குள்ளநரியும் பசுவும்
ஒரு காட்டில் குள்ளநரி ஒன்று வசித்து வந்தது. அது ஒரு சமயம் இரை தேடிக் காட்டுக்கு வெளியே சென்றது. ஒரு வயலில் மாடுகள் கூட்டமாகப் புல் மேய்ந்து கொண்டிருப்பதைக் கண்டது. எப்படியாவது ஒரு மாட்டை ஏமாற்றிக் காட்டுக்குள் கூட்டிச் சென்றுவிட நினைத்தது. தனியாக மேய்ந்து கொண்டிருந்த ஒரு மாட்டை அணுகித் தந்திரமாய்ப் பேச ஆரம்பித்தது.

"வணக்கம் பசுவே! பாவம் நீங்கள் இந்த சுட்டெரிக்கும் வயலில் இப்படிக் காய்ந்த புல்லைத் தின்று கொண்டிருக்கிறீர்களே! எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது" என்றது.

உடனே பசு, "நரியாரே, இந்தக் காய்ந்த புல் ருசியாகவே இருக்கிறது. வெயிலைத் தாங்குமளவிற்கு எங்கள் தோலும் இருக்கிறது. எனவே நீங்கள் கவலைப்பட வேண்டாம்" என்றது.

நரியும் சளைக்காமல், "நீங்கள் என்னுடன் காட்டுக்கு வாருங்கள். அங்கே ஒரு சோலை இருக்கிறது. அதில் நிறைய மரங்கள் இருக்கின்றன. மிகவும் குளுகுளுவென்று இருக்கும். நீங்கள் நிம்மதியாக உண்ணலாம். நிழலில் ஓய்வெடுக்கலாம். மாலை ஆனதும் வந்து இங்கே உங்கள் கூட்டத்துடன் சேர்ந்து கொள்ளலாம்" என்றது தந்திரமாக.

நரியின் பேச்சிற்கு மயங்கிய பசு அதனுடன் புறப்பட்டது. காட்டு வழியில் ஆங்காங்கே இளைப்பாறி இலை, தழைகளைத் தின்றுவிட்டு ஆனந்தமாக நடந்து போய்க் கொண்டிருந்தது பசு. அப்போது திடீரென கர்ஜித்தவாறே எதிரே வந்தது ஒரு சிங்கம்.

பசு, நரி இரண்டுமே அதனைக் கண்டு அஞ்சி நடுங்கின.

நரி, பசுவிடம், "நீ அஞ்சாதே, நான் போய் அதனிடம் பேசிப் பார்க்கிறேன். நீ இங்கேயே நில்" என்று கூறிவிட்டு மெல்லச் சிங்கத்திடம் சென்றது. ரகசியமாக அதனிடம் "சிங்கராசா... நீங்கள் மிகவும் பசியோடு இருப்பது போல் தெரிகிறது. கவலைப்பட வேண்டாம். இதோ, உங்களுக்காக ஒரு கொழுத்த பசுவை அழைத்து வந்திருக்கிறேன். ஆனந்தமாகத் தின்னுங்கள். என்னை உயிரோடு விட்டு விட்டால் போதும்" என்றது.

சிங்கம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே பசுவிடம் சென்ற நரி, "ஒன்றும் கவலைப்படாதே! சிங்கம் நம்மை ஒன்றும் செய்யாது. என் பின்னால் வா" என்று கூறி, ஒரு பள்ளத்தின் அருகே அழைத்துச் சென்று, திடீரென அதைக் கீழே தள்ளிவிட்டது.

பள்ளத்தில் விழுந்த பசு, "ஐயோ பசப்பு வார்த்தைக்கு ஏமாந்து, ஆபத்தில் மாட்டிக் கொண்டோமே" என்று எண்ணிக் கண்ணீர் வடித்தது.

சிங்கத்திடம் சென்ற நரி, "சிங்கராசா... உங்கள் உணவு தயார்" என்று பசு விழுந்திருந்த பள்ளத்தைக் காட்டியது.

உடனே நரியின் கழுத்தைப் பிடித்த சிங்கம், "அது இருக்கட்டும். முதலில் உன்னைக் கொன்று தின்னப் போகிறேன்" என்றது.

"ஐயோ, என்ன இது அக்கிரமம்! நான் உங்களுக்கு நல்லதுதானே செய்தேன்" என்றது ஈனக்குரலில் குள்ளநரி.

"உன்னை நம்பி வந்த பசுவுக்கு நீ செய்தது நம்பிக்கைத் துரோகம். நம்பிக்கைத் துரோகிகளுக்கு இந்தக் காட்டில் இடமில்லை" என்று கூறி, அதனைக் கொன்று தின்றுவிட்டு காட்டுக்குள் ஓடிப்போனது சிங்கம்.

எப்படியோ தட்டுத் தடுமாறி பள்ளத்திலிருந்து மேலேறிய பசு, "போதும், போதும். காய்ந்த புல்லே போதும். காடும் வேண்டாம், நிழலும் வேண்டாம்" என்று நினைத்தவாறே வயலை நோக்கி ஓடிப்போனது.

சுப்புத் தாத்தா

© TamilOnline.com