அமெரிக்காவில் தமிழர் திருவிழா!
தமிழ் நாடு அறக்கட்டளையின் 37வது தேசிய மாநாடு மூன்று நாட்கள் ஹூஸ்டனில் வெகு விமரிசையாக நடைபெற்றது. அமெரிக்காவின் பதினெட்டு மாகாணங்களிலிருந்தும் கனடாவிலிருந்தும் தமிழர்கள் மாநாட்டில் வந்து கலந்து கொண்டனர்.

மே 25ம் தேதி மாலையில் எஸ்.பி.முத்துராமன், சுஹாசினி, உமையாள் முத்து, கு. ஞானசம்பந்தம், பர்வீன் சுல்தானா, புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி ஆகியோர் முன்னிலையில் மாநாட்டுச் சிறப்பு நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. பின்னணிப் பாடகர்கள் ராகுல் நம்பியார், ஹரிசரண், சைந்தவி ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர். பின்னர் அமெரிக்கத் தமிழர்கள் பங்கேற்ற இசை, நடன நிகழ்ச்சிகள் நடந்தேறின.

மே 26, சனிக்கிழமை காலை மாநாட்டின் நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்து அறக்கட்டளையின் தலைவர் டாக்டர். தெய்வநாயகம் தலைமை உரையாற்றினார். அறக்கட்டளை செய்து வரும் பணிகளையும், மாநாட்டின் குறிக்கோள்களையும் விவரித்தார். இந்திய வெளியுறவுத்துறை கான்சல் அனில் கே. மத்தா, ஜெர்மனி கான்சல் ஜெனரல் ரோலண்ட் ஹெர்மன், பேர்லாண்ட் நகர மேயர் டாம் ரீட் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். மேரிலாண்ட் மாகாணத்தின் வெளியுறவு துணைச் செயலர் (இந்தியாவில் மாநில அமைச்சர்போல்) டாக்டர் ராஜன் நடராஜன் மாநாட்டு மலரை வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றினார். அமெரிக்க வெளியுறவுத்துறை இந்திய விவகார ஆலோசகர் மெரின் ராஜதுரை வணிக வளாகத்தைத் திறந்து வைத்தார்.

மாநாட்டின் மையக்கருத்தான 'ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' என்பதை வலியுறுத்தி சுஹாசினி உரையாற்றினார். அரசுப் பள்ளியில் படித்தபோது தன்னுடன் படித்த ஏழை மாணவ நண்பர்களை நினைவு கூர்ந்து, அவர்களும் படிப்பாற்றல் மற்றும் திறமை உடையவர்களே; ஆனால், வசதியின்மை காரணமாக மேலே படிக்க முடியாமல் முடங்கிப் போய்விடுகிறது என்று கூறினார். அறக்கட்டளையின் திட்டம் ஏழை மாணவர்களின் வாழ்க்கைப் பாதையை மாற்றியமைக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து அறக்கட்டளையின் தமிழக அலுவலகம் மூலம் நிறைவேற்றப்படும் கல்விப்பணிகள் குறித்து விளக்கப்படம், செய்தித்தொகுப்பு, விளக்கவுரையைச் சென்னை அலுவலக எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் மன்மதா தேவி வழங்கினார். அறக்கட்டளை இயக்குனர்களைத் தலைவர் தெய்வநாயகம் அறிமுகம் செய்தார். இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் தனது திரையுலக அனுபவம் குறித்து மிகச் சுவையாகக் கலந்துரையாடினார். ஹூஸ்டன் மீனாட்சி தியேட்டர்ஸ் நாடகக்குழுவினரின் 'ஒரு நாள் நாயகன்' நாடகம் நடந்தது. அமெரிக்காவின் தமிழ் மருத்துவர்கள் ஐம்பதிற்கும் மேற்பட்டோர்கள் மருத்துவத்துறையின் புதிய முன்னேறங்கள் குறித்து கருத்துப் பரிமாற்றம், துறை சார்ந்த விளக்கவுரை, விவாதங்கள் என நடத்தினர்.

