டி.கே. சண்முகம்
தமிழ் நாடகக் கலை வளர்ச்சிக்குத் தொண்டாற்றியவர்களுள் குறிப்பிடத்தகுந்த ஒருவர் 'அவ்வை சண்முகம்' என்று போற்றப்பட்ட டி.கே. சண்முகம். இவர் திருவனந்தபுரத்தில், டி.எஸ். கண்ணுசாமிப் பிள்ளை-சீதையம்மாள் தம்பதிக்கு ஏப்ரல் 26, 1912 அன்று மூன்றாம் மகவாகப் பிறந்தார். பிள்ளை ஒரு நாடக நடிகர். அதிலும் 'ஸ்திரீ பார்ட்' எனப்படும் பெண் வேடமிட்டு நடிப்பதில் பெரும்புகழ் பெற்றவர். நாடகப் பேராசானாகத் திகழ்ந்த தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் மாணவர். பொருளாதாரச் சூழலால் கண்ணுசாமிப் பிள்ளை நடிப்பதை விடுத்துச் சிறிதுகாலம் அச்சகம் ஒன்றில் பணியாற்றினார். தன் குழந்தைகளும் நாடகத் துறையில் ஈடுபடுவதை அவர் விரும்பவில்லை. அவர்கள் நன்கு படித்து அரசு வேலையில் அமர வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். ஒருமுறை அவர் யதேச்சையாக மதுரையில் சங்கரதாஸ் சுவாமிகளைச் சந்திக்க நேர்ந்தது. அப்போது சுவாமிகள் 'மதுரை தத்துவ மீனலோசனி வித்வ பால சபா' என்ற நாடகக் குழுவை நடத்தி வந்தார். குழந்தைகளைப் பார்த்த அவர் தன் குழுவில் அவர்களைச் சேர்த்து விடுமாறும் தான் நாடகம் சொல்லிக் கொடுப்பதோடு படிக்கவும் ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். முதலில் தயங்கிய கண்ணுசாமிப் பிள்ளை பின்னர் ஏற்றுக் கொண்டார். அன்றுமுதல் டி.கே. சங்கரன், டி.கே. முத்துசாமி, டி.கே. சண்முகம், என்ற மூன்று சகோதரர்களும் அந்தக் கம்பெனியின் ஆஸ்தான நடிகர்கள் ஆனார்கள். கடைசிச் சகோதரர் டி.கே. பகவதி குழந்தை ஆனதால் சேர்க்கப்படவில்லை.

சுவாமிகளின் பயிற்சியாலும், தந்தையின் வழிகாட்டலாலும் நாடக நுணுக்கங்களை சகோதரர்கள் கற்றுக் கொண்டனர். 'சத்தியவான் சாவித்ரி' நாடகத்தில் நாரதராகத் தோன்றிச் சண்முகம் முதன்முதலாக நடித்தார். அப்போது அவருக்கு வயது ஆறு. தொடர்ந்து 'சீமந்தனி', 'சதி அனுசூயா', 'சதி சுலோசனா', 'பார்வதி கல்யாணம் என அனைத்து நாடகங்களிலுமே நாரதர் வேடம்தான். 'அபிமன்யு சுந்தரி' என்ற நாடகத்தில் கதாநாயகனாக நடித்தபின் தொடர்ந்து பல நாடகங்களில் நாயகனாக நடிக்க ஆரம்பித்தார். மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் எனப் பல பகுதிகளுக்கும் சென்று நாடகம் நடித்தனர். சண்முகத்தின் அழகிய முகமும், பாடுவதற்கேற்ற குரல் வளமும் ரசிகர்களைக் கவர்ந்தன. 'ஸ்டார்' நடிகர் ஆனார்.

அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த 'பால மனோகர சபா'வைத் தெ.பொ.மீ. கிருஷ்ணசாமிப் பாவலர் நடத்தி வந்தார். அவர் டி.கே.எஸ். சகோதர்களை தமது குழுவில் சேர்ந்து நடிக்க அழைத்தார். சகோதரர்கள் அக்குழுவில் இணைந்தனர். 'பர்த்ருஹரி' என்ற நாடகத்தில் நடித்துப் புகழ்பெற்றனர். பின்னர் பாவலரின் 'கதரின் வெற்றி' என்ற தேசியப் புரட்சி நாடகத்தில் டி.கே. முத்துசாமி கதாநாயகி மரகதமாகவும், சண்முகம் வக்கீலாகவும் நடித்தனர். ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து வசனங்களும் பாடல்களும் அதில் இடம் பெற்றிருந்தன. நாடகத்துக்கு நல்ல வரவேற்பு கிட்டியது. (இதுதான் தமிழ்நாட்டில் முதன்முதலாக மேடையேறிய தேசிய சமூக நாடகம்). தொடர்ந்து பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய 'மனோகரா' நாடகத்தை நடத்தப் பாவலர் முன் வந்தார். மனோகரனாக நடித்து பெரும் பாராட்டுதலைப் பெற்றார் டி.கே. சண்முகம். நாடகத்தை எழுதிய பம்மல் சம்பந்த முதலியார், 'டி.கே.ஷண்முகம் மனோகரனாக நடித்ததைப் பார்த்ததும் என் மனதிற்குச் சாந்தியும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. நான் வெகுநாட்களாக ஆவலோடு எதிர்பார்த்திருந்த ஓர் உத்தம நடிகர் தோன்றி விட்டார். என்பதை இவரது நடிப்பு வெளிப்படுத்தியது' என்று பாராட்டினார். தங்கப்பதக்கம் அளித்து கௌரவித்தார். சர். சி.பி. ராமசாமி ஐயர் இவரது 'அபிமன்யு சுந்தரி' நாடகத்தைப் பாராட்டி வாழ்த்தியதுடன் தங்கப்பதக்கம் அளித்து கௌரவம் செய்தார்.

இந்நிலையில் குருநாதரான சங்கரதாஸ் சுவாமிகள் திடீரெனப் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். அது டி.கே.எஸ். சகோதரர்களைப் பெரிதும் வாட்டியது. அவரது அந்திம காலத்தில் உடனிருந்து கவனித்துக்கொள்ள நேர்ந்தது. சில நாட்களில் சுவாமிகள் காலமானார். தொடர்ந்து சிறுசிறு நாடகங்களை நடத்தி வந்த நிலையில் தந்தையும் காலமானார். அதனால் குடும்பம் தத்தளித்தது. மனதைத் தேற்றிக்கொண்டு மீண்டும் நாடகத்தில் நடிக்க ஆரம்பித்தார் டி.கே.எஸ். 'மதுரை வீரன்', 'மன்மத தகனம்' எனப் பல நாடகங்களில் நடித்தனர். நண்பர்களின் ஆதரவுடன் திருவண்ணாமலைக்கு வந்து நாடகம் போட்டனர். நல்ல பெயரும் வசூலும் கிடைத்தது.

