மே 6, 2012 அன்று, அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் (GATS), சித்திரைத் திருவிழா கொண்டாட்டமாக, க்ரேஸி மோகனின் 'சாக்லேட் கிருஷ்ணா' நகைச்சுவை நாடகம், ஜார்ஜியா டெக்கில் உள்ள ராபர்ட் ஃபெர்ஸ்ட் அரங்கில் நடைபெற்றது. சங்கத் துணைத்தலைவர் எழிலன் ராமராஜன் வரவேற்றுப் பேசினார். தலைமை விருந்தினர் பத்மினி சர்மா செயற்குழுவைப் பாராட்டிப் பேசினார். அடுத்து, சங்கத் தலைவர் தங்கமணி பால்ச்சாமி க்ரேஸி மோகனை அறிமுகப்படுத்திப் பேசினார்.
நாடகத்தைத் தொடங்குவதற்கு முன்னதாக க்ரேஸி மோகன் தனது வாழ்க்கை அனுபவங்களை நகைச்சுவையுடன் பகிர்ந்து கொண்டார். நாடகம் முழுவதுமே நகைச்சுவைச் சரவெடியாக இருந்ததால், கரவொலியாலும், சிரிப்பொலியாலும் அரங்கமே அதிர்ந்தது. க்ரேஸி மோகன் குழுவினருக்கு கேட்ஸ் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. சங்கத்தின் பொருளாளர் ராஜா வேணுகோபால் நன்றி தெரிவித்தார். குலுக்கல் முறையில் சில ரசிகர்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி தேசிய கீதத்துடன் நிறைவடைந்த நிகழ்ச்சி முழுவதையும் பிரதீபா ஹரி தொகுத்து வழங்கினார்.
தகவல்: சதீஷ் பாலசுப்ரமணியன் உதவி: உமா பாபா. |