சத்குரு வழங்கிய 'இன்னர் எஞ்சினியரிங்' யோகப் பயிற்சி
மே 4-6, 2012 தேதிகளில் ஹூஸ்டன் நகரில் வாழ்க்கையை மாற்றியமைக்க வல்ல மிகப்பெரிய இரண்டரை நாள் யோகப்பயிற்சி முகாம் நடைபெற்றது. ஈஷா அறக்கட்டளையை நிறுவிய சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களே வந்திருந்து நடத்திய இந்த 'இன்னர் எஞ்சினியரிங்' வகுப்பில் பல்வேறு அமெரிக்க நகரங்களில் இருந்து சுமார் 1000 பேர் பங்கேற்றனர். பல மதங்களையும், இனத்தையும் சார்ந்த வெவ்வேறு பின்னணிகளைக் கொண்டவர்களை அங்கே பார்க்கக் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

சத்குரு அவர்கள், தான் வழங்குவது வாழ்கையை மாற்றும் ஒரு வழிமுறையே என்று வலியுறுத்திக் கூறினார். இந்த நுட்பத்தைக் கற்றுக்கொள்ள எந்தப் பின்னணியில் இருந்து வருகிறார்கள் என்பது முக்கியம் அல்ல, எவ்வளவு ஈடுபாட்டுடன் கற்க முயல்கிறார்கள் என்பதுதான் முக்கியம் என்று கூறினார். "மிகவும் பயனுள்ள, உண்மையான, சந்தேகங்களை அறவே அழிக்கும் பயிற்சி இது" என்று மாணவர் கோர்டி ஹோவே வியந்து கூறினார். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணி புரியும் ராஜேந்திர பாதாபண்ட, "பெற்றோர்கள் குழந்தைக்குத் தர முடியாததை இந்த யோகப் பயிற்சி தனக்கு தந்துள்ளது" என்றார்.

ஈஷா அறக்கட்டளை தன்னார்வத் தொண்டர்களால் நடத்தப்படும் மதச் சார்பற்ற நிறுவனம். தலைமையகம் தமிழகத்தின் கோவை மாநகரில், வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. ஈஷா இன்னர் சயன்சஸ் எனப்படும் அமெரிக்கக் கிளை நிறுவனம் டென்னசி மாநிலத்தில், மேக்மின்வில் நகரில் உள்ளது. இதன் பங்கேற்பாளர்கள் சாம்பவி மகாமுத்ர யோகப் பயிற்சியின் தத்துவ, ஆன்மீக, மற்றும் உடல் பின்புலங்களை புரிந்து கொண்டதோடு, சத்குருவுடன் உரையாடும் வாய்ப்பையும் பெற்றார்கள். சத்குரு அவர்களின் கனவான "உலகம் முழுவதும் அன்பு, வெளிச்சம், சந்தோஷம்" என்பதற்கு ஜார்ஜ் ப்ரவுன் கன்வென்ஷன் சென்டர் ஒரு எடுத்துக்காட்டாக அன்று இருந்தது.

ஈஷா அறக்கட்டளை அமெரிக்காவின் வெவ்வேறு நகரங்களில் நடத்தும் யோகப் பயிற்சிகளைக் குறித்து அறிய: www.ishausa.org

"பிரச்சினை உங்கள் வாழ்கையில் நடக்கும் நிகழ்ச்சிகளால் இல்லை, நீங்கள் வாழ்கையின் குறிக்கோளைத் தவற விட்டதனால்தான்" என்றும், "உள்ளுணர்வு என்பது, ஒரு வகையான கணிக்கும் பரிமாணமே அல்லாமல், புலன் உணர்வு அல்ல" என்றும் அறிவுறுத்துகிறார் சத்குரு.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com