தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-12)
இதுவரை: ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணிபுரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகச் சொல்லவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறுகிறாள். அவரை அறிமுகம் செய்யுமாறு அவர்கள் கேட்டுக் கொள்கிறார்கள். ஷாலினி தூய தண்ணீரின் முக்கியத்துவத்தைப் பற்றி சூர்யாவுக்கும் கிரணுக்கும் எடுத்துக் கூறி இந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைக்குமாறு விண்ணப்பிக்கிறாள். சூர்யாவும் கிரண், ஷாலினி இருவருடன் அக்வாமரீன் என்னும் அந்நிறுவனத்துக்குச் சென்று அங்கு சந்தித்த யாவ்னா என்ற இளம்பெண்ணை, அவளுடைய ஓட்டப் பயிற்சி, வரவேற்பறையின் கலையமைப்பு ஆகிவற்றைக் கூர்ந்து கவனித்து, கணித்து தன் திறனில் நம்பிக்கை பெறச் செய்கிறார். பிறகு யாவ்னா மூவரையும் ஆராய்ச்சிக் கூடத்துக்கு அழைத்துச் சென்று பலதரப்பட்ட உப்பகற்றல் நுட்ப சாதனங்களைப்பற்றி விவரிக்கிறாள். ஆவியாக்கல் (distillation), எதிர்ச் சவ்வூடு பரவல் (reverse osmosis) போன்ற எளிதான பழைய நுட்பங்களைப் பற்றிக் கூறிவிட்டு புதுநுட்பங்களைப் பற்றி விவரித்த பிறகு, தாமஸ் நீருப்பகற்றல் துறையின் சில நவீன நுட்பங்களைப் பற்றிப் பொதுவாக விவரித்தபின், அக்வாமரீனின் சில தனிப்பட்ட சொந்த நுட்பங்களைப் பற்றியும் விவரித்தனர். இப்போது மேற்கொண்டு என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் வாருங்கள்!

*****


அக்வாமரீனின் மகத்துவம் வாய்ந்த உயர்தொழில் நுட்பங்கள் உப்பகற்றல் துறையில் புரட்சிகரமான முன்னேற்றங்களை அளித்துள்ளதாகவும், அதனால் உலகத்துக்கே எவ்வளவு அதிபலன் கிட்டப் போகிறது என்றும் கூறியபடிக் கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்த தாமஸை சூர்யாவின் "சரி, உங்கள் பிரச்சனைதான் என்ன?" என்ற சாதாரணக் கேள்வி மெய்யுலகத்துக்கு தடால் என இழுத்துவிடவே தடுமாறிவிட்ட தாமஸ், குரல் தழுதழுக்க, எங்கள் நுட்பம் பலனடைய நீங்கள்தான் உதவவேண்டும் என்று சூர்யாவின் கரங்களைப் பிடித்துக் கெஞ்சிக் கேட்டுக் கொள்ளவே, "நிச்சயமாகச் செய்வோம்!" என்று அவருக்கு உறுதியளித்த சூர்யா பிரச்சனையைப் பற்றி விவரிக்கக் கோரினார்.

தாமஸூம் விளக்க ஆரம்பித்தார். "முதல்ல எல்லாமே நல்லாத்தான் போய்க்கிட்டிருந்தது. நான்கூட நிறுவனத்தைப் பங்குச் சந்தைக்குக் கொண்டு போய் இன்னும் நிறைய முதலீடு சேர்க்க ஆயத்தம் செய்ய ஆரம்பிச்சேன். ஆனா திடீர்னு சின்னச் சின்ன அம்சங்களில கோளாறு ஏற்பட ஆரம்பிச்சது. அதுனால நான் பங்குச் சந்தை விவகாரத்தை கொஞ்சம் மூட்டை கட்டி வச்சுட்டு கோளாறுகளை ஆராயற முயற்சியில இறங்க வேண்டியதாப் போச்சு. என்ன செய்யறது, எல்லாம் என் போதாத காலந்தான் போலிருக்கு."

