அன்புள்ள சிநேகிதியே,
எனக்கு ஒரே பிள்ளை. பாசத்தைக் கொட்டி வளர்த்தேன். அவனை அமெரிக்காவுக்கு அனுப்பிவிட்டுத் திரும்பிய இரவு எனக்கு நெஞ்சே வெடித்துவிடும் போல இருந்தது. படித்து முடித்தவுடன் திரும்பி வருவான் என்று நினைத்துக் கொண்டிருந்தால் அவன் இங்கேயே வேலை பார்த்துக்கொண்டு விட்டான். ஒரு கல்யாணம் பண்ணி வைக்கலாம் என எண்ணி வரன் பார்க்க ஆரம்பித்தால் அவன் பிடி கொடுக்கவே இல்லை. கடைசியில் பார்த்தால் இவன் கிளாஸ்மேட்டை லவ் பண்ணி இருக்கிறான். அவள் தமிழ் பேசுபவள் இல்லை. பெங்காலி. அமெரிக்காவிலேயே கல்யாணத்தை வைத்துக்கொண்டு விட்டான்.
நான் எவ்வளவு வேதனைப்பட்டிருக்கிறேன் என்று பிள்ளைக்குத்தான் புரியவில்லை. அவன் அப்பாவுக்காவது தெரிய வேண்டாமா? "நீ பட்டிக்காட்டுத்தனமாக நடந்து கொள்கிறாய். அவன் எதை ஆசைப்படுகிறானோ அதற்கு ஒத்துப்போவது தான் விவேகம்" என்று என்னை அடக்கி வைத்து விட்டார். இரண்டு பேரும் இங்கே அமெரிக்காவுக்கு வந்து கல்யாணத்தை நடத்தி வைத்துவிட்டு இந்தியா திரும்பினோம். நம் வகை கல்யாணத்திற்கு மாங்கல்யம், பட்டுப்புடவை, வேஷ்டி என்று எல்லாம் கிரமப்படி வாங்கி வாத்தியாரைக் கூப்பிட்டு சாஸ்திரப்படி கல்யாணம் முடித்தோம். எனக்கும் அவளுக்கும் பேசுவதில் பெரிய கஷ்டம். அவள் சிறுவயதிலேயே இங்கு வந்துவிட்டாள். அமெரிக்க இங்கிலீஷ். என்னுடையது தமிழ் இங்கிலீஷ். ஆகவே எனக்குப் பேசுவதற்கே ரொம்பக் கூச்சமாக இருந்தது.
அதைவிட இன்னொரு சங்கடம் தாலி கட்டிய அரைமணி நேரத்தில் எல்லா நகைகளையும் புடவையையும் கழற்றிப் போட்டுவிட்டு ஒரு ஜீன்ஸில் வந்து நின்றாள் சாப்பிடுவதற்கு. எனக்குக் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. ஒன்பது கஜப் புடவையில் என் கண்ணே பட்டுவிடும் போல அவ்வளவு அழகாக இருந்தாள். தலைசாமான் எல்லாம் வைத்து நீளமான ஜடை. எதுவும் காணோம். இதுவே பரவாயில்லை. 'ஹனிமூன்' என்று உடனே கிளம்பி விட்டார்கள். நானும் இவரும் அந்தச் சமயம் கனடாவில் ஒரு உறவுக்காரர் வீட்டுக்குப் போய் அங்கே ஊரைச் சுற்றிப் பார்த்தோம். இவர்கள் திரும்பி வர நாங்களும் வந்தோம். காலில் மெட்டி, கழுத்தில் தாலி, கையில் வளை எதுவுமே இல்லை. அவளிடம் பொங்கிவந்த துக்கத்தை அடக்கிக் கொண்டேன். கல்யாணம் முடிந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை. என் பிள்ளையிடம் கேட்டால் "அம்மா, அவளுக்கு இந்தச் சடங்குகளில் எதிலுமே நம்பிக்கையில்லை. உங்களுக்காக நான் வற்புறுத்தி நம் வழக்கக் கல்யாணத்திற்கு ஒத்துக்கொண்டாள். ஏதேனும் விசேஷ நேரத்தில் போட்டுக் கொள்ளச் சொல்லுகிறேன். அவள் வேலைக்குப் போகவேண்டும் என்று கழற்றி விட்டாள். உங்களை அவமானப்படுத்த வேண்டும் என்று எந்த எண்ணமும் இல்லை. உங்களை அவளுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. கொஞ்சம் எனக்காகப் பொறுத்துக் கொள்ளுங்கள்" என்று கெஞ்சினான். அவன் என்ன சொன்னாலும் எனக்கு இங்கே இருக்க இருப்புக் கொள்ளவில்லை. என் கணவரை வற்புறுத்தித் திரும்பி இந்தியாவிற்கு ஒரு மாதம் முன்னாலேயே கிளம்பிப் போய்விட்டேன். இது மூன்றரை வருடம் முன்னால். அப்புறம் வரத் தோன்றவில்லை.
