ஹெப்சிபா ஜேசுதாசன்
தமிழ்ப் புதின எழுத்தாளர்களில் குறிப்பிடத் தகுந்த பெண்மணி ஹெப்சிபா ஜேசுதாசன். இவர் 1925ல் பர்மாவில் பிறந்தார். தந்தை தங்கக்கண் பர்மாவில் ஒரு நன்கறியப்பட்ட ஆசிரியர், புத்தக ஆர்வலர். பள்ளிப்படிப்பு முதலில் பர்மாவிலும் பின்னர் நாகர்கோவிலிலும் நடந்தது. ஆங்கிலவழிக் கல்வி பயின்றதால் அதில் தேர்ந்தவரானார். பத்து வயதிலேயே பள்ளி இதழில் ஆங்கிலக் கவிதை, கட்டுரைகள் வெளியாகின. தொடர்ந்து ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரியில் இன்டர்மீடியட் வகுப்பில் படித்து மாநிலத்திலேயே முதலாவதாக வந்தார். அதன்பின் திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் ஆனர்ஸ் பட்டம் பெற்றார். அவர் வாசித்த அயல்நாட்டு எழுத்தாளர்களின் நூல்கள் இலக்கிய ஊற்றுக் கண்களைத் திறந்து விட்டன. ஆங்கிலத்தில் நிறைய எழுதத் தொடங்கினார்.

பேராசிரியர் ஜேசுதாசனுடன் திருமணம் நிகழ்ந்த அதே சமயத்தில் திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரியில் பேராசிரியர் வேலை கிடைத்தது. ஜேசுதாசன் தமிழ்ப் பேராசிரியர். சங்க இலக்கியத்திலும், கம்பனிலும் தோய்ந்தவர். முறையாக இசை பயின்றவர். ஜேசுதாஸனுக்குத் தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும் என்று வெகு தீவிர ஆவல் இருந்தது. அது ஹெப்சிபாவின் வரவினால் சாத்தியமானது. 'முதற் கனி', பாரதியாரின் 'குயில் பாட்டு' (Songs of The Cuckoo and Other Poems) போன்றவற்றை ஹெப்சிபா ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். தமிழ் இலக்கிய வரலாற்றை மொழிபெயர்த்து ஆங்கிலத்தில் வெளியிட்டார். இம்முயற்சிகளே, பிற்காலத்தில் தமிழின் சிறந்த இலக்கிய படைப்புகளைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்துத் தொகுத்து 'Count down from Solomon' என்ற தலைப்பில் நான்கு தொகுதிகளாக வெளியிடக் காரணமாக அமைந்தது.

ஜேசுதாசன் கதைகள் எழுதவும் ஹெப்சிபாவை ஊக்குவித்தார். அதன் விளைவாக எழுதப்பட்டதுதான் அவரது முதல் புதினமான 'புத்தம் வீடு'. கன்னியாகுமரி மாவட்ட நாடார் இனத்தவரின் பேச்சுமொழியில் வெளியான முதல் நாவல் என்பதோடு, நாடார் சமுதாயத்தின் வாழ்க்கையைப் பதிவாக்கிய முதல் நாவல் என்ற சிறப்பையும் இது பெற்றது.
ஹெப்சிபா அப்புதினம் குறித்து, "புத்தம் வீடு நாவலில் இருந்த புதுமை எல்லோருக்கும் பிடித்திருந்தது. அதில் அதுவரை யாருமே சொல்லாத வட்டாரச் சொல் வழக்கைப் பயன்படுத்தி எழுதியிருந்தேன். கல்வி அறிவில்லாத சமுதாயத்தைப் பற்றிச் சொல்லியிருந்தேன். அது 'இப்படியும் ஒரு சமுதாயம் உண்டா?' என்று வாசகர்களிடையே கேள்வி எழுப்பியது" என்கிறார். பல இலக்கியவாதிகளால் அது கூர்ந்து கவனிக்கப்பட்டது.

ஆனாலும் தொடர்ந்து தமிழில் புதினங்கள் எழுத ஹெப்சிபா விரும்பவில்லை. ஜேசுதாசன் விடாது கொடுத்த ஊக்கத்தினால்தான் 'டாக்டர் செல்லப்பா', 'அநாதை', 'மா-னீ' போன்ற புதினங்கள் வெளியாகின. இவற்றில் பெண் பாத்திரங்கள் சிறப்பாகப் படைக்கப் பட்டிருந்தன. புத்தம் வீட்டின் லிஸி, மா-னீ நாவலில் வரும் மா-னீ போன்ற பாத்திரங்களைக் குறிப்பிடலாம். 'புத்தம் வீடு' பின்னர் ஆங்கிலத்தில் 'Lissy's Legacy' என்ற பெயரில் வெளியிடப்பட்டது. சில கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட்டது. "வட்டார வழக்கு என்றும் கொச்சைமொழி என்றும் முத்திரை குத்தி மண்ணின் மணம் கொண்ட படைப்புகளை நிராகரித்து வந்த காலகட்டத்தில் வெளிவந்த புத்தம்வீடு ஒரு முக்கியமான முன்னுதாரணமாக அமைந்து இலக்கிய வளர்ச்சிக்கு வித்திட்டது" என்கிறார் நீல. பத்மநாபன். "மொழிபற்றி உருவாக்கியிருந்த பிரமைகளை உடைத்து அசலான வாழ்க்கையை எழுத்தில் வைத்த முக்கியமான இலக்கியப் படைப்பு இது" என்பது எழுத்தாளர் ஆ. மாதவனின் கருத்து. இவை தவிர 'An early Sheaf', 'Sky Lights', 'Grandma's Diary' என்ற ஆங்கிலக் குறுங்கவிதைகளை எழுதியிருக்கிறார் ஹெப்சிபா. இவரது 'Grandma's Diary' நூலுக்கு, ஹெப்சிபாவின் மாணவியான திருவாங்கூர் இளவரசி கௌரி லக்ஷ்மிபாய் முன்னுரை அளித்திருந்தார். "en-Exercises" என்பது ஆங்கிலக் கட்டுரைகள் கொண்ட நூல். 'Tit-bits for Tinytots', 'Story Times Darlings" போன்றவை குழந்தைகளுக்கான நூல்களாகும்.

