ஜூன் 16, 2012 அன்று சாரடோகா மெகஃபீ அரங்கில் ராகமாலிகா இசைப் பள்ளியின் இருபதாண்டு நிறைவை முன்னிட்டு நிறுவனர் ஆஷா ரமேஷ் மற்றும் மாணவர்கள் இணைந்து இசை விருந்தளித்தனர். துவக்கமாக 'ஆபரணாலங்கிருதம்' அமைந்தது. 'ரத்ன மாலா' என்பதற்கேற்ப ஆதிசங்கரர் இயற்றிய கணேச பஞ்சரத்னம், பின்னர் 'நூபுரம்' பகுதியில் ஸ்வரமாலிகாவில் சாகித்யமின்றி ஸ்வரங்கள் மூலம் பாவம் தரமுடியும் என்பதை மாணவர்கள் நிரூபித்தனர். 'கங்கணம்' பகுதியில் ரூபக தாளத்தை அமைத்துப் பாடிய விதம் சிறப்பு. தொடர்ந்த 'கிரீடம்' பகுதியில் நசிகேததாஸ் வழங்கிய ஹிந்துஸ்தானி இசை, விவேக் ததாரின் ஹார்மோனியம், ரவி குடாலாவின் தபலா சகிதம் அரங்கில் குளுமையைத் தவழவிட்டது.
புஷ்ப அலங்கிருதம் நிகழ்ச்சியில் சம்பக புஷ்பத்தை ஆதாரமாகக் கொண்டு வேங்கடகிரி செங்கமலக் கண்ணனை ஐவர் பாடிய ஷண்முகப்ரியா ஆலாபனை, நிரவல், ஸ்வரம் இருவர் இருவராய்ப் பாடிய பின் ராமர் பாடலைப் பாடியது சிறப்பு. தனி ஆவர்த்தனம் வாசித்த இளம் வித்வான் விக்னேஷ் சுப்ரமண்யத்தின் வாசிப்பு, வயலின் இசை யாவும் சுகம். பின் 'செவந்திகா'வில் 8 மாணவர்கள் சேர்ந்து தில்லானா பாடி முருகன், மாதவன், ஸ்ரீ ராஜராஜேஸ்வரி, ஆஞ்சநேயர் பற்றிப் பாடி மாதா, பிதா, குரு, தெய்வம் என முடித்தது இதம். தொடர்ந்த 'கதம்ப' நிகழ்ச்சியில் தமிழ், ஹிந்தி, ஆங்கிலப் பாடல், பஞ்சாபிப் பாடல்களை பாடி, ஒவ்வொரு முறையும் 'கபாலி'யை மோகன ராகத்தில் பாடியது அருமை. இதை வடிவமைத்த கார்த்திக் சந்திரன், ரோஹித் ஜயராமன், ஸ்வேதா பாலகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டத் தகுந்தவர்கள்.
இறுதியாக, ஆஷா ரமேஷ் 'ராகமாலிகா' என்ற பெயருக்கேற்ப முழுவதும் ராகமாலிகையாகவே பாடினார். ரஞ்சனி, ஸ்ரீ ரஞ்சனி, ஜனரஞ்சனி, மேகரஞ்சனி எனப் பாடியது மிகவும் சிறப்பு. அடுத்து சுலோசனா பட்டாபிராமன் 14 ராகங்களையும் வரிக்கு வரி இணைத்துப் பாடிய விதம் ஜோர். வயலின் வாசித்த ஜெய்சங்கர் பாலன், மிருதங்கம் வாசித்த வினோத் சீதாராமன், கடம் வாசித்த ரவி பாலசுப்ரமணியம் அனைவருமே முழுத் திறமையை வெளிக்காட்டினர்.
சீதா துரைராஜ், சான் ஹோசே, கலிஃபோர்னியா |