ஆறு மாதத்திற்கு முன்னால் அவன் ஒரு நல்ல நியூஸ் கொடுத்தான். அவள் கர்ப்பமாக இருக்கிறாள் என்று. ஆண் குழந்தை. என்னதான் இருந்தாலும் எங்கள் வாரிசு ஆயிற்றே. ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. உடனே இங்கே வர ஆசைப்பட்டேன். "வளைகாப்பு, சீமந்தம்" என்று மனசு பரபரத்தது. "உடம்பு மிகவும் வீக் ஆக இருப்பதால் அவள் கட்டாய ஓய்வில் இருக்கவேண்டும் என்று டாக்டர் அட்வைஸ். நீங்கள் குழந்தை பிறந்த பிறகு வந்தால் போதும்" என்று பையன் சொல்லிவிட்டான். வேறு வழியில்லை என்று பொறுத்துக்கொண்டு, குழந்தை பிறந்த பிறகுதான் வந்தோம். பத்திய சாமான், குழந்தைக்கு வேண்டிய சாமான்கள், கொலுசு, காப்பு, தண்டை என்று எல்லாம் வாங்கிக்கொண்டு வந்தோம். எங்கள் வீட்டுக் குட்டி கிருஷ்ணன் ஆயிற்றே. அவன்தான் எங்கள் உலகம். எவ்வளவு மாதம் தங்கச் சொன்னாலும் பரவாயில்லை இருந்து குழந்தையைப் பார்த்துக்கொண்டு கொஞ்சி மகிழ வேண்டும் என்று ஆசை ஆசையாக இருந்தேன்.
ஆனால் ஏமாற்றம்தான். அவளுக்கு சிசேரியன் ஆனதால் எந்த பெயர் சூட்டு வைபவமும் நடக்கவில்லை. என் மாமனாரின் பெயரைக்கூட வைக்கவில்லை. நான் கொண்டு வந்த அத்தனை சாமான்களையும் பார்த்துவிட்டு இப்போது எதுவும் போடக் கூடாது; கொஞ்சம் மாதம் ஆகட்டும் என்று வாங்கி வைத்துவிட்டாள். அந்தக் குழந்தையை ஆசையாகக் கட்டிக்கொள்ள வேண்டும் என்று ஆசை. ஹூம்..... தொடக் கூடாது; தரையில் விடக் கூடாது; காலில் போட்டுக் குளிப்பாட்டக் கூடாது; திருஷ்டிப் பொட்டு இடக்கூடாது. கையைக் கட்டிக்கொண்டு விருந்தினர்போல பார்த்துக்கொண்டு இருக்கிறோம். "Infection வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் அம்மா. தப்பாக எடுத்துக் கொள்ளாதே" என்கிறான் என் பிள்ளை. "என் அம்மா வீட்டில் அந்த கிராமத்தில் வருவோரும், போவோரும் தொட்டுக் கொஞ்சி, தரையில் உருளவிட்டு, வாயில் சர்க்கரை போட்டு, தேன் தடவி, தவழ்ந்து மண்ணையும், கல்லையும் வாயில் போட்டுக்கொண்டு வளர்ந்துதான் இப்போது ஆஜானுபாகுவாய் ஆறடியில் நிற்கிறாய் என் முன்னே" என்று சொல்ல ஆசை. இவர் நான் எதுவும் பேசக்கூடாது என்று கட்டளையிட்டிருந்தார். மனசுதான் அப்பப்போ பொங்குகிறது. Baby Sitter வைக்கப் போகிறார்கள் போலிருக்கிறது. குழந்தையை விட்டுப்போக மனசில்லை என்றாலும், நாங்கள் சீக்கிரம் கிளம்பிவிடுவோம். என்னதான் குடும்பமோ, குழந்தை வளர்ப்போ? உறவுகளுக்கும் முக்கியம் கொடுத்தால்தானே பாசம், பந்தம் எல்லாம் வளரும்? யார் வீட்டுக்கோ வந்துவிட்டு உபசாரமாகத் தங்கிவிட்டுப் போவது போல இருக்கிறது. இதுபோன்ற பிரச்சனைகளை உங்களால் எப்படித்தான் தீர்க்க முடியும்?
