திருமணம் செல்வக்கேசவராய முதலியார்
உ.வே.சாமிநாதையர், சி.வை. தாமோதரம் பிள்ளை எனத் தமிழ் இலக்கண, இலக்கிய வளர்ச்சிக்கு வளமும் நலமும் சேர்த்த அறிஞர்கள் வரிசையில் வந்தவர் செல்வக்கேசவராய முதலியார். இவர் சென்னையை அடுத்த திருமணம் என்ற ஊரில் 1864ல் சுப்பராய முதலியார்-பாக்கியம் அம்மாள் ஆகியோரின் மகனாகப் பிறந்தார். தந்தையார் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழாசிரியர். செல்வக்கேசவராயரையும் தமிழ்ப் புலவராக்க எண்ணினார். தமிழோடு ஆங்கிலக் கல்வியும் தேவை என எண்ணிய அவர், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம் ஆகியவற்றைக் கற்கச் செய்தார். இன்டர்மீடியட் வகுப்பில் முதன்மையாகத் தேறிய செல்வக்கேசவராயர், தொடர்ந்து பி.ஏ., எம்.ஏ. பட்டங்களைப் பெற்றார். பன்மொழிகள் கற்ற அவருக்குப் பல வேலைகள் தேடி வந்தன என்றாலும் ஆசிரியப் பணியை அவர் விரும்பினார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியப் பணி கிடைத்தது.

ஆங்கில மோகம் அதிகம் இருந்த காலகட்டம் அது. ஆங்கிலத்தில் முதன்மையாகத் தேர்ச்சி பெற்றவர் செல்வக்கேசவராயர். ஆனாலும் தமது உரைகள் மூலம், சங்க இலக்கியப் பாடல்கள் மூலம் மாணவர்களுக்குத் தமிழின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கச் செய்தார். சக பேராசிரியர்களின் அன்பையும், நட்பையும் பெற்றார்.
பிற்காலத்தே புகழ்பெற்ற ரா.பி. சேதுப்பிள்ளை, தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் போன்றோர் செல்வக்கேசவராயரின் மாணவர்களே!

இக்காலகட்டத்தில் வேதவல்லி என்பவருடன் செல்வக்கேசவருக்குத்
திருமணம் நிகழ்ந்தது. தமக்குப் பிறந்த மகவுகளுக்கு பரிமேலழகர், நச்சினார்க்கினியர், சேனாவரையர் என்று திருக்குறள் உரையாசிரியர்களின் பெயர்களைச் சூட்டி மகிழ்ந்தார். அவர் பழமையான பல நூல்களை ஆராய்ந்து பதிப்பித்தார். அவற்றுள் குறிப்பிடத்தகுந்தது பழமொழி நானூறு. முந்தைய பிரதிகளை ஆராய்ந்தும், ஏட்டுச் சுவடிகளைச் சரிபார்த்தும். பத்துப் பத்துப் பாடல்கள் கொண்ட அதிகாரங்களாகப் பகுத்து, பால் இயல் என்னும் பகுப்புக்களையும் செய்து, சிறந்த உரையுடன் அந்த நூலை வெளியிட்டிருந்தார் அவர். இது தவிர ஆசாரக் கோவை, அறநெறிச்சாரம், முதுமொழிக்காஞ்சி, அரிச்சந்திர புராணம் போன்றவற்றை ஆய்ந்து பதிப்பித்தார். தமிழில் வழங்கிவந்த பழமொழிகளை ஆராய்ந்து 'இணைப் பழமொழிகள்' (Parallel Proverbs) என்னும் தலைப்பில் தமிழ் மற்றும் ஆங்கில விளக்கத்துடன் எழுதி வெளியிட்டார். பாடலும் விளக்கமுமாகப் பதிப்பிப்பதை விட மாணவர்களுக்குப் பயன் தரும் வகையில், பதவுரை, அரும்பதவுரை, அகராதி விளக்கம், கருத்துரை, மேற்கோள்கள், பாட பேதம், இலக்கணக் குறிப்பு, வரலாற்றுக் குறிப்பு போன்றவை கொண்டவையாக இவர் பதிப்பித்த நூல்கள் விளங்குகின்றன.

