ஆசிரியருடைய ஆயிரக்கணக்கான சொற்பொழிவுகளில் மிகக் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கதான குயில் பாட்டு விளக்கத்தை அண்மையில் பார்த்து முடித்தோம். எழுத ஒராண்டு காலத்துக்குமேல் பிடித்தது. இவ்வளவு நீளநெடுக நான் எழுதியிருந்தாலும், சுமார் ஆறு வாரங்கள் நடந்த 'சுபமங்களா' சொற்பொழிவு வரிசையின் ஒரே ஒரு பகுதிதான் என் எழுத்துக்குள் வெளிவந்திருக்கிறது என்பதை நினைவில் கொண்டால், வரிசை முழுவதையும் 'உன் வாசகத்தை நான் கலந்து பாடுங்கால்' என்ற வள்ளல் பெருமான் வாக்கைப்போல் 'நான் கலந்து' பதித்தால் அதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகுமோ, அறியேன்.
ஆசிரியரின் சொற்பொழிவு வரிசைகளில் அடுத்ததாகக் குறிப்பிடத் தக்கவை அவருடைய திருக்குறள் வகுப்புகள். ஞாயிறுதோறும் ஒரு வகுப்பு; ஒரு வகுப்புக்குச் சுமார் மூன்று மணிநேரம் என்ற அளவில், சுமார் ஐந்தாண்டுகளுக்கும் மேல் அவர் நடத்தியவை மொத்தம் பதின்மூன்று அதிகாரங்களே. ஆமாம். 130 குறட்பாக்கள் மட்டுமே ஐந்தாண்டு காலத்தில்! திருக்குறளை எப்படி அணுகவேண்டும் என்பதற்கான பயிற்சிப் பட்டறையாக அவை அமைந்திருந்தன. அவர் என்றும் தம்மைப் பயிற்றுவிப்பவனாகக் கருதிக் கொண்டேதே இல்லை. ஒலிவடிவில் தமிழ் மரபு அறக்கட்டளையின் நாகநந்தி மணிமண்டபத்தில் சேமிக்கப்பட்டிருக்கும் இந்தத் திருக்குறள் வகுப்புகளைக் கேட்டுப் பார்த்தால், அவர் "வகுப்பு என்று பெயர்தான் இருக்கிறதே ஒழிய, நாம் கலந்துரையாடுகிறோம். சேர்ந்து சிந்திக்கிறோம். திறந்த மனத்தோடு இந்த இடத்தில் அமர்ந்து சொற்பொழிவாற்றுகிறேன். என் கருத்துகளோடு மாறுபடுபவர்கள் தங்கள் கருத்துகளை மடல் வடிவிலேயோ அல்லது, சொற்பொழிவு முடிந்தவுடனேயோ தெரிவிக்கலாம். என்னிடம் விளக்கம் இருந்தால் சொல்கிறேன். அல்லது உங்களுடைய விளக்கம் இன்னும் சிறப்பானதாக இருந்தால் ஏற்றுக் கொள்கிறேன்" என்று குறிப்பிடுவதைக் கேட்கலாம்.
நாற்பதாண்டு காலம் தமிழ் பயிற்றுவித்தவர்; பேராசிரியராகவும் ஒரு கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராகவும் விளங்கியவர், இப்படி, கீழுக்கும் கீழாக இறங்கி வந்து, அவை நடுவில் இப்படி ஒரு வேண்டுகோளை வைத்துப் பார்த்ததுண்டா? அவரிடத்தில் இருந்த தனிச்சிறப்பு அது. "வள்ளுவன், கம்பன், பாரதி இவர்களுக்கிடையில் ஆயிரம் ஆண்டுகள் இருப்பதை கவனித்தால், இவர்கள் ஆயிரமாண்டுகளுக்கு ஒருமுறையே தோன்றக்கூடிய அபூர்வக் கவிஞர்கள் என்பது புலப்படும். இவர்களில் பாரதி நம் நண்பனென்றால், கம்பன் நமக்குத் தாய்மடி. படுத்துப் புரளலாம். எல்லா உரிமைகளையும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இவர் இருக்கிறார் பாருங்கள் இவர், இந்த தாடிக்காரர், இவரிடம் வரும்போது மட்டும் ஆலயத்துக்குள் பிரவேசிக்கிற உணர்வோடு பயபக்தியாக வந்து சேரவேண்டும். எல்லாம் புரியத்தானே புரிகிறது என்று உரைகளைப் பார்த்து மயங்கிவிடக் கூடாது. இலக்கணத்தைத் துணைக் கொண்டு ஒவ்வொரு உரையையும் உரசிப் பார்த்து எது பொருத்தம் என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நேர்மையுள்ள வாசகனுக்கு, வள்ளுவனிடம் உண்மையான பக்தி பூண்ட வாசகனுக்கு, அவனுடைய மனசாட்சிக்குப் படுவதே உண்மையான உரை. இதுதான் இந்தக் குறளுக்கு எந்தப் பொருளைக் காண்பது என்பதற்கான சாவி; உரைகல்" என்று அடிக்கடி வலியுறுத்துவார்.