சூர்யாவின் முகத்தில் ஒருவிதமான ஒளி கணநேரத்துக்குப் படர்ந்து மறைந்தது. ஆனால் ஒன்றும் கூறாமல் மேற்கொண்டு கூறுமாறு சைகை செய்யவே தாமஸ் தொடர்ந்தார். சூர்யாவின் முகபாவனையைக் கவனித்துவிட்ட கிரண், "சரிதான், வழக்கமான பணத்தால விளைஞ்ச பிரச்சனைன்னு கணிக்கறார் போலிருக்கு, பிறகு பேசலாம்" என எண்ணிக்கொண்டு, தன் கைபேசியில் குறித்துக் கொண்டான்.

"எங்க சொந்தத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தாம சோதனை செஞ்சா பிரச்சனைகள் வரா மாதிரி தெரியலை. ஆனா எங்க நுட்பங்களைச் சேர்த்தா, கொஞ்ச நேரம் சரியா வேலை செஞ்சப்புறம் எதாவது கோளாறு வந்துடுது. எங்க நுட்பங்களைச் சேர்க்காட்டா, கிரண் சொன்னா மாதிரி வெறுமனே காரேமோரேன்னு எதை எதையோ ஒண்ணு கூட்டி ஒட்டி வச்சா மாதிரிதான் இருக்கும். நானும் எப்படி எப்படியோ அலசி ஆராய்ஞ்சு பாத்துட்டேன். ஆனா எதுனால இப்படி கோளாறு ஆகுதுன்னு புரியவே மாட்டேங்குது."

கிரண் மூக்கை நீட்டினான், "ஆஹா! எங்க முந்தின கேஸ்களில எல்லாம் நீங்க கடைசில சொன்ன வாக்கியத்தைக் கேட்ட ஒவ்வொரு தரமும் ஒரு டாலர் கிடைச்சிருந்தா ..."

தாமஸ் அவனை முறைக்கவும், ஷாலினி குறுக்கிட்டு, "ஷ், கிரண், சும்மா இரு. அவரே பாவம் கவலையில் இருக்கார். அவரைப் போய் எதையோ சொல்லி இன்னும் சீண்டறையே. நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க தாமஸ். சூர்யா நிச்சயமா உங்க பிரச்சனையோட மூலகாரணத்தைக் கண்டு பிடிச்சுடுவார்."

மிக்க யோசனையில் ஆழ்ந்திருந்த சூர்யா, ஒரு கூர்மையான கேள்வியெழுப்பினார், "நீங்க சொல்றதைக் கேட்டப்புறமும் எனக்கு இன்னும் ஒரு அடிப்படையான குழப்பம் இருக்கு தாமஸ்..."

தாமஸ் தூண்டினார். "உம்... என்ன குழப்பம் சூர்யா, கேளுங்க. எனக்குப் புரிஞ்ச அளவுக்கு விளக்கறேன்."

சூர்யா வினாவினார், "உங்க சொந்த நுட்பங்களைச் சேர்த்தா மட்டும் விதவிதமான கோளாறுகள் முன்கூட்டிச் சொல்ல முடியாத தருணங்களில் ஏற்படுதுன்னு சொன்னீங்க, சரி. அதைமட்டும் வச்சுப் பார்த்தா உங்க நுட்பங்களிலதான் எதோ கோளாறுன்னு சொல்லலாம்..."

யாவ்னா குறுக்கிட்டாள். "ஆமாம், அப்படித்தானே தோணும்? நல்லா இயங்கிக்கிட்டிருந்த நுட்பங்கள் திடீர்னு எப்படியோ கரணம் அடிச்சு கோளாறாயிடுச்சுன்னுதான் நாங்க வருத்தப் பட்டுக்கிருக்கோம். அதுல என்ன குழப்பம்?"