தமிழ் இலக்கணத்தை மாணவர்கள் எளிதாக விளங்கிக் கொள்ள அவர் எழுதிய 'பஞ்சலட்சணம்' எனும் நூல் வழிகாட்டுகிறது. இது 1903ல் வெளியானது. தமிழ் மொழி வரலாறு குறித்து செல்வக்கேசவராயர் எழுதிய கட்டுரைகளும் முக்கியமானவை. 'தமிழ்', 'தமிழ் வியாசங்கள்', 'திருவள்ளுவர்', 'கண்ணகி சரித்திரம்', 'வியாச மஞ்சரி', 'மாதவ கோவிந்த ரானடே', 'அக்பர்' போன்ற நூல்களையும் எழுதினார். பண்டை இலக்கியங்களான 'கலிங்கத்துப் பரணி', 'குசேலாபாக்கியானம்', 'அரிச்சந்திர புராணம்' போன்றவற்றைப் பதிப்பித்ததுடன் எளிய உரைநடை நூலாக்கியும் அளித்திருக்கிறார். தமது சொந்தக் கைப்பணத்தைச் செலவழித்தே அவர் பல நூல்களை வெளியிட்டிருக்கிறார் என்பதிலிருந்து தமிழின் மீது அவர் கொண்டிருந்த அக்கறையை உணர முடிகிறது.

எளிமையும், சொற்சிறப்பும் வாய்ந்தது செல்வக்கேசவராயரது உரைநடை. தமிழாய்ந்த பேராசிரியர் என்பதால் எளியோருக்கும் புரியும் வண்ணம் சிடுக்கு மொழியின்றி அவர் உரைநடை நூல்களைத் தந்தார். தமிழ் உரைநடையில் கட்டுரைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு இவருடைய உரைநடையே சான்று. உரைநடை பற்றி செல்வக்கேசவராயர் கூறும் கருத்து முக்கியமானது. "நூல் நடையின் கூறுகளாவன கருத்தும் சொல்லும் என இரண்டு. கருத்தாவது கருதிய பொருள்; சொல்லாவது அப்பொருளை உரைக்கும் உரை. ஒரு நூலின் நடை சிறந்தது என்பார் குறிப்பாவது, அந்நூல், தான் கருதிய பொருளை உரைக்கும் செவ்வி சிறந்தது என்பதாம். உரிய சொற்கள் உரிய இடங்களில் பொருந்தி நடப்பதே நடை. கருதிய பொருளுக்குரிய சொற்களும் அவற்றிற்குரிய இடங்களில் பொருந்தி நடப்பதே, முற்றுத் தொடர்மொழி என்பதான வாக்கிய நடை" என்கிறார் அவர்.