இப்படியெல்லாம் சொன்னாலும் அவருக்கு பாரதியிடம் மட்டும் தனிப்பட்ட காதல் இருந்தது என்னவோ உண்மை. "இந்த மூவர் தோளில் யாருடைய தோள் உயரம் என்று கேட்டால், பாரதியினுடையது மட்டுமே என்று தயங்காமல் சொல்வேன்" என்பார். "மற்ற இருவருக்கும் மொழியை மீட்டெடுத்து, மறுபடியும் அதனை மக்களிடம் செழிக்கச் செய்யும் கடுமையான கடமை இருந்திருக்கவில்லை. பாரதிக்கோ என்றால் அதுதான் தலைமைக் கடனாக இருந்தது. அந்தக் கடமையை முழுமையாகவும் செய்தவன் அவன்" என்பது அவருடைய விளக்கம்.
என் தனிப்பட்ட அனுபவத்தை இங்கே குறிப்பிட்டு விடுகிறேன். இன்று இணையத்தில் பாரதியைப் பற்றிய ஐயத்துக்கு 'கூப்பிடு ஹரியை' என்ற பெயர் பெற்றிருக்கிறேன்--இதிலும் ஆசிரியருடைய பங்கு அதிகம் என்றாலும் நான் தனிப்பட்ட முறையில் உழைத்துப் பெற்றதும் ஓரளவுக்குப் பெரிதே. கம்பனுக்குள் என்னைக் கைப்பிடித்துச் சென்றார்; கைகோத்து வந்தார். ஆனால், வள்ளுவர் விஷயத்தில் நடந்ததே வேறு.
கல்லூரி நாட்கள் வரையில், 'ரெண்டு மார்க் கேள்விக்காக மனப்பாடம் செய்யவேண்டிய தலையெழுத்து' வரிசையில் திருக்குறளை வைத்திருந்தவன்தான் நானும். 'அதுல என்ன இருக்கு? கவிதையா? சொல்றது பூரா என்னமோ நீதி விளக்கம். அதுலயும் பாதி வௌங்காது; மீதி இன்னிக்குச் செல்லாது' என்ற போக்கு இளமையில் இருந்தது.
ஆனால், திருக்குறள் விஷயத்தில் அதுவும் தவறுதான். கல்லூரி இல்லை; கற்கத் தொடங்கும் நாள்முதல் பக்தி சிரத்தையுடன் கற்கவேண்டிய நூல் திருக்குறள். அதில் நம் கருத்துகளைத் திணிப்பதற்கோ, நம் விருப்பப்படி அவர் பா இயற்றியிருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதற்கோ; கவிச்சுவைக்காக, எதுகை மோனை, யாப்பிலக்கணத் தேவைகளுக்காக இன்னின்ன சொற்களை இங்கிங்கே அமைத்திருக்கிறார் என்று நினைப்பதற்கோ இடமே இல்லை என்பதை மனத்தில் ஆழப் பதித்துக் கொண்டே பயிலவேண்டும். இதைத் தெரிந்துகொண்ட சமயத்தில் வாழ்க்கையி்ன் முதல் 22 ஆண்டுகள் கழிந்துவிட்டிருந்தன. அதற்குப் பிறகாவது இப்படிப்பட்ட ஆசான் ஒருவர் எனக்குக் கிடைத்ததே பெரிய பேறு. இந்தத் தொடரின் முதல் கட்டுரையான 'தேடாமல் கிடைத்த சொத்து' பாரதியில் என் பார்வையை அவர் ஆழப்படுத்தியதைக் குறித்தது. ஆனால், திருக்குறளுக்கோ என்றால், நான் பரமசிவன் அல்லன் என்றாலும் என்னுளே பாய்ந்த கங்கை; தாங்குவதற்குச் சற்றும் அருகதன் அல்லன் என்றாலும் ஆகாய கங்கை மண்ணில் வந்து மோதும் வேகத்துடன், என்னைத் தாக்கி, நிலைகுலையச் செய்து, என் அறிவுக்குள் வெளிச்சத்தைக் கொளுத்தி வைத்த வித்தகம் என்றெல்லாம்தான் ஆசிரியப்பிரான் திருக்குறளைப் பொருத்த மட்டில் எனக்குள் விளைவித்த மிகப் பெரிய மாற்றத்தைச் சொல்ல வேண்டும். இன்று இசைக்கவி ரமணனுடைய திருக்குறள் வாரச் சொற்பொழிவுகள் ஒவ்வொன்றிலும் என் பெயர் உச்சரிக்கப்படுகிறது என்றால், இணையத்தில் 'இவனிடம் கேட்டால் சரியான இலக்கு கிடைக்கும்' என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது என்றால், ஒன்றே ஒன்றை மீண்டும் நினைவுறுத்த விரும்புகிறேன். ரெண்டு மார்க் கேள்விக்காக மனப்பாடம் செய்யவேண்டிய தலையெழுத்து என்ற வகையில் திருக்குறளை வாழ்வின் முதல் இருபதாண்டுகள் பார்த்துக் கொண்டிருந்தவன்தான் நானும்.
