பாரதி பாடல்களுக்கு ஒரு செம்பதிப்பு வரவேண்டியதன் அவசியத்தைப் பேரா. தி. வேணுகோபாலன் (நாகநந்தி) அவர்கள் வலியுறுத்திக் கொண்டிருந்ததையும், இப்போதுள்ள பதிப்புகளில் காணப்படும் பிழைகளும், பாரதி கொடுத்த தலைப்பைப் பதிப்பாளர் திருத்தியிருக்கும் கோலங்களும், பாடபேதங்களும் கலந்து பாரதி வாசகனைத் தெளிவற்ற சூழலில் கொண்டுபோய் நிறுத்துவது பற்றி அவர் வருந்தியிருப்பதையும் முன்னரே சொல்லியிருக்கிறேன். குறிப்பாக, நவம்பர் 2010 இதழில் 'மேருவைப் பறிக்கவேண்டின்' என்ற தலைப்பில் இந்தப் பத்தியில் எழுதியிருப்பதைக் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.
இதை எதற்காக இப்போது சொல்கிறேன் என்றால், நான் மேற்படிக் கட்டுரையில் குறித்திருக்கும் சீனி விசுவநாதன் அவர்கள் ஏப்ரல் 2012ல் ஒரு புதிய பாரதி கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். 'காலவரிசையில் பாரதி பாடல்கள்' என்ற பெயரில் வெளியாகியிருக்கும் இந்தப் பதிப்பு மிகமிகத் திருத்தமான பதிப்பு; ஆய்வாளர்களுக்கு மிகமுக்கியமான கருவியாக விளங்கக்கூடிய பதிப்பு. பாரதி கவிதைகள் எப்படியெல்லாம் வெளியிடப்படவேண்டும் என்று பேராசிரியர் விரும்பினாரோ அவற்றில் பெரும்பகுதியைப் பூர்த்திசெய்யும் வண்ணமாக இந்தப் பதிப்பு வெளிவந்திருக்கிறது. சீனி விசுவநாதன் அவர்கள் நாகநந்தி அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்; பேராசிரியரால் பெரிதும் மதிக்கப்பட்டவர்; போற்றப்பட்டவர். பாரதி எழுத்துகள் எப்படிப் பதிப்பிக்கப்பட வேண்டும் என்பது குறித்து இருவரும் பலமுறை விவாதித்தது உண்டு. ஆனால், சீனி விசுவநாதனுடைய 'காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்' முதல் தொகுதி வெளியான சமயத்தில் (1998) பேராசிரியர் காலமாகி இரண்டாண்டுகள் கழிந்துவிட்டிருந்தன. பிறகு பன்னிரண்டு தொகுதிகளை வெளியிட்டார் சீனி விசுவநாதன். காலவரிசைப்படுத்தப்பட முடியாத, தக்க ஆதாரம் கிட்டாத சந்திரிகையின் கதை போன்றஉரைநடைப் பகுதிகள் இன்னமும் இந்தத் தொகுதிகளில் இடம்பெறவில்லை. இப்படி, எழுதப்பட்ட காலத்தை நிர்ணயிக்க முடியாத உரைநடைப் பகுதிகளை பதின்மூன்றாவது தொகுதியாக வெளியிடத் திட்டம் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன்.