இப்படிக்கு ..............
அன்புள்ள சிநேகிதியே
இந்தக் கலாசாரத்தில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் நேர்ந்த எல்லா முதியவர்களுக்கும், பாட்டிகளுக்கும், தாத்தாக்களுக்கும் அம்மம்மாவினருக்கும் உங்கள் ஆதங்கம் சொந்தம்.
இத்தோடு இளைய தலைமுறை, முதிய தலைமுறை மோதல்களும் சேர்ந்து கொள்ளும்போது நம் கண்ணோட்டத்தில் எல்லாமே பிரச்சனையாகவும், உறவு விரிசல்களாகவும்தான் புலப்படுகின்றன. ஒவ்வொரு உறவிலும் எதிர்பார்ப்புகள் இருக்கத்தான் செய்யும். ஆனால், அதை எதிர்க்கும் பார்வைகளுக்கும் நாம் தயாராகி விட்டால் மனது உடைந்துவிடாது. பிறருடைய செயல்களை அவர்கள் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்க உதவும்.
2-3 மாதங்களுக்கு முன்பு சென்னை சென்றிருந்தபோது என் தோழியின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவள் மகளும் இங்கிருந்து அவள் அம்மா வீட்டுக்கு வந்திருக்கிறாள். அவளுக்கு 6 வயதில் ஒரு பையன். 8 வயதில் ஒரு பெண். பேசிக் கொண்டிருக்கும் போது அந்த மகள் என்னைத் தனியே பின்னால் தோட்டத்திற்கு அழைத்துக் கொண்டு போய் "ஆண்ட்டி, உங்களிடம் ஒரு ஃபேவர் வேண்டும்" என்றாள். என்னவென்றால், அவள் அம்மா எப்போதும் குழந்தைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டே இருக்கிறாளாம். இவளிடம் "நீ எச்சில், தீட்டு சொல்லிக் கொடுப்பதில்லை; பெண் குழந்தையை அடக்கி வளர்க்க வேண்டும். ரெண்டும் குதியாட்டம் போடுகிறார்கள். பெரிசா அந்த ஊர் வித்தையெல்லாம் சொல்லிக் கொடுத்தால் போறாது. தினமும் விளக்கு ஏற்றுகிறாயா? வெள்ளிக்கிழமையென்றால் பருப்பு இல்லாமல் சமைக்காதே" என்று தினம் தினம் அறிவுரை. பேரன், பேத்தியிடம் பாசமாக இருக்கிறேன் என்று இருக்கிற பணத்தைப் போட்டு அவளுக்கு ஜிமிக்கியும், இவளுக்கு செயினும் வாங்கிக் கொடுக்கிறாள். வேண்டாம். உங்கள் ரிடையர்மெண்ட் சேமிப்பைச் செலவு செய்யாதீர்கள் என்றால் கேட்கவில்லை. நம்ம பழக்க வழக்கம் விட்டுப் போய்விடக் கூடாது என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்தால் போரடிக்கிறது. இந்தக் குழந்தைகளுக்கும் இந்த கண்ட்ரோல் பிடிக்க மாட்டேன் என்கிறது. பாட்டி ஆசையாகச் செய்வது எதுவும் அவர்களுக்குப் புரிபடுவதில்லை. மங்கு, மங்கென்று முறுக்கும், தேன்குழலும், லட்டுவும் செய்கிறாள். அது இவர்களுக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. பாவமாக இருக்கிறது. ஆனால் சொன்னால் கேட்பதில்லை என்று சொன்னாள்.