எனவே, பாரதியின் குயில் பாட்டுக்கான ஆசிரியருடைய விளக்கத்தைக் கொஞ்சம் 'நான் கலந்து' கொடுத்ததைப்போல, திருக்குறளுக்குள் என்னைக் குப்புறக் கவிழ்த்த ஆசிரியப் பெருமானுடைய பெருமையைக் கொஞ்சம் பகிர்ந்து கொள்கிறேன். அவருடைய திருக்குறள் வகுப்புகள் அனைத்தும், பதின்மூன்று அதிகாரங்களும் குரல் வடிவில் உங்கள் கையருகே காத்துக் கொண்டிருக்கின்றன. நான் உண்மையைத்தான் பேசுகிறேனா அல்லது அளவுக்கு மீறிப் புளுகுகிறேனா என்று சரிபார்த்துக் கொள்ளக்கூடிய வாய்ப்பு உங்கள் கணினியிலிருந்து சொடுக்கு தூரத்தில்தான் உள்ளது.
குறளைப் படிக்கும் எல்லோருக்கும் பயன்படக்கூடிய அரிய பொக்கிஷம் அவருடைய சொற்பொழிவுகள். என்னைப் போன்ற 'சுத்தக் கரும்பலகையை' (clean slate) அர்த்தமுள்ளவனாக மாற்றியவை என்றால், என்னைக் காட்டிலும் அருந்திறல் படைத்த வாசகர்களுக்கு அவை எந்தவகையில் பயன்படும் என்பதை நான் இதற்குமேலும் சொல்லத் தேவையில்லை.
இனி வரும் சில மாதங்களுக்கு, பேராசிரியர் தி. வேணுகோபாலன் (நாகநந்தி) அவர்கள் எங்களுக்குக் கற்றுக் கொடுத்த 'திருக்குறள் அணுகுமுறை'யைப் பற்றியும் அவருடைய அபூர்வமான விளக்கங்களையும், கூர்மையான பார்வையையும், இன்றைய வாழ்க்கையை அவர் திருக்குறளோடு தொடர்புபடுத்தி, 'இன்றும் திருக்குறள் உயிரோடு இயங்கிக்கொண்டிருக்கிறது. இனி என்றும் அவ்வாறே இயங்கும்' என்ற உறுதிப்பாட்டை அவருடைய திருக்குறள் வகுப்பு மாணவர்களிடையே விதைத்ததையும் இன்ன பிற செய்திகளையும் பகிர்ந்துகொள்கிறேன்.
திருக்குறள் உவமைகளைப் பற்றி அவர் சொன்ன கருத்தை இங்கே பதிய வேண்டியது என் முதல் கடமை. அடுத்தடுத்த மாதங்களில், திருக்குறள் பயிற்சிக்கு எப்படியெல்லாம் ஒருவர் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அவருடைய வழிமுறை... இப்படிக் கொஞ்சம் உரையாடுவோம். இரண்டடி வாமன மூர்த்தி, மூன்றாவது அடியை எடுத்து வைக்கவேண்டிய அவசியமில்லாமலேயே, உலகெலாம் பேசப்படும் அனேகமாக எல்லா மொழிகளிலும் பெயர்க்கப்பட்டு எடுத்திருக்கும் விஸ்வரூபத்தையும் அதன் காரணங்களையும் சிறிது பேசுவோம்.
அடுத்த மாதம் சந்திக்கலாம்.
ஹரி கிருஷ்ணன் |