைத்துப் போய் வந்தால் வீடு களேபரமாக இருக்கும். மனதில் எரிச்சல் வரும். இவர் கொஞ்சம் சரி செய்யக்கூடாதா என்று. கேட்டால் "கிடக்கட்டும் விடு. வார நாள்ல யார் வீட்டுக்கு வரப்போறாங்க?" என்று பதில் சொல்லிவிட்டு, தான் விரும்பியதைச் செய்து கொண்டிருப்பார். என்னால் அப்படியிருக்க முடியவில்லை. மாங்கு மாங்கென்று எல்லாவற்றையும் சீர்படுத்துவேன். குழந்தைகளுக்கோ, இவருக்கோ எந்தக் குறையும் வைத்ததில்லை. எப்படிப் பாடுபட்டு உழைத்தாலும் எங்களிடம் ஒரு நெருக்கம் இல்லாத உணர்வு இருந்து கொண்டே இருக்கிறது. இவர் மட்டுமல்ல; இவருடைய தங்கையும் (என்னிடம் ஒரு காலத்தில் நெருக்கமாக இருந்தவள். என்னை தலையில் வைத்துக் கொண்டாடியவள்) ஒரு வருடம் முன்னால் இங்கே வந்து விட்டாள். இந்தியாவிலிருந்து எம்.எஸ். பண்ண இங்கே வந்தபோது அவளுக்கு நான்தான் முழுக்க முழுக்கப் பொறுப்பேற்றுக் கொண்டேன். ஒரு அருமையான பையனை நான் தான் பார்த்துக் கல்யாணத்தை நடத்தி வைத்தேன். இந்த 7 வருடங்களில் எங்கேயோ போய் விட்டார்கள், பணத்திலும் சமூக அந்தஸ்திலும்! இப்போது அவளும் முன்போல் அதிகம் பழகுவதில்லை.

இந்தக் கடிதம் அனுப்புவதன் காரணமே, 'I feel lonely now'. என் குழந்தைகள் டீன் ஏஜர்ஸ் ஆகி விட்டார்கள். என்னுடைய மேற்பார்வை பிடிப்பதும் இல்லை. வாரக் கடைசி தவிர வேறு நாட்களில் தேவைப்படுவதும் இல்லை. நான் எப்போது வேலையிலிருந்து வந்தாலும் வீட்டில் இருக்கும் கணவர், இப்போது அடிக்கடி தங்கை வீட்டுக்குப் போய் விடுகிறார். நானே கேட்டாலொழிய அதைப்பற்றிப் பேசுவதும் இல்லை. அங்கே அவர்கள் அடிக்கடி பார்ட்டி வைக்கிறார்கள். மது, மாமிசக் கலாசாரத்திற்குப் போய் விட்டார்கள். இவர் எப்போதாவதுதான் குடிப்பார். நான் தடுத்ததில்லை. ஆனால், அடிக்கடி அங்கே போய்விட்டு வருவதைப் பார்த்து நான் அவருடைய தங்கைக்கு போன் செய்து நேரிடையாகவே கேட்டேன், 'எனக்குத் தெரியாமல் அண்ணனை மட்டும் அழைப்பது என்ன நாகரிகம்?' என்று. 'அண்ணாவிடம் சொல்லியிருந்தேனே. உங்களுக்கும் சொல்ல. அவர்தான் உங்களுக்கு இதுபோன்ற விஷயங்களில் ஈடுபாடு இல்லை என்றார். அது உண்மைதானே" என்றாள். நான் அவளைப் பற்றிக் குறை சொல்லவில்லை. இவருக்கு என்னிடம் ஏன் ஒரு பிடிப்பு இல்லாமல் இருக்கிறது என்று குழம்புகிறேன்.

இப்படிக்கு
................

அன்புள்ள சிநேகிதியே

உங்கள் கடிதத்தைப் படிக்கும்போது எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஒரு ரெயில் சிநேகிதி ஞாபகத்திற்கு வருகிறாள். பலப்பல வருடங்களுக்கு முன்னால் - சென்னையிலிருந்து திருச்சிக்குத் தனியாகப் போய்க் கொண்டிருந்தேன். விழுப்புரத்தில் மூன்று பேர் என் பெட்டியில் ஏறினார்கள். நல்ல கிராமத்துக்காரர்கள். ஒரு திருமணமான பெண், வயதான தம்பதியர்கள். பக்கத்தில் இடம் இருந்தும் அந்த மூதாட்டி அந்தக் கணவரின் அருகில் உட்காராமல் எனக்கு எதிரில் அமர்ந்தாள். அந்தப் பெண் எனக்கு எதிரில். என்னைப் பார்த்துச் சிரித்தாள். நான் குனிந்துகொண்டே இருக்க (iPad, laptop இல்லாத காலம் அது) நானும் நிமிர்ந்து பதிலுக்குப் புன்னகைத்தேன். அந்த எளிமை, கிராமத்து வாசனையுடன் அவள் தன் குடும்பத்துக் கதை பற்றிப் பேச ஆரம்பித்தாள். வயதான அந்த மனிதர் அவள் தந்தை. குடிப்பழக்கம் உள்ளவராம். அதனால் அவள் அம்மா அவருடன் பேசுவதையோ, அவருடன் கூட வருவதையோ தவிர்த்தாள். இவளுடைய அக்கா வீட்டில் ஒரு சடங்காம். கண்டிப்பாகப் போக வேண்டிய நிலையில் இவளுடன் சேர்ந்து வந்திருக்கிறார்கள். அக்காவை மாமாவுக்குக் கட்டி வைத்திருக்கிறார்கள். இவளுக்கு வெளியிலே தான் மாப்பிள்ளை. அதுவும் இவள் அம்மா வரப்போகின்ற மருமகனுக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இருக்கக் கூடாது என்று மிகமிகக் குறியாக இருந்து இவள் கணவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறாள்.

