பேரா. வி. செல்வநாயகம் பெயரால் தமிழின் மேன்மையான ஆராய்ச்சியாளர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி கௌரவிக்கும் நோக்கத்துடன் ஓர் அறக்கட்டளை 2004ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த காலங்களில் இதன் விருதுகள் முனைவர் ஐராவதம் மகாதேவன், பேராசிரியர் வி.ஐ. சுப்ரமணியம், வித்துவான் கோபாலய்யர், பாவலர் பாலசுந்தரம் , பேரா. எஸ். பத்மநாபன், பேரா. ஜார்ஜ் ஹார்ட் ஆகியோருக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. 2011ம் ஆண்டுக்கான பேரா. வி. செல்வநாயம் விருது பேரா. நோபொரு கரஷிமா அவர்களுக்கு ரொறொன்ரோவில் மே 13ம் தேதி ஒரு விருந்துபசாரத்தின்போது வழங்கப்பட்டது. பேரா. செல்வநாயகத்தின் மாணவர் பேரா. இ. பாலசுந்தரம் விருதுக் கேடயத்தை வழங்கினார்.
பேரா. நா. சுப்பிரமணியன் அறிமுக உரை ஆற்றினார். விநாசித்தம்பி செல்வநாயகம் (1907–1973) இலங்கை பல்கலைக் கழகத்தின் முன்னைநாள் தமிழ்ப் பேராசிரியர். இவர் தனது இளமாணி பட்டத்தை லண்டன் பல்கலைக் கழகத்திலும், முதுமாணி பட்டத்தை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும் பெற்றார். இவருடைய 'தமிழ் இலக்கிய வரலாறு' என்னும் நூல் இத்துறையில் தமிழில் வெளிவந்த நூல்களில் மிக முக்கியமான ஒன்றாகும். தமிழிலக்கிய வரலாற்றில் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட கால வகுப்பினை (சங்க காலம், சங்க மருவிய காலம், பல்லவர் காலம், சோழர் காலம்) முதன்முதலில் தொடங்கிவைத்தவர் செல்வநாயகம் ஆவர். தமிழ் வரலாற்றாசிரியர்களான வையாபுரிப்பிள்ளை, ஜேசுதாசன் அருணாசலம் ஆகியோர் ஏற்றுக்கொண்ட கருத்து இது. இவருடைய மற்ற நூல் 'தமிழ் உரைநடை வரலாறு'. ஈழத்தின் உயர்கல்வித் துறையில் செல்வநாயகம் தொடங்கிவைத்த திறனாய்வுக் கல்வி, தமிழ்த் திறனாய்வியலின் மாபெரும் ஆளுமைகள் உருவாகக் காரணமாகவிருந்தது.
முனைவர் ஆ.இரா. வேங்கடாசலபதி, பேராசிரியர் நோபொரு கரஷிமா அவர்களை அறிமுகம் செய்துவைத்தார். 1933ல் பிறந்த கரஷிமா, டோக்கியோ பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியர். தற்சமயம் டைசோ பல்கலையில் இந்தியக் கல்வி ஆராய்ச்சித் துறைப் பேராசிரியராக விளங்குகிறார். உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தலைவராக 1989ம் ஆண்டு பொறுப்பேற்றார். தஞ்சையில் நடந்த 8வது தமிழாராய்ச்சி மாநாடு இவர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இவருடைய ஆராய்ச்சி 'A Concordance of Names in Chola Inscriptions' வெளியான பின்னர் இவர் தொடர்ந்து வெட்டெழுத்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார். “இந்தியாவில் காணப்படும் 58,800 வெட்டெழுத்துகளில் 28,000 வெட்டெழுத்துகள் தமிழில் கிடைக்கின்றன. இவற்றை முறையே ஆராய்ச்சி செய்வதன் மூலம் தமிழரின் உண்மையான வரலாற்றை கண்டறிய முடியும்” எனக் கரஷிமா சொல்கிறார்.
விருதளிப்பு விழா கனடிய தமிழ் இலக்கியத் தோட்டத்தின் அனுசரணையுடன் நடந்தது. செல்வா கனகநாயகம், நோபொரு கரஷிமா அவர்களுக்குப் பேரா. வி. செல்வநாயகம் எழுதிய 'தமிழ் இலக்கிய வரலாறு' நூலை அளித்தார். ஜெகன் செல்வநாயம் வழங்கிய நன்றியுரையுடன் விழா முடிவுக்கு வந்தது.
அ. முத்துலிங்கம், கனடா |