அப்போது திருவண்ணாமலையில் மகான் சத்குரு சேஷாத்ரி சுவாமிகள் வசித்து வந்தார். ஒருநாள் டி.கே.எஸ். 'சத்தியவான் சாவித்திரி' நாடகத்தில் நாரதராக நடித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென ஓட்டமும் நடையுமாக அங்கே வந்த சுவாமிகள் விறுவிறுவென மேடையில் ஏறினார். யாரோ ஒருவர் வைத்துக் கொண்டிருந்த மாலையை வாங்கி டி.கே.எஸ். கழுத்தில் சூட்டினார். கையைத் தட்டினார். அவரது மகிமையை உணர்ந்திருந்த பார்வையாளர்களும் மகிழ்ச்சியுடன் கை தட்டினர். பின் கூட்டத்தினுள் புகுந்து மாயமாய் மறைந்து போய்விட்டார் சுவாமிகள். இது பற்றி டி.கே.எஸ். “இது நடந்தபோது அந்த நாளில் எனக்கொன்றும் புரியவில்லை. பின்னர் அவரது பெருமையையும், அற்புதச் செயல்களையும் உணர்ந்த நான் அந்தப் பழைய நிகழ்ச்சியை எண்ணிப் பெருமையடைகிறேன். உண்மையிலேயே அது நான் பெறுதற்கரிய பேறு என்றே கருதுகிறேன்” என்று குறித்துள்ளார். உண்மையிலேயே அது டி.கே.எஸ்ஸிற்குக் கிடைத்த பெரும் பேறாயிற்று. பிற்காலத்தில் அவர் பெற்ற பல வெற்றிகளுக்கு மகானின் பரிபூரண ஆசியே காரணமானது. தமிழகத்தின் பல நகரங்களுக்கும் சென்று நாடகங்கள் நடித்தனர் டி.கே.எஸ். குழுவினர். எட்டயபுரம் மகாராஜா டி.கே.எஸ்.ஸின் நடிப்பைப் பாராட்டியதுடன் தங்கச் சங்கிலி, வைர மோதிரம் அணிவித்து கௌரவித்தார்.

சிறுவராக இருந்த காரணத்தால் நடிக்காமல் இருந்த கடைசிச் சகோதரர் டி.கே. பகவதியும் நாகர்கோவிலில் நடந்த நாடகத்தில் பால பார்ட்டாக அறிமுகம் ஆனார். சகோதரர்கள் நால்வரும் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தனர். 1925 மார்ச் 31 அன்று திருவனந்தபுரத்தில் 'மதுரை ஸ்ரீபால சண்முகானந்த சபா' என்ற சொந்த நாடகக் குழுவைத் துவக்கினர். முதல் நாடகமான 'கோவலன்' நல்ல வரவேற்பைப் பெற்றது. என்.எஸ். கிருஷ்ணன், எம்.ஆர். சாமிநாதன் உள்ளிட்ட பலர் அக்குழுவில் இணைந்தனர். தொடர்ந்து பல நாடகங்களைப் போடத் தொடங்கினார் டி.கே.எஸ்.

அதுவரை சரித்திர, புராண நாடகங்களையே நடத்தி வந்த அவர் சமூக நாடகங்களை நடத்த விரும்பினார். ஜே.ஆர். ரங்கராஜு எழுதிய 'இராஜாம்பாள்', 'இராஜேந்திரா' போன்ற நாவல்கள் நாடகமாக்கப்பட்டன. இவற்றிற்கு வசனமெழுதியவர் நடிகர் எம்.கே. ராதாவின் தந்தையான கந்தசாமி முதலியார். தொடர்ந்து 'பிரதாபச்சந்திரன்', 'சந்திரகாந்தா' போன்ற நாடகங்கள் டி.கே.எஸ்.ஸுக்கு நல்ல நடிகர் என்ற பெயரைப் பெற்றுத்தந்தன. தமிழகம் தாண்டிக் கொழும்புக்குச் சென்றும் நாடகங்களை நடித்தார். அடுத்து வடுவூர் துரைசாமி ஐயங்காரின் 'மேனகா' நாடகமானது. நாடெங்கும் தேசிய விடுதலைப் போராட்டத்தின் எழுச்சி மிகுந்திருந்த நேரம் அது. டி.கே.எஸ். சுதந்திரக் கனலை எழுப்பும் நாடகங்களை நடத்த ஆர்வம் கொண்டார். வெ. சாமிநாத சர்மா எழுதிய 'பாணபுரத்து வீரன்' என்ற நாடகத்தை 'தேசபக்தி' என்ற தலைப்பில் நாடகமாக்கி அளித்தார் மதுரகவி பாஸ்கரதாஸ். அதில்தான் முதன்முதலாக பாரதியார் பாடல்கள் இடம்பெற்றன. 1931 மே 19 அன்று அந்நாடகம் அரங்கேற்றம் கண்டது. அதற்கு நல்ல வரவேற்பு. பிரிட்டிஷாரால் அந்நாடகம் தடை செய்யப்பட்டது.

