NJTS: இரண்டு சொற்பொழிவுகள்
ஜூன் 3, 2012 அன்று நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம், பிளெய்ன்ஸ்பரோ நடுநிலைப் பள்ளியில் சிறப்புக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. அதில், முனை. ஞானசம்பந்தம் மற்றும் தமிழகத்தில் பழுதடைந்த கோயில்களைப் புனரமைத்துத் திருப்பணி செய்துவரும் மகாலட்சுமி சுப்ரமணியன் ஆகியோர் உரையாற்றினர்.

மகாலட்சுமி சுப்ரமணியன் தமிழகத்தின் கலாசாரச் சின்னங்களாக விளங்கும் கோயில்கள் எவ்வாறு அழிந்து கொண்டிருக்கின்றன, அவற்றைப் புனரமைப்பதும் பராமரிப்பதும் எப்படி என்பது குறித்துப் பேசினார். கடந்த எட்டு வருடங்களில் கிட்டத்தட்ட நாற்பது பாழடைந்த கோயில்களைப் புனரமைத்துக் குடமுழுக்கு செய்து கொடுத்ததோடு மேலும் 39 கோயில்களில் இப்பணிகளைச் செய்துவரும் அவர் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். கழுக்காணிமுட்டம் என்ற இடத்தில் செப்பனிடத் தோண்டியபோது பல சிலைகளும் நூற்றுக்கும் மேற்பட்ட செப்பேடுகளும் கிடைத்ததாகக் கூறினார். இந்தச் செப்பேடுகள் 2010ம் ஆண்டு நடந்த செம்மொழி மாநாட்டில் மக்களின் பார்வைக்காகத் தமிழ்நாடு தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகத்தால் வைக்கப்பட்டிருந்த செய்தியைத் தெரிவித்தார். (இந்தத் திருப்பணியில் அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் பங்கேற்க விரும்பினால் arpanausa@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.)

பின்னர் பேசிய முனை. ஞானசம்பந்தம் தமக்கே உரிய நகைச்சுவை பாணியில் 'தமிழுக்கு இத்தனை முகங்களா?' என்ற தலைப்பில் பல சுவையான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். அவரது பேச்சை njtamilsangam.org/web/video-gallery என்ற காணொளியில் காணலாம். சங்கத் தலைவர் தேவி நாகப்பன் வரவேற்புரையும் துணைத்தலைவர் கவிதா ராமசுவாமி நன்றியுரையும் ஆற்றினார்கள்.

பாலாஜி ஸ்ரீனிவாசன்,
நியூ ஜெர்சி

© TamilOnline.com