பன்னிரண்டு தொகுதிகளில் காணப்படும் படைப்புகளில், பாரதியின் உரைநடையும் கவிதையும் கலந்தே அடங்குகின்றன. ஆனால், இப்போது வெளிவந்துள்ள 'காலவரிசையில் பாரதி பாடல்கள்' உண்மையில் மிக உன்னதமான தொகுப்பு. பாரதி இயலுக்குத் தனியொரு மனிதனின் பெருங்கொடை. தஞ்சைப் பல்கலைக் கழகம் வெளியிட்ட 'பாரதி பாடல்கள்--ஆய்வுப் பதிப்பு' நூலில், பாரதி கவிதைகளை, காலவரிசைப்படி அமைத்துக் கொடுக்கும் மிகச்சிரமமான செயலைச் செய்தவரும் இவரே. மிக விரிவான குறிப்புகளுடன் வெளிவந்துள்ள இந்தப் பதிப்பிலும் பற்பல பிழைகளும், தவறான குறிப்புகளும், தவறான அனுமானங்களுக்கு இடங்கொடுத்துவிடக்கூடிய அடிக்குறிப்புகளும் இடம் பெற்றுவிட்டன. "இவற்றையெல்லாம், நூற்பதிப்புக்கும் வெளியீட்டுக்கும் முன்னரேயே நான் பலமுறை தஞ்சைப் பல்கலைக்கு எழுதியும் அவர்களிடமிருந்து ஒரு பதிலும் எனக்கு வரவில்லை" என்று சீனி. விசுவநாதன் தனது 'பாரதி ஆய்வுகள் சிக்கல்களும் தீர்வுகளும்' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். தற்போது வெளிவந்துள்ள நூலின் 'என்னுரை' பகுதியிலும் விளக்கமாகவும் நாகரிகமாகவும் குறிப்பிட்டுள்ளார். "திருந்திய மூன்றாம் பதிப்பு வெளிவந்த நிலையிலும், முன்னைய இரு பதிப்புகளிலும் இடம் பெற்றிருந்த எண்ணற்ற அச்சுப் பிழைகள், கருத்துப் பிழைகள், காலப் பிழைகள், வரலாற்றுப் பிழைகள், முன்னுக்குப் பின் முரண்பட்ட செய்திக் குறி்ப்புகள் களையப்படவில்லை. ஆம்; திருத்தம் பெறாமலே அவை நீங்கா இடம் பெற்றுவிட்டன" என்று குறிப்பிடுகிறார். ஆக, தஞ்சைப் பல்கலை வெளியிட்ட ஆய்வுப் பதிப்பின் நம்பகத்தன்மையும் முழுமையானதல்ல.
இந்தக் குறைகளையெல்லாம் களைந்து தற்போது சீனி விசுவநாதன் வெளியிட்டுள்ள பதிப்பு பாரதி அன்பர்களுக்கும், குறிப்பாக ஆய்வாளர்களுக்கும் பெரும்பயன் தரத்தக்கதாக அமைந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்று. இந்தப் பதிப்பில், திட்டவட்டமாக அறியப்பட்ட கால வரிசையிலான பாடல்கள் என்று ஒரு பகுதியாகவும்; திட்டவட்டமாகக் காலவரிசையைக் கண்டறிய இயலாத பாடல்கள் என்று இன்னொரு பகுதியாகவும் இரண்டு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு பாடலுக்கும் கீழே, பாடலிலுள்ள அனைத்துப் பாடபேதங்களையும் நிரல்படத் தொகுத்து, எந்தெந்தப் பதிப்பில் இப்படிப்பட்ட பாடபேதங்கள் ஏற்பட்டுள்ளன என்ற விவரங்களையும் சேர்த்திருக்கிறார். இது மிக முக்கியமான சேர்க்கை. பாடல் புனையப்பட்ட சூழல் போன்ற பல குறிப்புகளைப் பதிப்பாசிரியர் கொடுத்திருக்கிறார். இதைக் காட்டிலும் முக்கியமான குறிப்பாக 'ஆய்வாளர்கள் கவனத்துக்கு' என்ற தலைப்பில் பல பாடல்களுக்கு, ஆய்வியல் நோக்கில் பாரதி கவிதைகளை அணுகுபவர்களுக்கு உதவியாக முக்கியமான செய்திகளைத் தொகுத்துத் தந்திருக்கிறார்.