எழுத்து பற்றிய ஹெப்சிபாவின் கருத்து கவனத்தில் கொள்ளத்தக்கது. "எழுதுறது பெரிய விஷயம் இல்லை. ஆனால் எழுதறவங்களுக்கு ஒரு மேதைத்தன்மை இருக்கணும்கிறதுதான் என்னோட அபிப்பிராயம். இப்ப முட்டையை எடுத்துகிட்டோம்னா வெள்ளைக்கருதான் அதிகமா இருக்கு. ஆனால் மஞ்சள் கருதான் முக்கியம். முட்டையில இருக்கிற மஞ்சள்கரு போலத்தான் மேதைத்தன்மை. நாவலில் உண்மைத்தன்மை இருக்கணும். சமுதாயத்தைப்பத்திச் சொல்லியிருக்கணும். நாவலில் யதார்த்தம் வெளிப்படணும்" என்கிறார். கம்ப ராமாயணத்தின் மீது ஹெப்சிபாவுக்கு ஆர்வம் அதிகம். அவர் எழுதிய 'Count down from Solomon' நூலின் மூன்றாவது தொகுதி முழுவதும் கம்ப ராமாயணத்தின் தேர்ந்தெடுத்த பகுதிகளின் ஆங்கில மொழிபெயர்ப்பாகும். கம்பன் குறித்து ஹெப்சிபா ஜேசுதாசன், "தமிழ்ல கம்பனில் இல்லாதது எதுவும் இல்லை. தமிழ் இலக்கியம் என்றால் அது கம்பன்தான். என்னைப் பொறுத்தவரை சமுதாயம் ஆகட்டும், நட்பாகட்டும், போர் ஆகட்டும், கம்பராமாயணத்தில் ஒவ்வொரு வார்த்தையும் வாழ்க்கைதான்.... கம்பராமாயணத்தில் ஒரு சொல்கூட வீணான சொல் கிடையாது. அதிகப் பிரசங்கம் என்பார்களே, அது கம்பராமாயணத்தில் கிடையாது. கம்பன் பல்வேறு கவனங்களில் நம்மை ஈர்க்கும்போது காவியத்தை வேண்டுமென்றே நீள வைக்கிறான். அது சபையின் தேவை. கம்பராமாயணத்தின் சில அழகுகள் சிலருக்கென்றே அமைக்கப்பட்டன. கேட்போரை ஈர்க்கவேண்டும். அழகு மந்திரத்தால் கட்டுப்படுத்தவேண்டும். இதெல்லாம் இல்லாமல் அன்று கம்பன் கவியாக இருந்திருக்க முடியாது. கம்பனின் மகா காவியப் பரப்பில் நாம் உற்று நோக்குகிற அனுபவம், ஷேக்ஸ்பியரின் நாடக சாகரத்தில் பார்க்கிற அனுபவத்தைப் போலிருக்கும்" என்கிறார் 'தீராநதி' இதழுக்கு அளித்த நேர்காணலில்.

தனது படைப்பிற்காக 'விளக்கு' விருது பெற்றவர் ஹெப்சிபா ஜேசுதாசன். ஆனாலும் விளம்பர வெளிச்சம் தன்மீது விழுவதை விரும்பாமலேயே வாழ்ந்து வந்தார். கணவர் ஜேசுதாசன் 2002ல் மறைந்த பிறகு தனது வெளிவட்டாரப் பழக்கங்களைக் குறைத்துக் கொண்ட ஹெப்சிபா, வேத வசனத்தைப் படிப்பதை மட்டுமே தினசரிக் கடமையாகக் கொண்டார். உடல்நலிவுற்ற அவர் தனது 88ம் வயதில் பிப்ரவரி 9, 2012 அன்று தனது சொந்த ஊரான புலிப்புனத்தில் காலமானார். இவர் மகன் டாக்டர். தம்பி தங்ககுமார் கல்லூரிப் பேராசிரியர். குறைவான ஆனால் நெஞ்சில் நிற்கும் படைப்புகளைத் தந்தவர் ஹெப்சிபா ஜேசுதாசன்.

அரவிந்த்

© TamilOnline.com