சின்மயா மிஷன்: நாட்டிய நிகழ்ச்சி
ஜூன் 10, 2012 அன்று டியான்ஸா கல்லூரியின் ஃப்லின்ட் சென்டர் கலையரங்கத்தில் சான்ஹோஸே சின்மயா மிஷனின் புதுக்கட்டிட நிதிக்காக நாட்டிய நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. துளசிதாசர் இயற்றிய 'கோபால..' என்னும் பாடலை பூஜ்யஸ்ரீ தேஜோ மயானந்த ஸ்வாமிகளுடன் 11 சின்மயா மாணவர்கள் தச பக்தியைப் பற்றிய ஸ்லோகத்துடன் பாடினர். ஸ்ரீஜெயதேவர் இயற்றிய 'ப்ரளய பயோதிசலே' எனும் அஷ்டபதியில் தசாவதார நிகழ்ச்சிகளை பரதநாட்டியம், ஒடிஸி, மோஹினி ஆட்டத்தில் ஆடியவிதம் அருமை. நரசிம்மாவதாரம் மிகவும் தத்ரூபம். அடுத்து ஸ்ரீ வல்லபாச்சார்யாரின் மதுராஷ்டகத்திற்கு ஆடிய கதக் நடனம் வெகு அழகு. கஜேந்திர மோட்சத்தை ஒரியா பஜன் பாடல் மூலம் ஒடிஸி, குச்சிப்புடி நடனத்தில் அளித்தது அருமை. சுந்தர நந்தகுமார் ஊத்துக்காடு பாடல் மூலம் ஸ்ரீ ராஜகோபாலனுக்குப் பூஜை செய்த விதம் தத்ரூபமாம். சுதாமா, கிருஷ்ணைன் நட்பை மோஹினி ஆட்டத்தில் அழகாகச் சித்திரித்தனர். இறைவனிடம் சரணாகதி அடைதலைப் பற்றியும், யசோதாவின் தாயன்பையும் கிருஷ்ணனின் குறும்புகளையும் 'விஷமக்காரக் கண்ணா' பாடலில் தமிழ், தெலுங்கு, சம்ஸ்கிருதத்திலும் பாடிய விதம் அருமை. ஸ்ரீ நாராயண தீர்த்தரின் ருக்மிணி கல்யாணம் பாடலில் குச்சிப்புடி நடனம் சிறப்பு. தொடர்ந்த ராம பஜன் அவையோரை நெகிழச் செய்தது.

ராஸ கர்பா நடனத்தின் மூலம் கோபிகைகளின் கிருஷ்ண பக்தியைக் காண்பித்த விதம் உயர்வு. இறுதியில் 'கிருஷ்ணம் வந்தே ஜக்தகுரும்' என்ற கிருஷ்ணாஷ்டக வரிக்கு எல்லா வகை நாட்டியங்களும் ஆடி நிகழ்ச்சியை நிறைவு செய்தனர். இசை, நட்டுவாங்கம், பக்கவாத்தியம் என அனைத்தும் சிறப்பாக இருந்தன.

சீதா துரைராஜ்,
சான் ஹோசே, கலிஃபோர்னியா

© TamilOnline.com