சூர்யா மெல்லத் தலையாட்டி ஆமோதித்தபடி விளக்கினார். "சட்டுன்னு எனக்கும் அப்படித்தான் தோணிச்சு. இன்னும் கொஞ்சம் ஆழமா யோசிச்சதுல வேற எண்ணம் உதிச்சது. கோளாறுகள் நுட்பங்களிலேயேவா, அல்லது அந்த நுட்பங்களை மொத்தமான சிஸ்டத்தின் பாஸரல் முறையோட இணைக்கறதுலயான்னு. அதைப்பத்தி உங்க கருத்து என்ன தாமஸ்?"

தாமஸ் சூர்யாவின் அறிவுத்திறனைப் பாராட்டினார். "அட! ரொம்பச் சரியான பாயிண்ட்டைப் புடிச்சிட்டீங்களே சூர்யா, பிரமாதம்! நீங்க கேட்டா மாதிரிதான் நாங்களும் முதல்ல கோளாறு நுட்பத்துலயா இல்லைன்னா அவை பிணைப்பிக்கப்பட்ட வழிமுறையிலயான்னு சந்தேகப்பட்டோம். அந்த இரண்டு கோணங்களையும் பல்வேறு வகைகளில் தீவிரமா ஆராய்ஞ்சு பாத்துட்டோம். எங்க நுட்பங்களைச் சார்ந்த ஆனால் அவ்வளவு முன்னேற்றம் இல்லாத நுட்பங்களை ஒவ்வொண்ணா பிணைச்சுப் பார்த்ததுல, இந்த மாதிரிக் கோளாறுகள் வரலை. அதுனாலதான் எங்க நுட்பங்களிலேயே எதோ புதுக்கோளாறு வந்திருக்கணும்னு சந்தேகிக்கிறோம். பிணைப்பு வழிமுறையில பழுதே இருக்க முடியாதுன்னும் சொல்லிட முடியாதுதான். ஆனாலும் அதுக்கு சான்ஸ் கம்மின்னுதான் சொல்லணும்."

சூர்யா இன்னும் இளகாத தீவிர யோசனையோடு தலையாட்டிக் கொண்டே இன்னொரு வினாவை விடுத்தார். "சரி, நுட்பங்களிலதான் கோளாறுன்னு இப்போதைக்கு அனுமானம் வச்சுப்போம். ஆனா, உங்ககிட்ட மூணு நுட்பங்கள் இருக்கே? அதுல எந்த நுட்பத்துல கோளாறு இருக்குன்னு காட்டறத்துக்கு எதாவது புள்ளிவிவரங்கள் கிடைச்சிருக்கா?"

தாமஸ் மீண்டும் சிலாகித்தார். "இன்னொரு ரொம்ப நல்ல கேள்வி சூர்யா! துரதிருஷ்ட விதமா, அப்படி சொல்றா மாதிரி ஒரு நுட்பத்தை மட்டும் தனிப்பட்டு எடுத்துக் காட்டற மாதிரியான ஒரு விவரமும் கிடைக்கவே இல்லை. வெவ்வேறு சமயத்துல வெவ்வேறு நுட்பங்களில கோளாறு இருக்கற மாதிரி காட்டற விவரங்கள்தான் கிடைச்சது. அதைப் பாக்கறீங்களா?"

சூர்யாவின் முகத்தில் மின்னல் வேகத்தில் ஒரு விதமான ஒளி கணப்பொழுதில் தோன்றி மறைந்தது. மற்றவர்கள் கவனிக்கா விட்டாலும், ஷாலினியும் கிரணும் அதைக் கண்டுகொண்டுவிட்டனர். தாமஸின் பதிலிலிருந்து சூர்யா எதோ முக்கியமான கணிப்பைக் கிரகித்துவிட்டார் என்பது அவர்களுக்குப் புரிந்துவிட்டது. அதைத் தெரிந்து கொள்ள மிக்க ஆர்வம் இருந்தாலும், சூர்யாவின் அணுகுமுறையை நன்கு புரிந்து கொண்டிருந்ததால், அவரே விளக்கும்வரை பொறுத்திருக்கலாம் என்று இருவரும் கண்ஜாடையிலேயே பேசிக்கொண்டு மௌனித்தனர்.