சளைக்காமல் வேறு பல சமூக நாடகங்களை அரங்கேற்றம் செய்தார் டி.கே.எஸ். அதுவரை ஊமைப் படங்களாக வெளிவந்து கொண்டிருந்த திரைப்படங்கள் பேசும்படம் ஆகத் துவங்கின. மக்கள் கூட்டம் அப்படங்களைப் பார்க்கச் செல்லவே நாடக அரங்கில் கூட்டம் குறைந்தது. அதேசமயம் புகழ்பெற்ற நாடகங்கள் பலவும் திரைப்படமாக வெளியாகி வெற்றி பெறத் துவங்கின. டி.கே.எஸ். சகோதரர்கள் நாடகமாக்கிய வடுவூராரின் 'மேனகா'வும் திரைப்படமானது. தமிழ்த் திரையுலகின் முதல் நவீன சமூகப் படம் என்ற புகழை அப்படம் பெற்றதுடன் மகத்தான வெற்றியும் பெற்றது. இதில் சகோதரர்கள் நால்வரும் நடித்திருந்தனர். அதுதான் அவர்களது முதல் திரைப்படம். தொடர்ந்து நாடகங்களோடு திரைப்படங்களிலும் நடிக்கச் சகோதரர்கள் அக்கறை காட்டினர். வடுவூராரின் 'பாலாமணி' திரைப்படமானது. அதில் சகோதரர்கள் நடித்தனர். நாடகங்களில் நடிப்பதும் தொடர்ந்தது. குறிப்பாக 'குமாஸ்தாவின் பெண்' நாடகம் டி.கே.எஸ்.ஸின் நாடக வாழ்க்கையில் திருப்புமுனை ஆனது. 1937ல் திண்டுக்கல்லில் அரங்கேறிய அந்நாடகத்திற்குத் தமிழகமெங்கும் பெருத்த வரவேற்புக் கிட்டியது. தீரர் சத்தியமூர்த்தி, கல்கி, அண்ணா உள்ளிட்ட பலர் இந்நாடகத்தைப் பாராட்டினர். பின்னர் இது திரைப்படமாகவும் வெளிவந்து வெற்றி கண்டது. பி.எஸ். ராமையாவின் எழுத்தில் வெளியான 'பூலோக ரம்பை' படத்திலும் சண்முகம் நடித்தார்.

1941ல் மீனாட்சியுடன் டி.கே.எஸ்.ஸுக்குத் திருமணம் நிகழ்ந்தது. சிவனின் திருவிளையாடற் புராணத்தை மையமாக வைத்து டி.கே.எஸ் உருவாக்கியிருந்த 'சிவலீலை' நாடகம் மகத்தான வெற்றி பெற்றது. பத்திரிகைகள் பாராட்டின. தமிழறிஞர்களும், சான்றோர்களும் வாழ்த்திப் பேசினர். அக்காலத்தில், 1941ல், மதுரையில் ஒரே அரங்கில் தொடர்ந்து 108 நாட்கள் நடைபெற்ற ஒரே நாடகம் இதுதான். அதுமட்டுமல்ல; ஆண்களே மேடைகளில் பெண் வேடமிட்டு நடிக்கும் பழக்கத்தை மாற்றி, பெண் நடிகைகளை மேடையேற்றிய பெருமையும் டி.கே.எஸ். குழுவினருக்கு உண்டு. இவரது நாடகக் குழுவில் நடித்த எம்.ஆர். சாமிநாதன், கே.ஆர். ராமசாமி, டி.கே. ராமச்சந்திரன், எஸ்.வி. சுப்பையா, எஸ்.வி. சகஸ்ரநாமம், ஏ.பி. நாகராஜன், எஸ்.எஸ். ராஜேந்திரன், டி.வி. நாராயணசாமி, 'பிரண்ட்' ராமசாமி, எம்.எஸ். திரௌபதி, டி.ஏ. ஜெயலட்சுமி போன்றோர் நாடக உலகிலும் திரையுலகிலும் முத்திரை பதித்தனர்.

