சிகாகோ தியாகராஜ உத்சவம்
2012 மே மாதம் 26 முதல் 28 வரை 3 நாட்கள் சிகாகோ தியாகராஜ உத்சவம் 36வது ஆண்டாக, லெமான்டில் உள்ள சிகாகோ மாநகர இந்துக் கோவிலில் ஒரு மாபெரும் பக்தி அஞ்சலியாக நடைபெற்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிப் பகுதிகளிலிருந்தும் வரும் குடும்பத்தினர் இந்த இசை வேள்வியில் கலந்து கொண்டனர். தொடக்கத்தில், ராமனுக்கே உதவிய அனுமனுக்கு நன்றி செலுத்து முகமாக, எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் இசையமைப்பில் அமைந்த துளசிதாசரின் ஹனுமான் சாலிசாவை ஐம்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பாடிய பின் வடைமாலை சாற்றப்பட்டது.

இவ்விசை விழாவின் ஒரு முக்கிய அம்சம் ஒவ்வொரு வயதுவாரிக் குழுவுக்கும் ஒரு பஞ்சரத்ன க்ருதி ஒதுக்கப்பட்டது. முன்னூறுக்கும் மேற்பட்ட இளவல்களும் முதியவர்களும் கலந்து கொண்ட முதல்நாள் விழா ‘கீதார்த்தமு’ என்னும் சுருட்டி ராகக் கீர்த்தனையுடன் நிறைவேறியது. முதல்நாளன்றே பந்துல ரமா அவர்கள் விசாகப்பட்டினத்திலிருந்து வந்து கச்சேரி செய்தார். வயலின் வாசித்தவர் அவருடைய கணவர் எம்.எஸ்.என். மூர்த்தி. முழவுக்கலைஞர் வினோத் சீதாராமன்.

இரண்டம் நாள் ஞாயிறு அன்று காலை முதலே, தேர்ந்தெடுத்த 12 உத்சவ சம்பிரதாய கிருதிகளை அறுபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பாடினர். பின்னர், செண்டை வாத்தியத்துடன் ஸ்ரீதியாகராஜர் படம் தேரில் எடுத்து வரப்பட்டது. அன்றிரவு பந்துல ரமாவும், அவரது கணவர் மூர்த்தியும் ஒரு அற்புதமான வாய்ப்பாட்டுக் கச்சேரியை வழங்கினார்கள். அன்று வீணை வித்வம்சினி ஜெயந்தி குமரேஷுடன் அவர் கணவர் குமரேஷ் வயலின் வாசிக்க சிறப்பான இசை விருந்து ஒன்றை வழங்கினார்கள். இவர்களுடன் நெய்வேலி நாராயணன் (மிருதங்கம்) மற்றும் திருச்சி கிருஷ்ணா (கடம்) வாசித்தனர்.

திங்களன்று, வயலின் மேதை லால்குடி ஜெயராமன் அவர்களின் சீடரான இளம்பாடகர் சாகேதராமன் ஓர் இசை விருந்தை அளித்தார். வரதராசன் (வயலின்), நெய்வேலி வெங்கடேஷ் (மிருதங்கம்) பக்க வாத்தியம் வெகு சிறப்பு. ஷேக் சின்னமவுலானா அவர்களின் பேரன்கள் காசிம் மற்றும் பாபு தியாகராஜ கிருதிகளை பக்தி பூர்வமாகக் கோவில் அர்த்த மண்டபத்திலேயே நாகஸ்வரம் வாசித்தனர். மாணிக்கம் சங்கர் மற்றும் ராஜு நல்லகுமார் தவில் வாசித்தனர்.

திங்கள் இரவு ரஞ்சனி, காயத்ரி சகோதரிகளின் ஆனந்தமான இசை வெள்ளம். உடன் வாசித்தவர்கள் எச்.என். பாஸ்கர் (வயலின்) மற்றும் மனோஜ் சிவா (மிருதங்கம்). நமது இசைப்போட்டிகளில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டாலும் தேர்ந்தெடுத்த முப்பத்தைந்து குழந்தைகள் மட்டுமே போட்டியில் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்டனர். இதற்கு நான்கு நீதிபதிகள் வந்து சிறப்பித்தனர்.

பேரா. T.E.S. ராகவன்,
சிகாகோ, இல்லினாய்

© TamilOnline.com