சூர்யா விசாரணையைத் தொடர்ந்தார். "அப்படியா, சரி. இப்ப இதைப்பத்தி நாம மட்டும் பேசினது போதும். இந்த நுட்பங்களில் வேலை செய்யற உங்க குழு உறுப்பினர்களோடவும், நிர்வாகக் குழுவினரோடவும் பேசலாம். அப்ப இன்னும் மேல்விவரங்கள் கிடைக்கும். அதோட மேல அதோ தெரியுதே, பல மின்திரைகள் மூலமா இந்த உப்பகற்றல் சாதனங்கள் எப்படி வேலை செய்யுதுன்னு கண்காணிச்சிட்டிருக்காங்களே--அந்தத் திரைகளையும் பார்க்கணும்."

தாமஸ் தலையில் தட்டிக் கொண்டார், "சே பாத்தீங்களா, என்ன மாதிரி மடையன் நான்! என் கனவுலகிலேயே இருந்துட்டு உங்களுக்கு இன்னும் முக்கியமான இடங்களுக்கும் நபர்களுக்கும் பரிச்சயமே தராம இருந்துட்டேனே. வாங்க முதல்ல அந்த மின் கண்காணிப்புக் கூடத்துக்குப் போய் அங்கே என்ன செய்யறாங்கன்னு விளக்கலாம். அதுக்கு முன்னாடி, மொத்தமா சேர்த்து, நடைமுறைப் பலனளிக்கற முழு அக்வாமரீன் உப்பகற்றல் நிலையத்தைப் பார்க்கலாம் வாங்க" என்று நகர்ந்தார்.

அவர் பின்னால் துப்பறியும் குழுவினர் மூவரும் மிகத்தூரம் போகவேண்டுமோ என அவசரமாகத் தொடர, யாவ்னா நிதானமாகவே தொடர்ந்தாள். சில அடிகளே எடுத்து வைத்த தாமஸ் சடாரெனெ நின்று கையைப் பெருமிதத்துடன் நீட்டிக் காட்டி "இதோ பாருங்கள் எங்கள் சாதனையான சாதனத்தை!" என்றார்.

கிரண் புரியாமல், "எங்கே?" என்று வினாவவும், தாமஸ், "இதோ, நம்ம முன்னாடியே இருக்கே, இந்த சதுரத்தின் நடுவில் இருப்பதுதான் அக்வாமரீனின் அற்புத சாதனம்!" என்றார்.

அவர் காட்டியதோ, கிரண் எதிர்பார்த்த மாதிரி பெரிதாக எதுவும் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை. எதோ ஒரு சில சிறு கனசெவ்வக மற்றும் சிலிண்டர் வடிவக் கலன்கள், சதுரத்தின் நடுவில் பலப்பல குழாய்களால் பிணைக்கப் பட்டிருந்தன. ஒரு பக்கத்தில் மிகமிக லேசான பழுப்புக் கலந்த பாசி நிறத்தில் இருந்த நீர் உள்பாய்ந்து கொண்டிருந்தது. சதுரத்தின் அடுத்த கோடியில், நிறமற்ற நீர் இன்னொரு சிறியக் கண்ணாடித் தொட்டிக்குள் சொட்டிக் கொண்டிருந்தது.