சண்முகத்தின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது 'அவ்வையார்' நாடகம். 1943-ல் வெளியான அந்நாடகத்தில் அவ்வையார் வேடத்தில் நடித்து அவர் பெரும்புகழ் பெற்றார். 32 வயதே நிரம்பிய டி.கே.எஸ். ஒரு முதியவளாகத் தனது தோற்றத்தையும், பேச்சையும் மாற்றிக் கொண்டு, அவ்வையாகவே வாழ்ந்து காட்டியது பார்த்தோரைப் பிரமிக்க வைத்தது; அவருக்கு 'அவ்வை சண்முகம்' என்ற பெயரையும் பெற்றுத் தந்தது. ம.பொ.சி உள்ளிட்ட தமிழறிஞர்களின் பாராட்டையும், நட்பையும் பெற்றுக் கொடுத்தது. தான் அவ்வையாராக நடித்தது பற்றி டி.கே.எஸ். “என்னைப் பொறுத்தவரையில் ஔவையாராக நடித்த பின் எனக்கு ஆன்மீக நினைவு ஏற்பட்டது” என்கிறார் தனது வாழ்க்கைக் குறிப்பில்.

தொடர்ந்து புகழின் உச்சியில் டி.கே.எஸ். ஏறிக்கொண்டிருக்கும் போது 1943ம் வருடத்தில் மனைவியை இழந்தார். பெரியார், அண்ணா போன்றோரின் உதவியால் அதிலிருந்து மீண்டு வந்தார். மீண்டும் நாடகங்களில் கவனம் செலுத்தினார் அண்ணாவின் 'சந்திரோதயம்' டி.கே.எஸ். குழுவினரால் நாடகமாக்கப்பட்டு வெற்றி பெற்றது. ப. நீலகண்டன் (முள்ளில் ரோஜா), கு.சா. கிருஷ்ணமூர்த்தி (அந்தமான் கைதி), ஸ்ரீதர் (ரத்தபாசம்), நாரண. துரைக்கண்ணன் (உயிரோவியம்) போன்றோருக்கு வாய்ப்பளித்து ஊக்குவித்தார். நாடக எழுத்தாளர்களை ஊக்குவிக்குமுகமாக நாடகப் போட்டி ஒன்றை நடத்தினார். அதில் அரு. ராமநாதன் எழுதிய 'ராஜராஜசோழன்' இரண்டாம் பரிசும், அகிலன் எழுதிய 'புயல்' சிறப்புப் பரிசும் பெற்றன. நாடகக்கலை வளர்ச்சிக்காக மதுரையில் நாடக மாநாட்டை நடத்தினார் டி.கே.எஸ். தொடர்ந்து 'வீர சிவாஜி', 'கவி காளமேகம்', 'பில்ஹணன்' போன்ற நாடகங்கள் அரங்கேறின. 'இமயத்தில் நாம்', 'மனிதன்' போன்றவையும் குறிப்பிடத்தக்க நாடகங்களாகும். 'ரத்த பாசம்', 'மனிதன்', 'கப்பலோட்டிய தமிழன்', 'வஞ்சிக்கோட்டை வாலிபன்' போன்ற படங்களில் டி.கே.எஸ் நடித்து முத்திரை பதித்தார்.

