காப்பாத்துங்க! காப்பாத்துங்க!
வழிநெடுகிலும் பூத்துக் குலுங்கும்
வண்ண வண்ண ரோஜாக்கள்
பறிக்க ஆளில்லாமல் விடுகின்ற
ஏக்கப் பெருமூச்சு!

கொண்டவனின் கைவிரல்
தன்மேல் பட்டுவிடாதா என
ஏங்கித் தவிக்கின்ற
மகிழுந்து ஒலிப்பான்களின்
மனப் பொருமல்!

பள்ளம் மேடின்றி
என்றும் புதுப்பொலிவுடன் திகழும்
சாலைகளைப் பார்த்து
‘இங்கு அடிக்கடி இடைத்தேர்தல் வருமோ?'
எனப் புகைச்சலுடன் கேட்கும்
என் சந்தேகத்தின் குரல்

இவை தவிர
இங்கு சத்தம் ஏதுமில்லை.

"உன் கணவரை உன்னிடமிருந்து பிரித்து
என்னுடயவராய் ஆக்கிக் காட்டுகிறேன் பார்"
என்ற மெகா தொடரில் வரும்
மானங்கெட்ட மாதரின்
சூளுரைகள் கேட்கவில்லை!

விளக்கு வைக்கும் நேரத்தில்
'ஐயையோ போயிட்டாரே'
என்ற அழுகுரல் கேட்கவில்லை;
தேன்கிண்ணம் கேட்கவில்லை;
புதுமெட்டும் கேட்கவில்லை!

தெருவில் நடந்து சென்றால்
வாகனங்களின் இரைச்சல்
செவிப்பறையைக் கிழிக்கவில்லை!

சிங்காரச் சென்னையிலிருந்து
அமெரிக்கா வந்திருக்கும் எனக்கு
இந்த அமைதி
நரக வேதனையாய் இருக்கிறது.

கூச்சல் போட்டு
யாராவது
என்னைக் காப்பாற்றுங்களேன்!

உமா ஹைமவதி ராமன்,
சான்டா கிளாரா, கலிஃபோர்னியா

© TamilOnline.com