'மேருவைப் பறிக்கவேண்டின்' என்ற 2010 நவம்பர் மாதத் தென்றல் கட்டுரையில், 'கரும்புத் தோட்டத்திலே' பாடலைப் பற்றிச் சொல்கையில் "எந்தக் குறிப்பிட்ட நிகழ்வு அல்லது செய்தி பாரதி இந்தப் பாடலை எழுதக் காரணமாக இருந்தது என்பன போன்ற விவரங்கள் இடம்பெற வேண்டும்" என்று குறித்திருந்தேன். இந்தப் பாடலின் அடிக்குறிப்பில், "இந்தப் பாடலுக்கு ஆதாரம், பிஜித் தீவிலே வேலைக்குச் சென்ற இந்தியப் பெண்மணிகள் பட்ட துன்பங்களை நேரில் கண்டறிந்த--பிறப்பால் ஆங்கிலேயரான சி.எப். ஆண்ட்ரூஸ் என்பார் எழுதிய ஆங்கிலப் பாடலாகும்" என்று பதிப்பாசிரியர் குறிப்பு விளக்கமளிக்கிறது. என்ன வேடிக்கை என்றால், இந்த உண்மையை இந்தப் பாடல் சுதேசமித்திரனில் வெளியானபோது பாரதியே 'இங்கிலீஷில் ஆந்துருஸ் எழுதியதை சி. சுப்பிரமணிய பாரதி தமிழில் விளக்கியது' என்ற குறிப்புடன்தான் வெளியிட்டிருக்கிறான். ஆனால், பெருமைக்குரிய நமது பதிப்பாளர்கள் அனைவரும் ஒன்றுபோல இந்த முக்கியமான குறிப்பை விட்டுவிட்டே பதிப்பித்திருக்கிறார்கள்! இதை ஒரு சில ஆய்வாளர்கள் ஆங்காங்கே குறித்திருந்தாலும், இந்தக் குறிப்பு பாடலுக்கு அடியில் சேர்ந்து பதிப்பிக்கப்பட்டால் அல்லவோ பாடல் இயற்றப்பட்டதன் பின்புலத்தைச் சரியாக விளங்கிக் கொள்ள இயலும்!
இதுபோலவே, 'மாஜினியின் சபதம்' (இதையும் மேற்படிக் கட்டுரையில் சொல்லியிருக்கிறேன்) பாடலுக்கு பாரதி கொடுத்த தலைப்பு, 'மாஜினி என்ற இத்தாலி தேசத்துத் தேசாபிமானி தம்மால் ஸ்தாபிக்கப்பட்ட 'யௌவன இத்தாலி' என்ற சங்கத்திலே செய்துகொண்ட பிரதிக்கினை' என்பதாகும். தலைப்பிலேயே மாஜினி யார், எந்த தேசத்தவர், எந்தச் சந்தர்ப்பத்தில் இப்படி ஒரு சபதத்தை மேற்கொண்டார் என்ற கேள்விகளுக்கெல்லாம் விடைகள் இருக்கின்றன. ஆனால், பாரதி ஆச்ரமத்தார் தலைப்பைச் சுருக்கி 'மாஜினி' ஆக்கினார்கள்; பாரதி பிரசுலாயத்தார் 'மாஜினியின் பிரதிக்கினை' என்று மாற்றினார்கள்; அரசு வெளியிட்ட பதிப்பில், 'மாஜினியின் சபதம்' என்று தலைப்பு மாற்றம் பெற்றது. இந்த மாறுதல்களால் எவ்வளவு முக்கியமான, கவியே கொடுத்திருக்கும் குறிப்புகள், அடிபட்டுப் போகின்றன என்று பாருங்கள். வ.உ.சி.யின் வேண்டுகோளின் பேரில் இந்த பிரதிக்கினை (அல்லது சபதம்) மொழிபெயர்க்கப்பட்டது என்பது வ.உ.சி. எழுதிய 'விஓசி கண்ட பாரதி' நூலில் சொல்லப்பட்டிருந்தாலும், அந்தக் குறிப்பு, இந்தப் பாடலின் கீழேயே பதிப்பிக்கப்பட்டால் அல்லவோ முழு விவரங்கள் பளிச்சென்று புலப்படும்! வேறு யாருக்கில்லாவிட்டாலும் ஆர்வலர்களுக்கும், குறிப்பாக ஆய்வாளர்களுக்கும் அதிமுக்கியமாகத் தேவைப்படும் குறிப்புகளல்லவா இவையெல்லாம்! கவிஞன் கொடுத்த தலைப்பைச் சுருக்கியதால், எத்தனைக் குறிப்புகள் சிதைவுபட்டுப் போயிருக்கின்றன! இவற்றையெல்லாம் ஒவ்வொரு பாடலிலும் களைந்திருக்கிறார் சீனி விசுவநாதன் அவர்கள்.