இலக்கண, இலக்கிய ஆராய்ச்சி, வரலாற்றாய்வு, படைப்பிலக்கியம் எனப் பல துறைகளிலும் கேசவராயர் வல்லவராக இருந்தார். நுண்ணறிவு மிக்க இவருடைய ஆய்வுகள் அக்கால அறிஞர்களால் பெரிதும் போற்றப்பட்டன. குறளும், தொல்காப்பியமும் காலத்தால் முந்தியவை எனவும், அதிலும் திருக்குறள், பிற இலக்கியங்கள் அனைத்துக்கும் முற்பட்டது என்பதும் இவரது கருத்து. பதினெண் கீழ்க்கணக்கு நூலாகக் கருதத்தக்கது இன்னிலையல்ல; கைந்நிலையே என்பதும் இவரது ஆய்வு முடிவு.
தமிழுக்கு 'கதி' இருவர். இதில் 'க' என்பது கம்பனையும், 'தி' என்பது திருவள்ளுவரையும் குறிக்கும் என்று சொன்னவர் இவர். இவர் எழுதிய கம்பன் பற்றிய ஆய்வு நூலான 'கம்பநாடர்' நூலும், வள்ளுவர் பற்றிய ஆய்வு நூலான 'வள்ளுவர்' நூலும் பிற்கால ஆய்வு நூல்கள் பலவற்றிற்கு அடிப்படையாகின. மிகுந்த தமிழ்ப்பற்றாளரான கேசவராயர், தமிழ் இலக்கியங்களில் எவ்வெவற்றில் எத்தனை வடசொற்கள் கலந்துள்ளன எனவும் பட்டியலிட்டுத் தந்துள்ளார். ஆங்கிலத்தைவிடத் தமிழ்தான் சொற்சிறப்பு மிகுந்தது என்பதை, "தான் வியாதியாக இருக்கிற விஷயத்தைப் பிறரிடம் கூற 'நான் வியாதியாய் இருக்கிறேன்' என்பதே ஆங்கில மரபு. நம் தமிழில் 'எனக்கு உடம்பு சரியில்லாமல் இருக்கிறது' என்பதே மரபு. இப்படிச் சொல்லுவதால் ஆங்கில மரபு 'அகம்'பாவத்தை (ஈகோ) உணர்த்துவதாக இருக்கிறது. தமிழ் மரபோ 'தேக தேகி' பாவத்தைத் தழுவி ஞானசாரமாக இருக்கின்றது. தமிழில் பெரியோர்களைப் பலர்பாலால் வழங்குகின்ற மரியாதை, ஆங்கிலத்திலும் வேறெந்த மொழியிலும் இல்லை. பெரியோர்களின் செயல்களை 'அவர் வந்தருளினார், செய்தருளினார்' எனக் கௌரவமாகக் கூறும் விதமும், ஏவுகின்ற வினையின் இறுமாப்பைக் குறைக்கும் வியங்கோள்களின் அழகும் தமிழுக்கே உரியவை" என்கிறார், தமது 'தமிழ்' என்ற கட்டுரையில்.

தமிழ் எழுத்து பற்றி இவர் கூறும் கருத்தும் மிகவும் முக்கியமானது. "தமிழ் மொழியின் உச்சாரணத்துக்கு அவசியமான ஒலிகள் நாற்பது. வரிவடிவில் அவற்றைக் குறிப்பதற்கு உள்ள எழுத்துக்கள் முப்பத்தொன்றே. ஆகவே மற்ற ஒன்பதொலிகளுக்கும் ஒன்பது தனி வேறெழுத்துக்கள் இன்மை தமிழ் நெடுங்கணக்கிற்கு ஒரு குறையே என்னலாம்...... ஹிந்துஸ்தானி-பாரஸீகம்-இங்க்லீஷ் முதலான பாஷைகளிலிருந்து தமிழில் வந்து வழங்குதலான சொற்களை வரிவடிவில் அமைத்துக்காட்ட தமிழ் நெடுங்கணக்கில் போதிய எழுத்துக்கள் இல்லை" என்று அவர் தெளிவுபடுத்தியிருப்பது சிந்திக்கத் தக்கது.

அக்காலத்தின் புகழ்பெற்ற அறிஞர்களில் ஒருவரான சோடசாவதானம் தி.க. சுப்பராய செட்டியார், செல்வக்கேசவராயரை,

"துங்கமிகு பாடைநடை துகளிலாத் தமிழ்நடை
முற்றொருங்கு தேர்வோன்
புங்கமுறு கவிவல்ல செல்வக்கே சவராய
புலமை யோனே..."

என்று புகழ்ந்துரைத்திருக்கிறார்.