அவளுக்கு நான் பதில் சொல்ல ஆரம்பித்தேன். உடனே, "இதையும் கேட்டு விடுங்கள். நான் வந்து மூன்று வருடம் ஆகிறது. இவர்கள் இரண்டு பேருக்கும் வேண்டுதல் தலைமுடி கொடுக்க வேண்டும் என்று. இந்த தடவை கண்டிப்பாக அதை முடித்து விட்டுத்தான் போக வேண்டுமென்று விடாப்பிடியாக இருக்கிறாள். சாஸ்திரத்திற்குக் கொஞ்சம் தலைமுடி கொடுத்தால் போறாதா என்றால், முடியாது என்று தீர்மானமாக இருக்கிறாள். எனக்கு பயமாக இருக்கிறது. போன தடவை எங்கோ போய் வந்து விட்டு குழந்தைகளுக்கு உடம்புக்கு வந்துவிட்டது. இன்னும் ஒரு வாரத்தில் நான் கிளம்ப வேண்டும். எனக்கு ரெண்டு பிரச்சனைகள். The children will freak out. இரண்டாவது, இந்தக் கத்தி எவ்வளவு சுத்தமானது என்று தெரியவில்லை. ஏதாவது வந்துவிட்டால் என்ன செய்வது? I am not for it. My husaband is not for it. அம்மாவை எப்படி கன்வின்ஸ் பண்ணுவது என்று தெரியவில்லை. நீங்கள் கொஞ்சம் சொல்லிப் பாருங்களேன்!" என்று வேண்டிக்கொண்டாள்.
Infection ஆக இருந்தாலும் சரி; Initiation ஆக இருந்தாலும் சரி. தீவிர நம்பிக்கைதான் இங்கே. ஒரு வாய்ப்பில் என் தோழியின் தீவிர நம்பிக்கையை மாற்ற முயற்சி செய்வது முடியாத ஒன்று என்பது என்னுடைய கருத்து. இதெல்லாம் வேர் மிக மிக ஆழமாகப் பாய்ந்திருக்கும் நம்பிக்கை மரங்கள். எனக்கு, எந்த அதிகாரமும் உரிமையும் கிடையாது. அதே சமயம் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு அதன் பெற்றோருக்குத்தான் முன்னுரிமை. பொறுப்பும் அவர்களைத்தான் சேரும். அவர்களுடைய முடிவுதான் முக்கியம். இந்த முடி விவகாரத்தில் கொஞ்சம் அம்மா பேசிக் கொண்டேதான் இருப்பாள்" என்று என்னுடைய கருத்தைத் தெரிவித்தேன். கிளம்பி வந்துவிட்டேன்.
ஒரு 10 நாட்களுக்குப் பிறகு இந்தத் தோழிக்கு போன் செய்தபோது, தன் பெண் குழந்தைகளுடன் அமெரிக்கா திரும்பி விட்டதாகவும், அதற்குள் அவர்களுடைய குலதெய்வத்தின் ஊருக்குச் சென்று முடி கொடுக்கும் வேண்டுதலை நிறைவேற்றி விட்டுச் சென்றாள் என்பதையும் சொன்னாள். அந்தப் பெண் குழந்தைக்கு மட்டும் பாய்-கட்; அங்கே கொஞ்சம் சமரசம் இருந்திருக்கிறது.
இதுதான் நான் சொல்லப் போவது: இந்தக் கலாசார மோதல்களில் எங்கும் கண்டிப்பாக தியாகம் இருக்காது. சமரசம் இருக்கும். பேரம் பேசுதல் இருக்கும். பழக்க வழக்கங்கள் தளர்ந்து கொண்டே தொடர்ந்து கொண்டு வரும். உறவுகள் முறியாது. விரிசல்கள் இருப்பதைக் கட்டுப்படுத்த அவரவரால்தான் முடியும். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். உங்கள் பேரன் உங்களிடம் நெருங்கிக்கொண்டே வருவான். பழகப் பழக அவர்களும் அங்கே இங்கே நம் பழக்க வழக்கங்களுக்கு ஈடு கொடுப்பார்கள். மறந்து விடாதீர்கள். உங்கள் பேரன் உறவு எங்கே போய்விடும்?
வாழ்த்துக்கள் சித்ரா வைத்தீஸ்வரன். |