பேராசிரியர் கு. ஞானசம்பந்தம் தலைமையில், உமையாள் முத்து மற்றும் பர்வீன் சுல்தானா வாதாடிய 'தமிழ்த் திரைப்படங்களால் சமுதாயம் ஏற்றமடைகிறதா? சீரழிகிறதா?' என்ற தலைப்பில் வழக்காடு மன்றம் நடைபெற்றது. ஹூஸ்டன் தமிழ்ச் சங்கம் 'பாரதி கலை மன்றத்தின்' சார்பாக உள்ளூர் நடனக் கலைஞர்களின் பாரம்பரிய நடனங்கள் நடைபெற்றன. புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி மற்றும் குழுவினரின் நாட்டுப்புற இசை நிகழ்ச்சி மாநாட்டிற்குப் புதிய பரிமாணத்தைக் கொடுத்தது. வருகை தந்திருந்த தமிழர்கள் அனைவருக்கும் முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை உணர்ந்தனர். ஹரிசரண், சைந்தவி குழுவினர், தியாராஜ பாகவதர் முதல் இளையாராஜா வரையில் திரைப்படப் பாடல்களைப் பாடிப் பரவசப்படுத்தினர். மாநாட்டில் இளைஞர்களுக்கான கலந்துரையாடல், கருத்தரங்கங்கள் நடைபெற்றன. உயர்நிலைப் பள்ளி/கல்லூரி அமெரிக்க தமிழ் இளைஞர்கள், தமிழக ஊரகப்பள்ளி மாணவர்களுடன் சந்திப்பு, உரையாடல், கருத்துப் பரிமாற்றம் செய்வதற்காக 'கோடை விடுமுறைத் திட்டம்' குறித்து விவாதிக்கப்பட்டது.

மே 27 அன்று பின்னணிப் பாடகர் சைந்தவியின் கர்நாடக இசைக் கச்சேரியுடன் விழா ஆரம்பமானது. 'தமிழுக்கு இத்தனை முகங்களா' எனப் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் தனக்கேயான நகைச்சுவை பாணியில் கலகலப்பு ஊட்டினார். 'காவியத்தாயின் இளையமகன் கண்ணதாசன்' குறித்துப் பல நினைவுகளை உமையாள் முத்து திரும்பக் கொணர்ந்தார். 'காதல் காதல் காதல்' காதலும் காப்பியமும் எவ்வாறு பின்னிப் பிணைந்துள்ளன என்பதை சிலப்பதிகாரம், கம்பராமாயணம், மகாபாரதக் காப்பியங்களிலிருந்து எடுத்துக்காட்டிக் காதலின் மேன்மையைப் பறைசாற்றினார் பர்வீன் சுல்தானா. திரைக் குடும்பத்திலிருந்து வந்தாலும், சினிமா வாய்ப்பு தனக்கு தங்கத் தாம்பாளத்தில் வைத்துத் தரப்படவில்லை என்பதைப் பார்வையாளர் கேள்விக்கு பதிலாகப் பகிர்ந்து கொண்டார் சுஹாசினி. எம்.ஜி.ஆரின் மனித நேயத்தை எஸ்.பி. முத்துராமன் நினைவு கூர்ந்தார்.

'குற்றாலக் குறவஞ்சி'யை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த இந்திரா பீட்டர்சன் குறவஞ்சி குறித்த பல அரிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். 'சிந்து சமவெளி நாகரிகமும் தமிழ் கலாசாரமும்' என்ற தலைப்பில் டாக்டர் நா. கணேசன் பேசினார். தமிழ் இசையின் தொலைநோக்கு குறித்து கன்னிக்ஸ் கன்னிகேஸ்வரன் உரையாற்றினார்.

தமிழ் கணினிக் கல்வியும், தமிழ் இணைய தளங்களும் என்ற தலைப்பில் சௌந்தர் ஜெயபால் விவாதித்தார். அனிதா குப்புசாமி கும்மிப் பாட்டு பாட, பெண்களைக் கும்மியடிக்க வருமாறு அழைப்பு விடுத்தார் புஷ்பவனம் குப்புசாமி. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெண்கள் உடனடியாகக் களத்தில் குதித்து சிறப்பாகக் கும்மி அடித்தனர்.

மதுரை தியாகராயர் கல்லூரி தலைவர் கருமுத்து கண்ணன் அவர்களின் கல்விப் பணியைப் பாராட்டி அவருக்குச் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. ஏற்புரையாற்றிய அவர், தமிழ்நாடு அறக்கட்டளையின் கல்விப்பணி பல ஏழை மாணவர்களை விஞ்ஞானிகளாக, தொழிலதிபர்களாக முன்னேற்றமடையச் செய்யும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் அரோரா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மாநாடு கிட்டத்தட்ட 70 ஆயிரம் டாலர் வரை இந்த ஆண்டின் தமிழக கல்விப் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்துள்ளது.

டாலஸ் தமிழ்ச் சங்க இளம்பெண்களின் நாட்டுப்புற நடனமுயும், ஹூஸ்டன் பாரதி கலை மன்றத்தின் அலங்கார அணிவகுப்பு மற்றும் நடன நிகழ்ச்சியும் பிரபலங்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றது. நிறைவாக, ராகுல் நம்பியார், ஹரிசரண், சைந்தவியின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. ரஹ்மான் முதல் 'கொலவெறி' அனிருத் வரையான இசையமைப்பாளர்களின் திரைப் பாடல்களைப் பாடி பரவசப்படுத்தினர். துள்ளலான பாடல்களுக்கு ஒட்டுமொத்த அரங்கமே நடனமாட மாநாடு நிறைவு பெற்றது.

தினகர்,
ஹூஸ்டன், டெக்சாஸ்

© TamilOnline.com