செல்வக்கேசவராயர் சிறுகதையாசிரியரும் கூட. தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் வடிவச் செம்மை மிக்க கதைகளை முதன்முதலில் எழுதியவர் இவர்தான் என்பது சில விமர்சகர்களின் கருத்து. 'அபிநவக் கதைகள்' என்னும் சிறுகதைத் தொகுப்பு இவரது படைப்புத் திறனுக்குச் சான்று. 'கற்பலங்காரம்', 'தனபாலன்', 'கோமளம்', 'சுப்பையர்', 'கிருஷ்ணன்', 'ஆஷாடபூதி' என்ற ஆறு சிறுகதைகள் அத்தொகுப்பில் உள்ளன. 'கற்பலங்காரம்', பாரதியார் ஆசிரியராக இருந்த 'இந்தியா' இதழில் வெளியானதாகக் கருதப்படுகிறது. இப்படைப்பு பற்றி சிட்டி-சிவபாதசுந்தரம், "தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் வடிவ அமைப்பு தெளிவாக அறியப்படாதிருந்த ஆரம்ப நாளில், கதை சொல்லும் திறமையொன்றையே சிறப்பாகக் கையாண்டு, வாசகர் மனத்தில் ஒருமை உணர்வு தோன்றும் விதத்தில் கதையை நகர்த்திச் செல்லும் சிறப்பு பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் எழுதியவர்களிடம் இருக்கக் காணலாம்; இப்படிப்பட்ட கதைகளுக்குச் செல்வக்கேசவராய முதலியாரின் 'சுப்பையர்' என்ற கதை ஓர் எடுத்துக்காட்டு ஆகும்" என்று குறிப்பிடுகின்றனர். தமிழ்மாநாட்டு மாப்பஸான், தமிழ்ச் சிறுகதை மன்னர் என்றும் போற்றப்படும் புதுமைப்பித்தன், "தமிழ்ச் சிறுகதை வரலாற்றை, செல்வக்கேசவராய முதலியார் எழுதியுள்ள 'அபிநவக் கதைகள்' என்ற சிறு தொகுதியைத் தொடக்கமாக வைத்துக் கொண்டு கவனிக்க வேண்டும். அப்படிக் கவனிக்கும்போது தமிழ்ச் சிறுகதையின் சாதனை பெருமைப்பட்டுக் கொள்ளக் கூடியதுதான்" என்கிறார் தமது 'சிறுகதை' என்ற கட்டுரையில்.

இத்தொகுப்பில் உள்ள 'சுப்பையர்', சென்னையில் அக்காலத்தில் நடந்த உண்மை நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதாகும். சென்னையிலுள்ள பீபிள்ஸ் பூங்கா (People's Park) என்ற மைதானம் பிரிட்டிஷ் அரசி விக்டோரியாவின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்டதால் ராணித் தோட்டம், விக்டோரியா தோட்டம், சிங்காரத் தோட்டம் என்ற பெயர்களில் அழைக்கப்பட்டு வந்தது. இதில் ஆண்டுதோறும் கண்காட்சி விழா நடப்பது வழக்கம். அப்படி 1886ம் ஆண்டு நடந்த இந்தக் கண்காட்சியில் மிகப் பெரிய தீ விபத்து ஏற்பட்டது. அதுவே இக்கதையின் பின்னணி.

கதையின் சுருக்கம் இதுதான்: கண்காட்சியைப் பார்க்க, கதையின் நாயகன் சுப்பையரும் அவரது நண்பர் நாகஸ்வாமியும் சென்றனர். அப்போது ஏற்பட்ட தீ விபத்தில் சிலர் காணாமற் போயினர். சிலர் இறந்து பட்டனர். சுப்பையரும் நாகஸ்வாமியும் கண்காட்சியிலிருந்து திரும்பி வராததால் அவர்கள் இறந்தவர்களாகக் கருதப்பட்டனர்.
ஈமக்கடன்கள் செய்துமுடி
க்கப்பட்டன. சுப்பையரின் மனைவி காமாட்சியம்மாள், இருபது வயதானவர், மாங்கல்யத்தைக் களைந்து, தலையை மழித்து, தாம்பூலம் முதலானவை தள்ளி, விதவைக் கோலத்தில் கணவனை நினைத்து அழுதுகொண்டிருந்தாள்.

இருபத்தோராம் நாள் இரவில் பதினொன்றரை மணிக்குத் தெருக்கதவைத் தட்டுகிற சப்தம் கேட்டது. காமாட்சியம்மாள் திடுக்கிட்டு விழித்தாள். காலக்ஷேபத்துக்குப் போயிருந்த மாமனார் திரும்பி வந்துவிட்டாரோ என்று நினைத்து எழுவதற்குள், மறுபடியும் கதவை உரமாகத் தட்டும் சப்தம் கேட்டது. மாமனார் அவ்வளவு கெட்டியாகக் கதவைத் தட்டுகிற வழக்கமில்லையே என்று நிதானிப்பதற்குள், "அடி காமு கதவைத் திறவடி" என்று அவள் கணவன் குரல் கேட்டது. இதற்குள் அவளுடைய தாயும் விழித்துக்கொண்டு, "யாரது?" என்று கூப்பிட்டாள். மாமியார் குரலாக இருக்கவே, "நான்தான் சுப்பு. கதவைத் திறக்கச் சொல்லுமே" என்ற வார்த்தைகள் கேட்டன. சுப்பையர் ஆவிதான் வந்து இப்படிப் பயமுறுத்துகிறதென்று நம்பிய வீட்டுக்காரர் யாரும் வாய் திறக்கவில்லை.