இது தவிர, உள்நாட்டுப் பத்திரிகை அறிக்கைகளில் அவ்வப்போது பிரிட்டிஷ் அரசாங்கம் பாரதி பாடல்களைப் பற்றிக் கொடுத்துள்ள விவரங்களையும் சேதாரமின்றித் தொகுத்து உரிய இடங்களில் சேர்த்திருக்கிறார். 'என்று தணியுமிந்த சுதந்திர தாகம்' என்ற பாடலுக்கு பாரதி கொடுத்த தலைப்பு, 'ஸ்ரீ கிருஷ்ண ஸ்தோத்திரம்' என்பதாகும். தேசிய இயக்கப் பாடலுக்கு, தெய்வத்தின் பெயரால் ஸ்தோத்திரம் என்று தலைப்புக் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? அன்றைய சூழ்நிலை அப்படி. ஓயாமல் கண்காணித்துக் கொண்டிருந்த பிரிட்டிஷ் ஒற்றர்களின் கண்களுக்குத் தப்பி இந்தக் கவிதை தமிழகத்தைச் சென்றடைய வேண்டும் என்ற நெருக்கடியால் அல்லவா பாரதி இப்படி ஒரு விசித்திரமான தலைப்பை இந்தப் பாடலுக்குக் கொடுத்திருக்கிறான்? 'ஸ்ரீ கிருஷ்ண ஸ்தோத்திரம்' என்ற தலைப்புடனேயே இந்தப் பாடல் பதிப்பிக்கப்பட்டால் அல்லவா வாசகன் மனத்தில் இந்தக் கேள்வி பிறக்கும்; கேள்விக்கு விடைசொல்ல வழி திறக்கும். 'சுதந்திர தாகம்' என்று தலைப்பை மாற்றிவிட்டால், பாரதி எப்படிப்பட்ட நெருக்கடிகளுக்கிடையில் இப்படிப்பட்ட தீவிரமான எழுத்துகளை எழுதி, அவற்றை வெளிக்கொணர என்னென்ன உத்திகளைக் கையாண்டிருக்கிறான் என்பதெல்லாம் எப்படி வெளிப்படும்? (சுதந்திர தாகம் என்று தலைப்பை மாற்றியிருப்பது அரசு வெளியிட்ட பதிப்பில் நிகழ்ந்திருக்கிறது.) இந்தக் குறிப்பையெல்லாம் Native Newspaper Reports வரையில் தோண்டித் துருவியெடுத்து வெளிப்படுத்தியிருக்கிறார் சீனி விசுவநாதன்.
பாரதியின் எழுத்துகளைச் செம்மையாகப் பதிப்பிப்பதற்கென்றே ஒரு முழு வாழ்நாளை (ஐம்பதாண்டுகள்) செலவழித்திருக்கின்ற இந்த மாமனிதன், தனக்கு விருது கிடைக்கும்; ஆய்வாளர் என்ற மதிப்பு கிடைக்கும் என்றெல்லாம் எண்ணியா செய்திருக்கிறான்? மாறாக, இவருக்கு உரிய கௌரவமும், இடமும் மறுக்கப்பட்டும், இவருடைய பெயர் மறைக்கப்பட்டும் வருவதுதானே நடந்துகொண்டிருக்கிறது. இவருடைய பேருழைப்பைப் பயன்படுத்திக் கொண்ட தஞ்சைப் பல்கலைக் கழகமே இந்த அங்கீகாரத்தைத் தராமல் புறக்கணித்திருக்கிறது. இந்தப் புறக்கணிப்பு பொறுக்காமல் அல்லவா 'என்னுரை' பகுதியில் பின்னணி விவரங்களை மேம்போக்காகத் தெரிவித்திருக்கிறார்!
