சுமை
திடீரென்று அழுத்தும் இந்தச் சுமை எனக்குள் சொல்லொணாத் துயரத்தை அள்ளி வீசியது. இப்படி ஒரு சோதனையை என் வாழ்வில் நான் சந்தித்திருக்கவில்லை. இப்படியெல்லாம் நேருமென்று கனவிலும் நான் எண்ணிக்கூடப் பார்த்திருக்கவில்லை. வசந்தங்கள் மட்டுமே பார்த்த சோலையாக இருந்த என் வாழ்வு புயலடிக்கும் பாலைவனமாய் மாறிப் போனது என் துரதிர்ஷ்டம்தான்.

இந்திய மண்ணில் காலடி எடுத்து வைத்து ஒரு வாரங்கூட இன்னும் முழுசாக முடியவில்லை. அதற்குள் இப்படியொரு பிரச்சனையா! என்ன கொடுமையிது? பள்ளியில் உள்ள அனைவருமே என்னைப் பார்த்து ஏளனமாகக் கைகொட்டிச் சிரிப்பது போன்ற காட்சி அடிக்கடி தோன்றி மறைகிறது. என்ன செய்வது, ஏது செய்வது என்று எனக்கு எதுவுமே புரிபடவில்லை இன்னும். இதிலிருந்து எப்படியாவது விடுபட்டுவிட வேண்டுமென்று மட்டும் என் மனம் தவியாய்த் தவித்தது. ஆனால் எந்த வழியும் இன்னும் புலப்படவே இல்லை.

என் தந்தையை வேலையில் இருந்து நீக்கிய போதுங்கூட இவ்வளவு கவலைப்படவில்லை. அமெரிக்காவில் வேலை போனால் என்ன. என் தாய்த் திருநாடு தங்கக் கரம் நீட்டி வாவென்று அழைக்கும்போது நான் கவலையே படமாட்டேன் என்று சூளுரைத்து அவர் கிளம்பியபோது எனக்கே மிகவும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. அவர் தன்மேல் வைத்திருந்த நம்பிக்கையைக் கண்டு எனக்கும் மிகவும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. அதனால் அந்த நிகழ்ச்சியால் பெரிதாக நான் கவலை கொள்ளவில்லை. சிறு வயதில் இருந்தே இந்தியாவைப் பற்றி என் தந்தை உயர்வாகச் சொல்லி வளர்த்ததாலும் அங்கே திரும்பிச் செல்வதும் எனக்கு மகிழ்வை உண்டாக்கியதே தவிர வருத்தம் உண்டு பண்ணவில்லை.

அப்பத்தாவின் வெள்ளந்தியான அன்பும் அவள் தினமும் காலையில் எழுந்தவுடன் எனக்காக நெய்மணம் கமழச் செய்துகொடுக்கும் உளுந்தங் களியும் இன்னும் என் நெஞ்சில் இன்ப அலைகளாய்ப் பொங்கிப் பெருகுகின்றன. சிறு வயதிலே நான் பழகிய சினேகிதர்கள் எல்லோரும் என்னை அடையாளம் கண்டு கொள்வார்களா என்றுதான் தெரியவில்லை. அவர்கள் அனைவருக்கும் இங்கிருந்து எதாவது வாங்கிச் சென்று அசத்தி விடலாமென்று ஒரு சிறிய திட்டம் போட்டு வைத்திருக்கிறேன். இங்கும் என்னுடன் பள்ளியில் படித்த நண்பர்கள் அனைவரையும் பிரிந்து செல்வதும் அவ்வளவு சிரமமாக இருக்கவில்லை-அவனைத் தவிர.

அவனிடம் எனக்குக் காதல் என்று சொல்லும் அளவுக்குப் பிடித்தமில்லை என்றாலும் நாங்கள் இருவரும் மிகவும் அன்னியோன்னியமாகத்தான் பழகி வந்தோம். எங்கு சென்றாலும் ஒன்றாகச் செல்வது. விடுமுறை நாட்களில் ஊர் சுற்றுவது என்று அவ்வளவு நெருக்கம்தான். எனது பெற்றோரும் எனக்கு மிகவும் சுதந்திரம் கொடுத்துத்தான் வளர்த்திருக்கிறார்கள். என்னை அவர்கள் ஓர் அமெரிக்கப் பெண்ணாக வளர்க்க நினைத்தாலும், நான் ஓர் இந்தியப் பெண்ணாகவேதான் வளர்ந்து வந்தேன். எனவே அவனிடம் எவ்வளவு நெருக்கம் காட்டினாலும் மிகமிக எச்சரிக்கையாகத்தான் பழகி வந்தேன்.

இந்தியாவுக்குக் கிளம்பும்போது விமான நிலையம்வரை வந்து வழியனுப்பி வைத்தான். தினமும் அலைபேசியில் அழைப்பதாக எனக்கு வாக்குக் கொடுத்தான்.

இந்திய மண்ணை மிதிக்கும்போதே மிகவும் பரவசமாக இருந்தது. ஆனால் மறுநாளே நானொரு பள்ளிக்குச் செல்ல வேண்டுமென்று கனவிலும் நினைக்கவில்லை. இந்த அப்பா இப்படியா அநியாயத்திற்கு நல்லவராக இருக்க வேண்டும். என்னதான் மாயம் செய்தாரோ தெரியவில்லை. எப்படியோ எனக்கொரு அட்மிஷன் வாங்கி வைத்து விட்டார் ஒரு நல்ல பள்ளியில். இதோ பத்தாம் வகுப்புப் பாவையாக நானும் பள்ளிக்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறேன்.

பள்ளியின் வாசல்வரை வந்து விட்டுச்சென்ற தந்தைக்கு டாட்டா காட்டிவிட்டு புத்தக மூட்டையைத் தூக்கும்போதுதான் அந்தச் சுமையின் வலி புரிந்தது. தொட்டுத் தொடரும் அந்தச் சுமையிலிருந்து எப்படி எப்போது விடுபடுவது என்று அந்தக் கேள்வியையும் சுமந்துகொண்டு பொடி நடையாய் எனது வகுப்பறை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறேன்.

சோமு சுந்தரம்,
டிராய், மிச்சிகன்

© TamilOnline.com