ஜூலை 2012: தென்றல் குறுக்கெழுத்துப் புதிர்
ஜூன் 2012க்கான புதிரில் ஒரு வார்த்தைக்குக் குறிப்பே அளிக்காமல் தவறிவிட்டேன். இன்னொரு குறிப்புக்கு 15க்கு பதிலாக 14 என்று தவறாகச் சொல்லிவிட்டேன். இதைப் பலரும் சுட்டிக் காட்டினர். குறுக்கும் நெடுக்கும் இணைய மடற்குழுவில் திருத்தங்களை உடனே அறிவித்தாலும் அச்சுப் பத்திரிகை மட்டுமே படிப்பவர்களும், அக்குழுவில் இல்லாதவர் களும் ஏமாற்றம் அடைந்திருப்பார்கள். மே மாதப் புதிருக்கான விடைகளைக் கண்டுபிடித்தவர்களின் பட்டியலிலும் பல பெயர்களை விட்டுவிட்டு அவர்களுக்கும் அதிருப்தி உண்டாக்கிவிட்டேன். இப்பிழைகளையெல்லாம் பொறுத்துக் கொள்ளுமாறு உங்களை வேண்டுகிறேன். இந்தக் குறைகள் இருந்தாலும் சரியான விடைகளைக் கண்டறிந்து வழக்கம்போல் எழுதியனுப்பி என்னை மனந் தளரவிடாமல் ஊக்கத்தை அளித்துவிட்டீர்கள். நன்றி!

பிழைப்புதிர்க்கும் நல்விடையைப் பேரறிவால் தந்தீர்
இழைத்திடுவேன் நல்மெருகை இன்று.


இந்த மாதப் புதிர் என் பிழைப்பை உதிர்க்கா வண்ணம் உங்கள் ஆவலைத் தூண்டுமென்று நம்புகிறேன்.

குறுக்காக
5. பாதிக் காலணிக்குப் பழங்காலத்தில் சண்டை (2)
6. கைக்குட்டை உதவியுடன் செய்யப்படும் ஏமாற்று வேலை? (2, 4)
7. முருகா முதலில் கற்ற பாடம் குழப்புகிறதே (4)
8. எப்படிப் பார்த்தாலும் சிறையிலிருந்து வெளியேற்று (3)
9. ஒரு பக்கம் இடமில்லை (3)
11. நல்ல ஓர் ஆயுதம் உரைத்திடு (3)
13. பன்னிரண்டில் இரண்டாவதாக வந்த மாடு? (4)
16. உலகம் பெற்ற பிள்ளைகளில் புதல்வி போக முன்னாள் குடியரசுத் தலைவரா? சவால் விடு. (6)
17. வெட்டு அதில் பாதியை உடுத்து (2)

நெடுக்காக
1. வெளிச்சமில்லாத இரு கண்டம் எல்லைகளற்றது (4)
2. ஆணவங்கொண்ட வாலறுக்கப்பட்ட அவனுக்குள்ளே ஒரு தானியமா? (5)
3. குதிரை ஏற்றத்தில் வல்லவனுடைய அம்மா துரியோதனனிடம் சிக்கினாள் (3)
4. பழமொழி சாகும் வரைக்கும் நினைக்கும்படியான காரியத்தைச் செய் (4)
10. வேகமாய் இரு ஸ்வரங்களை முக்கால்வாசி மாய்ந்து சேர் (5)
12. ஓவியர் வைகைக்குள் மூழ்கி இதைப் போக்கலாம்! (4)
14. இரு ஸ்வரங்களை இழந்த அரசன் பதிலுக்கொன்று தந்து சோகத்துடன் பட்டம் சூட்டிய மகன் (4)
15. வருடம் மூன்று போதுமென்பான் விவசாயி, தினமும் வேண்டுமென்பான் காமுகன் (3)

வாஞ்சிநாதன்

ஜூன் 2012 குறுக்கெழுத்துப்புதிர் விடைகள்

© TamilOnline.com