கிரண், ஏற்கனவே இருமுறை தாமஸிடம் வாங்கிக்கட்டிக் கொண்ட சூடு நினைவிருந்தாலும், ஏமாற்றம் தாளாமல் கூவியேவிட்டான். "என்ன, இவ்வளவுதானா? தக்குணியூண்டு இருக்கு! எதோ பாக்கப் பிரமாதமா இருக்கும்னு எதிர்பார்த்தேனே." உடனே, கப்பென்று வாயைப் பொத்திக் கொண்டு பரிதாபமாக தாமஸின் அடுத்த வெடிப்புக்குத் தயாரானான்.

அவனது தவிப்பைக் கண்டு யாவ்னா களுக்கென்று நகைக்கவும், ஷாலினி அவனை முறைக்கவும், தாமஸோ சிறிதும் கோபிக்காமல் முறுவலித்தார். "கிரண், நீ எங்க முன்னேற்றத்தை ரொம்ப நல்லா நிரூபிச்சுட்டே. கிரேட் ஜாப். இதுவரை நிர்மாணிக்கப் பட்டிருக்கும் உப்பகற்றல் தளங்கள் பிரும்மாண்டமானவை. பார்க்கப் பிரமாதமானவைதாம். ஆனா, நீ சொன்னபடி தக்குணியூண்டு இருக்கும் எங்களோட சாதனம் அவற்றைவிட நிறைய தூயநீர் உற்பத்தி செய்யக் கூடியது தெரியுமா? அதுனாலதான் நாங்க மிக்க எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் வச்சிருக்கோம்."

கிரண் "வாவ், அடிடா சக்கைன்னான்! பிரமாதம்!" என்றான்!

ஷாலினியும் பாராட்டலுடன் வினாவினாள். "இதைப் பார்த்தால், நீங்க சொல்றதை நம்பவே முடியாதபடி மிகவும் பிரமாதமா இருக்கு தாமஸ். ஆனா இப்ப தூயநீர் கொட்டலையே. சின்னதா சொட்டிக்கிட்டுன்னா இருக்கு."

தாமஸின் முகம் வாடிவிட்டது. "ரொம்ப சரியான, ஆனால் மிக நோகவைக்கும் கேள்வி. நீயும் சரியான பாயிண்ட்டைப் புடிசுட்டே. இப்ப இந்த சாதனம் எங்க தனி நுட்பம் எதுவும் பயன்படுத்தலை. பழைய நுட்பங்கள் மட்டும் ஓடிக்கிட்டிருக்கு. எதோ கோளாறு போலிருக்கு, பரிசோதனை செஞ்சுக்கிட்டிருக்காங்கன்னு நினைக்கிறேன்" என்று துக்கத்துடன் தழுதழுத்தார்.

சூர்யா, "ஓ! சரி. உங்க மின்கண்காணிப்புக் கூடத்தைக் காட்டுங்க. என்ன பரிசோதனை செய்யறாங்கன்னு பார்க்கலாம்." என்றார்.

தாமஸ் ஆமோதித்தார். "ஆமாம் சூர்யா, உங்க ஆராய்ச்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டுப் போக இது நல்ல தருணந்தான். வாங்க போய், என்ன குடாய்ஞ்சிக் கிட்டிருக்காங்கன்னு பார்க்கலாம். நீங்களே அவங்களை நேரடியா விசாரிச்சு விவரங்களைத் தெரிஞ்சுக்கலாம். நீங்க கேட்ட எங்க தொழில்நுட்ப மற்றும் நிர்வாகக் குழுவினரும் சிலர் அங்க இருப்பாங்க. அவங்ககிட்டயும் விசாரணையைத் தொடரலாம்.

தாமஸ் அழைத்துச் சென்ற கண்காணிப்புக் கூடமும், அங்கு அவர்கள் கண்ட பிரச்சனை விவரங்களும், அவற்றைப் பற்றிய சூர்யாவின் விசாரணையும் மிக சுவாரஸ்யமாக இருந்தன. சூர்யாவின் மேல் தாமஸுக்கு இருந்த மதிப்பும் நம்பிக்கையும் மேலும் வளர்ந்தன.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com