மே 5, 2012 அன்று, பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியின் 62வது ஆராதனை விழா மில்பிடாஸ் ஜெயின் கோவிலில் கொண்டாடப்பட்டது. தொடக்கமாக சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி அன்பர்கள் பகவான் அருளிய அக்ஷரமணமாலையைப் பாடினார்கள். பின்னர் சுனிதா வரவேற்புரை நிகழ்த்தினார். நியூயார்க் ரமண ஆச்ரமத்திலிருந்து வந்திருந்த டென்னிஸ் ஹார்டல் சிறப்புரை ஆற்றினார். அதில் ஈசுவர சக்தி எப்படி வாழ்வின் பல தருணங்களில் தன்னைச் சரியான வழியில் நடத்திச் சென்றது என்பதை விவரித்தார்.
பகவானின் மகாநிர்வாணத்திற்குப் பிறகு பல ஆச்ரமவாசிகள் வெவ்வேறு இடங்களுக்குச் சென்றாலும், மீண்டும் ஆச்ரமத்துக்கே திரும்பி பகவானின் சான்னித்யம் அங்கு கொஞ்சமும் குறையாமல் இருப்பதை உணர்ந்தார்கள் என்பதையும்; ஆத்ம விசாரத்தில் ஈடுபடும் சாதகர்களுக்கு பகவானின் அருளும், வழிகாட்டுதலும் என்றும் உண்டு என்பதையும் விளக்கினார். அன்பர் ஒருவர் பகவானின் பேச்சை ஒலிப்பதிவு செய்ய முயற்சித்து கைகூடாமல் போனதையும், அதற்கு பகவான், "மௌனமே எனது மொழியாக இருக்க அதை எப்படி உங்களால் ஒலிப்பதிய முடியும்" என்று அருளியதையும் நகைச்சுவையுடன் கூறினார்.
பின்னர் குழந்தைகளின் நாடக நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து உஷா உருக்கமாகச் சரணாகதி பாடினார். வேத பாராயணம், ஆரத்தியுடன் விழா நிறைவுற்றது.
மேலும் விவரங்களுக்கு: www.arunachala.org
காவேரி கணேஷ் |