சான் ஹோசே: பாலாஜி கோவில் கும்பாபிஷேகம்
2012 மே 30ல் தொடங்கி ஜூன் 3 வரை, சான் ஹோசேவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ பாலாஜி ஆலயத்தின் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முதல் நாள் கணபதி-வாஸ்து ஹோமத்துக்குப் பின், இறைத் திருவுருவங்கள் சன்னிவேலில் இருந்து கொண்டுவரப் பட்டன. மறுநாள் சுதர்சன ஹோமமும், பலவகை திரவியங்களால் அபிஷேகமும் நடைபெற்றன. மூன்றாம் நாளில் மஹா சண்டி ஹோமம் மற்றும் லலிதா சஹஸ்ரநாம பாராயணம் நடைபெற்றன. அத்துடன் சுமித்ரா சக்ரவர்த்தி இனிய பஜனை பாடினார்.

நான்காம் நாள் காலையில் ஏகாதச ருத்ர ஹோமம் நடைபெற்றது. பின்னர் மாலை வரையில் பல கலைஞர்களின் பாடல், ஆடல் நிகழ்ச்சிகள் மாலைவரை நடைபெற்றன. இதில் கலைப்பள்ளிகள் பலவற்றிலிருந்து கலைஞர்கள் பங்கேற்றனர். முதல் பாலாஜி மஹாலக்ஷ்மி திருமஞ்சனத்துடன் அன்றைய நாள் நிகழ்ச்சிகள் நிறைவுபெற்றன.

இறுதி நாளன்று பிராண பிரதிஷ்டையும் மஹா கும்பாபிஷேகமும் நடைபெற்றன. அதன்பின் சுவாமி ஹரிஹரகுமார் மகராஜ் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்தார். பிரசாத் பண்டார்க்கர் புல்லாங்குழல் கச்சேரி செய்தார். பின்னர் கோவில் கமிட்டிச் செயலர் கிருஷ்ணசீலம் கோவில் வந்தவிதம்பற்றி விளக்கிப் பேசினார். பல உள்ளூர்ப் பிரமுகர்களும், அரசு அலுவலர்களும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். சுவாமி ஹரிஹரகுமார் மகராஜ், பிரபு கோயல், ஹகேஷ் நிஹலானி, கான்சேன் சூ, ஆஷ் கால்ரா, நாகேஷ்வர் பார்த்தசாரதி (இந்திய கான்சல் ஜெனரல்), டேவ் கோர்டிஸ், பாப் வியகோவ்ஸ்கி, அனு நடராஜன், ஜோஸ் எஸ்டீவ்ஸ், ஆலிசன் மெக்இன்னிஸ் ஆகியோர் உரையாற்றினர். அன்று மதியம் பண்டிட் ஹபீப் கானின் மாணவர்கள் பஜனை பாடினர்.
மாலையில் பாலாஜி கல்யாண உத்சவம், ஸ்ரீ சத்யநாராயண பூஜை மற்றும் குருபூஜை ஆகியவை நடைபெற்றன.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com