இவள் கணவர் ஒரு பொலீஸ்காரர். எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது. லஞ்சம் வாங்க மாட்டாராம். எல்லாவற்றிலும் மிக கட்டுப்பாட்டுடன் இருப்பாராம். 'நீங்கள் ரொம்ப அதிர்ஷடசாலி' என்றேன். உடனே "உங்களுக்குக் கல்யாணம் ஆகி விட்டதா?" என்று கேட்டாள். "இல்லை" என்றேன். "அப்போ என் அதிர்ஷ்டம் உங்களுக்கு வர வேண்டாங்க" என்றாள். ஒரு நொடி நேரம் குழம்பிப் போய்விட்டேன். "ஆமாங்க. எங்க அம்மா எனக்கு நல்லது செய்றேன்னுட்டு என் சந்தோஷத்தைக் கெடுத்துட்டாங்க. பொம்பளைங்கன்னா கொஞ்சம் ஊட்டுக்காரருக்குத் தெரியாம அங்க, இங்கன்னு காசு சேர்ப்பாங்க. வட்டிக்கு விடுவாங்க. மத்தியானம் சினிமா போய்ட்டு வருவாங்க. அக்கம் பக்கம் கூடிக் கொஞ்சம் தமாசா பேசிக் கிட்டு இருப்பாங்க. ஆனா, என் வீட்டுக்காரர் ரொம்பக் கண்டிப்பு. அங்க இங்கன்னு வம்படிச்சிட்டு இருக்காதே. இருக்குற நேரத்துல வீட்டை சுத்தம் பண்ணு. குழந்தைங்களுக்கு படிப்பு சொல்லிக்கொடுன்னு அதிகாரம் பண்ணிட்டு இருப்பாரு. இவருக்குத் தெரியாம நாம ஒண்ணும் செய்ய முடியாதுங்க. அவரு ஏதாவது தப்புத் தண்டா பண்ணினால் நாம திருப்பிக் கேட்கலாம். நாம எப்பவுமே குற்றவாளிக் கூண்டிலே நிக்குற மாதிரி ஆயிடும். மனுஷங்கன்னா ஏதானும் 'வீக் பாய்ண்ட்' இருக்கணும். அப்பத்தாங்க நம்ப சின்னச் சின்ன ஆசையெல்லாம் பூர்த்தியாகும். இல்லாட்டி வாழ்நாள் பூரா பொய் சொல்லிக்கிட்டுதான் இருக்கணும். இப்போக் கூட ஏதேதோ சொல்லித்தான் எங்க அப்பா அம்மாவோட ஒட்டிக்கிட்டு வந்துட்டேன். இல்லாட்டி ஒரு கணக்கு வாத்தியார் மாதிரி எல்லத்தையும் ஒப்பிச்சாகணும். நீங்களே சொல்லுங்க. நான் சொல்றது நியாயமா, இல்லையான்னு" என்று தன்னுடைய கருத்தைச் சொல்லி முடித்துவிட்டாள். எனக்குள் ஒரு பொறி தெரித்து நான் யோசித்தேன்.

ஒருவரது பலவீனம் மற்றவருக்கு சக்தியைக் கொடுக்கிறது. ஒருவரது சக்தி மற்றவருக்கு பலவீனத்தை அதிகரிக்கிறது. அப்போது உறவுகள் எப்படி பாதிக்கப்படுகின்றன! நம்முடைய சக்தியை மட்டும் புரிந்துகொண்டு பிறரது பலவீனத்தைத் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறோமோ, இல்லை சகித்துக் கொள்ளாமல் இருக்கிறோமோ, இல்லை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறோமோ? பிறருடைய பலவீனத்தை அணுகும் முறை தெரியாவிட்டால் நம்முடைய சக்தி புரிந்தாலும் நமக்கும் அது ஒரு பலவீனம் தான். You are an intelligent person. You will understand. உங்கள் வெறுமை விலக என் வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள்
சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com