பாரதியார், பாரதிதாசன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஆகியோரது பாடல்களை மேடையில் இடம்பெறச் செய்து நாடகங்களுக்கு இலக்கிய அந்தஸ்து அளித்தவர் டி.கே.எஸ். பாரதி பாடல்கள் தமிழர்களின் தனிச்சொத்து என்று கூறி அவற்றை நாட்டுடைமையாக்க அரும்பாடுபட்டார். அண்ணாவின் 'ஓர் இரவு' படத்திற்கு டி.கே.எஸ். பாடல் எழுதியிருக்கிறார். கையெழுத்துப் பத்திரிகை ஒன்றை நடத்தியதும் உண்டு. தமிழின் மீதும் சைவத்தின் மீதும் மிகுந்த பற்றுக் கொண்டவர். இவற்றின் மீதிருந்த பற்றினால் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களின் தலைமையில் இயங்கிய தமிழரசுக் கழகத்தின் பொருளாளராக இருந்தார். இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், டெல்லி, மும்பை, கல்கத்தா, பெங்களூர், திருவனந்தபுரம் முதலான நகரங்களிலும் நாடகங்கள் நடத்தியிருக்கிறார்.

டி.கே.எஸ். மீண்டும் 1948ல் சீதாலட்சுமி அம்மையாரை மணம் செய்து கொண்டார். கலைவாணன், புகழேந்தி, அருள்மொழி, பூங்குன்றன், மனோன்மணி ஆகிய மகவுகள் வாய்த்தன. பல்வேறு காரணங்களால் 1950ல் தனது நாடகக் குழுவை கலைத்த டி.கே. எஸ்., அவ்வப்போது சில நாடகங்களை நடத்தி வந்தார். சிறார்களுக்காக நாடகம் நடத்த விரும்பிய அவர், கவிஞர் திருச்சி பாரதன் எழுதிய 'அப்பாவின் ஆசை', 'பலாப்பழம்' ஆகிய நாடகங்களை அரங்கேற்றினார். அதில் அன்று கதாநாயகனாக நடித்தவர் அப்போது 10 வயதுச் சிறுவனாக இருந்த கமல்ஹாசன். (பின்னாளில் டி.கே.எஸ்.ஸுக்கு நன்றி செலுத்தும் விதமாக 'அவ்வை சண்முகி' என்ற பெயரில் திரைப்படம் எடுத்துப் பெண் வேடத்திலும் தன்னால் சிறப்பாக நடிக்க முடியும் என்று நிரூபித்தார்).

தமிழக முதலமைச்சராகப் பேரறிஞர் அண்ணா பதவி வகித்தபோது 1968ல் டி.கே.எஸ்.ஸைத் தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராக (MLC) நியமித்தார். 'முத்தமிழ்க் கலா வித்வ ரத்தினம்', 'நாடக வேந்தர்' போன்ற பட்டங்களும் டி.கே.எஸ்ஸுக்குச் சூட்டப்பட்டன. 1971ல் இந்திய அரசு 'பத்மஸ்ரீ' விருது வழங்கியது. டி.கே.எஸ். எழுதிய 'எனது நாடக வாழ்க்கை' என்ற தன்வரலாற்று நூல் முக்கியமானது. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இவர் நிகழ்த்திய ஆராய்ச்சிச் சொற்பொழிவு 'நாடகக்கலை' என்ற பெயரில் தொகுக்கப்பட்டு, சென்னை பல்கலைக்கழகத்தில் பாடநூலாக வைக்கப்பட்டது. வானொலியில் இவர் ஆற்றிய சொற்பொழிவுகளும் தொகுக்கப்பட்டு நூலாகின. இவரது 'நாடகச் சிந்தனைகள்' என்ற நூலும் முக்கியமானது.

தமிழ் நாடகக் கலை வளர்ச்சிக்குப் பாடுபட்ட டி.கே. சண்முகம், 1973 பிப்ரவரி 15ம் நாள் காலமானார். அவரது நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசு அவர் வாழ்ந்த தெருவுக்கு 'அவ்வை சண்முகம் சாலை' என்று பெயர் சூட்டியது. அவரது நூற்றாண்டு விழா இவ்வாண்டு கொண்டாடப்பட்டு வருகின்றது. தமிழ் நாடக உலகின் துருவ நட்சத்திரமாக டி.கே. சண்முகம் அவர்களின் பெயர் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

பா.சு. ரமணன்

© TamilOnline.com