பாரதி இயலில், தான் செய்த தவறையே மறைக்காமல், "இப்படிப்பட்ட தவறை நான் செய்திருக்கிறேன். எனக்கு முன் ஆய்ந்தவர்களை அப்படியே நம்பிவிட்டது என் தவறுதான்" என்று வெளிப்படையாகச் சொல்லும் துணிச்சலும் நேர்மையும் கொண்ட ஆய்வாளர்கள் எத்தனை பேர்? இப்படிப்பட்ட பெருந்தகைக்கு உரிய இடமும் மதிப்பும் கௌரவமும் தரவேண்டியது பாரதி ஆர்வலர்களின் கடமை; அரசின் கடமை. எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமல், கறந்த பால் கறந்தபடி, உள்ளது உள்ளபடி பாரதி எழுத்துகளைப் பதிப்பிப்பதிலேயே ஒரு முழு வாழ்நாளைச் செலவழித்திருக்கும் இந்த மனிதனுக்கு என்ன பிரதியுபகாரம் செய்ய முடியும்? ஏதோ ஒரு நல்லி குப்புசாமி செட்டியார் பதிப்புச் செலவுகளை ஏற்றுக் கொண்டார் என்ற ஒரு காரணத்தால் மட்டுமே நமக்கு இந்தப் பதிப்புகளெல்லாம் கிடைத்திருக்கின்றன. நியூஜெர்சி நண்பர்களான டாக்டர். என். முருகானந்தம், பி.கே. சிவகுமார் (வலையுலகில் நன்கறியப்பட்ட பதிவர்), கபாலீஸ்வரன், லண்டன் விமல் போன்றவர்களும் உறுதுணையாக நின்றிருக்கிறார்கள். மற்றபடி பதிப்பாளர்கள் உதவியோ, அரசின் ஆதரவோ, நிதியுதவியோ இவருக்குக் கிட்டியதில்லை. தேசியகவி என்று கொண்டாடிக் கொண்டு பெருமைப்படுபவர்கள் அவரவர்களுக்கு உரிய கௌரவத்தையாவது அளிப்பது கடமையல்லவா?
இப்படி ஒரு அருமையான பதிப்பைக் கொண்டு வந்திருப்பதற்காக ஆசான் நாகநந்தி அவர்கள் (சொர்க்க நரகங்களில் நம்பிக்கையற்றவர் என்ற போதிலும்) பாரதிலோகத்திலிருந்தபடி வாழ்த்துவார் என்பதில் எனக்கு ஐயமில்லை. பாரதி அன்பர்கள் அனைவருடைய புத்தக அலமாரியிலும் இடம்பெற வேண்டிய நூல் இது. இதனை (மட்டுமாவது) வாங்குவதே சீனி. விசுவநாதன் அவர்களுக்கு பாரதி அன்பர்கள் செலுத்தக் கூடிய நன்றிக்கடன். இனியாவது அரசு இவருக்கு உரிய சிறப்புகளைச் செய்யும் என்று நம்புவோம். என் ஆசிரியருடைய நெருங்கிய நண்பர் இப்படிப்பட்ட 'மேரு மலையைப்' புரட்டித் தள்ளியிருக்கிறார் என்பது எனக்கும் பெருமைக்குரிய ஒன்றுதான்.
ஆசிரியர் நினைவுகளுக்குத் திரும்புவோம். இந்தப் பகுதியும் ஆசிரியர் நினைவுகளின் ஒரு பகுதிதான். இது அவருடைய நெருங்கிய நண்பருக்கு அவருடைய பாரதி பணிகளுக்காகக் காணிக்கையாகச் செலுத்தப்படுகிறது. சீனிக்கு அணிவிக்கப்பட்ட மாலை!
ஹரி கிருஷ்ணன் |