அக்கம்பக்கத்து வீடுகளிலும் போய்க் கதவைத் தட்டிக் கூப்பிட்டார் சுப்பையர். அவர் குரலைக் கேட்டவர் ஒவ்வொருவரும், "ஐயோ, துர்மரணமாகச் செத்ததால் அவனுடைய ஆவேசம் வீடு தெரியாமல் அலைகிறது" என்று பயந்தார்கள். எவரும் கதவைத் திறக்கவில்லை. பின்னர் வீதியில் வந்துகொண்டிருந்த இரண்டு மூன்று சாஸ்திரிகள், சுப்பையரைத் தெரிந்தவர்கள், பயந்து நடுங்கவும், நாராயணஸ்வாமி என்பவர் தைரியமாய் எதிர்கொண்டு உண்மையை விசாரிக்கிறார். சுப்பையரும் நண்பர் நாகஸ்வாமியும் கண்காட்சிக்குச் சென்றபோது வழியில் சேலத்து வர்த்தகர் ஒருவர் எதிர்ப்பட்டதும் அவருடன் சுப்பையர் அவசர வியாபார விஷயமாக சேலத்துக்குப் போனதும், கண்காட்சிக்குப் போகாததால் தீ விபத்தில் சம்பந்தப்படாததும் தெரியவருகிறது. பின்னர் சுப்பையரை வீட்டுக்கழைத்துச் சென்று, நடந்ததை எடுத்துச் சொல்லிக் குடும்பத்துடன் சேர்த்து வைக்கிறார்.

அதன்பின் சுப்பையர் மனைவி காமாட்சி மொட்டைத் தலையோடு கணவனைத் தழுவி முத்தமிட்டதையும், சிறு பிள்ளைகளெல்லாம் காமாட்சியைப் பார்த்து, "திருப்பதிக்குப் போய் முடி கொடுத்து வந்தாயா?" என்று பரிகாசம் செய்ததையும் நகைச்சுவையுடன் சொல்லிக் கதையை முடிக்கிறார் செல்வக்கேசவராயர்.

இக்கதை செல்வக்கேசவராயரின் படைப்பாற்றலுக்கு தக்க சான்றாகிறது. "'அபிநவக் கதைகள் என்ற பெயரில் செல்வக்கேசவராயர் படைத்த சிறுகதைகளே தமிழின் முதல் சிறுகதைகள்" என தனது 'தமிழ் இலக்கியம்' நூலில் குறிப்பிடுகிறார் அறிஞர் கமில் ஸ்வெலபில்.

தமிழ் வளர்ப்பது ஒன்றையே தம் நோக்கமாகக் கொண்டு வாழ்நாள் முழுதும் உழைத்த திருமணம் செல்வக்கேசவராயர் 1921ல், சென்னை பெரம்பூரில், தமது 57ம் வயதில் காலமானார். அவரது மறைவிற்குப் பின் அவரது நூல்கள் பல அச்சிடப்பட்டன. பல மறுபதிப்பு செய்யப்பட்டன. அவரது ஆய்வு நூல்கள் அனைத்தும் அவரது வாரிசுதாரர்களால் மறைமலை அடிகள் நூல் நிலையத்திற்குக் கொடுக்கப்பட்டன. தமிழர்கள் தம் வாழ்வில் என்றும் மறவாது நினைந்துப் போற்றத் தக்க முக்கியமான முன்னோடிகளுள் திருமணம் செல்வக்கேசவராய முதலியார் குறிப்பிடத்தகுந்தவர்.

(தகவல் உதவி: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பதிப்பித்த திருமணம் செல்வக்கேசவாரய முதலியார் ஆய்வு நூல்)

பா.சு.ரமணன்

© TamilOnline.com