புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு 2012.
2012 ஜூன் 8, 9, 10 நாட்களில் புலம்பெயர்ந்த தமிழ்க் குழந்தைகளுக்குச் சென்ற 13 ஆண்டுகளாகத் தமிழ் கற்பித்து வரும் கலிஃபோர்னியா தமிழ்க் கழகம், உலகளாவிய தமிழ்ப் பள்ளிகளுடன் இணைந்து 'புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு 2012' ஒன்றை சான் ஃபிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதி சான்ட கிளாரா கன்வென்ஷன் சென்டரில் நடத்தியது. 'சவால்கள், நோக்குகள், சாத்தியங்கள்' என்ற கருப்பொருளில் இம்மாநாடு நடத்தப்பட்டது. இந்தியக் கான்சல் ஜெனரல் ஆனந்த் குமார் ஜா, ஃப்ரீமாண்ட் துணை மேயர் அனு நடராஜன், ஐ.எம். பாஸ்கர், ஜேமீ மெக்லியாடு, டாக்டர். ஜார்ஜ் ஹார்ட் ஆகிய முக்கியப் பிரதிநிதிகள் துவக்க விழாவில் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் 30 கட்டுரைகள் ஐந்து தலைப்புகளின் கீழ் வாசிக்கப்பட்டன. கற்பதில் உள்ள சிக்கல்களை மாணவர்களும், பயிற்றுவிப்பதில் உள்ள சிக்கல்களை ஆசிரியர்களும் கூற, கல்வி சார்ந்த ஏனைய கருத்துக்களும் விவாதிக்கப்பட்டன.

மாநாட்டின் ஆசிரியர் பயிற்சிப் பகுதியில் சுமார் பதினாறு ஆசிரியர் பயிற்சிப் பட்டறைகள் நடந்தன. பிறமொழி ஆசிரியர்களும் இவற்றில் கலந்து கொண்டனர்.

இம்மாநாட்டின் ஆய்வரங்கக் குழு கீழ்க்கண்ட தலைப்புகளில் சமர்பித்தது: தமிழ்க் கல்விக்கான கருவிகள், உத்திகள், தொழில் நுட்பங்கள் (Tools, techniques and technology in Tamil education); பயன்மிக்க பாடத் தொகுப்புகளும், திட்டங்களும் (Effective syllabus and curriculum); தமிழ்க் கல்வியில் கலை, சமூகம், கலாசாரத் தாக்கங்கள் (Art, social and cultural influences in Tamil education); தமிழ்க் கல்விக்கான வலையமைப்பு உருவாக்கம் (Building a world Tamil education Network).
ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, மலேசியா, இந்தியா போன்ற நாடுகளிலிருந்து அறிஞர் பெருமக்கள் பங்கேற்றனர். அமெரிக்காவிலிருந்து வாசு ரங்கநாதன் (பென்சில்வேனியா); சாய் கிருஷ்ணன், குமரன் சந்தானம், ராஜாமணி (கலிஃபோர்னியா); நிவேதிதா ஜெயசேகர், பிரணவ் நாகராஜன், பவித்ரா நாகராஜன், சந்தியா மாணிக்கம், அஷ்வினி வேல்சாமி, இலக்கியா பழனிசாமி, கார்த்திகா செல்வகணேசன், ரம்யா ஆரோப்ரேம், ப்ரீத்தி பத்மநாபன், அறிவன் தில்லைக்குமரன், ஆரணி உதயகுமார் (கலிஃபோர்னியா தமிழ்க் கழகப் பட்டதாரிகள்) ஆகியோரும் கட்டுரை சமர்ப்பித்தனர்.

டாக்டர். மரியா, டாக்டர். கௌசல்யா ஹார்ட், மீனாக்ஷி சபாபதி, கல்பனா செல்வராஜ், டாக்டர். ரா. சிவகுமாரன், அன்பு ஜெயா, டாக்டர். சீதாலக்ஷ்மி, சிவநேசன் சின்னையா, டாக்டர். ராக்கப்பன் வேல்முருகன், குணசேகரன் சின்னையா, முத்து நெடுமாறன், சாமிகண்ணு, கனாஸ் முருகன், சுப்ரமணியன் நடேசன் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பயிலரங்கங்கள் நடத்தினர்.
பல்வேறு நாடுகளின் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் 107 கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. 1400 மாணவர்களும் 6000 பார்வையாளர்களும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.

மாநாட்டு தலைவர் செல்வி ராஜமாணிக்கம் அவர்கள் தலைமையில் லோகநாதன் வெங்கடாசலம் (ஏற்பாடுகள்), ஆண்டி நல்லப்பன் (தொழில்நுட்பம்), இளங்கோ மெய்யப்பன் (ஆய்வுக்கட்டுரைகள்), இந்திரா ஜம்புலிங்கம் (கலைநிகழ்ச்சிகள்), நாகலட்சுமி ஆரோப்ரேம் (ஆசிரியர் பயிலரங்குகள்), செந்தில் சதாசிவம் (அயல்நாட்டு தொடர்பு), ஸ்ரீவித்யா வேலுச்சாமி (நிதி நிர்வாகம்), தமிழரசி அண்ணாமலை (இடவசதி மற்றும் விருந்தோம்பல்), நித்யவதி சுந்தரேஷ் (பொதுஜனத் தொடர்பு), பிரபு வெங்கடேஷ் (நிதி) ஆகியோர் பல்வேறு குழுக்களுக்குத் தலைமையேற்றுச் செயல்பட்டனர்.
இதுவரை கலிபோர்னியா தமிழ்க் கழகம் என்று வழங்கப்பட்ட இப்பள்ளி இனி 'தமிழ் மரபுக் கல்விக் கழகம்' (Tamil Heritage Academy) என்கிற பெயரில் அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

© TamilOnline.com