தென்றல் பேசுகிறது...
ரட்கர்ஸ் பல்கலைக்கழக மாணவர் தருண் ரவியின் மீதான 15 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளன. அவர் செய்தது, சுருக்கமாக, இதுதான்: ரவியும், டைலர் கிளமெண்டியும் அறைவாசிகள். ஓரினச் சேர்க்கை இயல்புடைய கிளமெண்டி ஒருநாள் இணையத் தோழர் ஒருவரோடு தனியே அறையில் நேரம் கழிக்க விரும்பினார். அதற்கு ஒப்பிய ரவி, தான் வெளியே போகுமுன் வெப்கேம் ஒன்றை அமைத்து, அறையினுள் நடப்பதைப் பார்க்க வசதி செய்துகொண்டதோடு, கிளமெண்டியும் நண்பரும் அறையிலிருக்கும் காட்சியை இணையத்தில் காண்பித்து, அதைப் பிறரும் பார்க்க அழைத்து ட்விட்டரில் விளம்பரப்படுத்தினார். இதையறிந்த கிளமெண்டி செப்டம்பர் 2010ல் தற்கொலை செய்துகொண்டார். ரவிமீது நிரூபிக்கப்பட்ட குற்றங்களுக்கான தண்டனை 10 ஆண்டுவரை சிறைவாசமாக இருக்கமுடியும் என்ற நிலையில் நீதிபதி பெர்மன் ரவிக்கு 30 நாள் ஜெயில்வாசம், 3 ஆண்டு நிபந்தனையுடன் கூடிய வெளிவாசம் (Probation), 300 மணி நேரச் சமுதாய சேவை, 10,000 டாலர் வழக்குச் செலவு ஈடுகட்டுதல், மின்வெளி அடாவடித்தனம் (cyber bullying) குறித்து அறிவுரை பெறுதல் ஆகியவற்றைத் தண்டனையாக வழங்கினார். மாணவர் என்பதால் சற்றே சலுகை காட்டவேண்டும் என்று கருதியவர்கள்கூட இந்தத் தண்டனை குறைவானதென்பதை ஒப்புக்கொள்கின்றனர். வழக்கின் எந்தக் கட்டத்திலும் தன் தவறுக்கு ரவி வருந்தியதாகத் தெரியவில்லை என்று சுட்டிக்காட்டினார் நீதிபதி. மே 21 அன்று தனது தவறுக்கு வருந்தி அறிக்கை வெளியிட்டார் ரவி. சட்டம் அதிகபட்சமாக நிர்ணயிக்கும் பத்தாண்டு சிறைத்தண்டனை வழங்காதது குறித்து, "சிறைத்தண்டனை என்பது வன்முறை மிகுந்த குற்றங்களுக்குத்தான், இதில் அப்படி எதுவும் இல்லை" என்று கூறியுள்ளார். "கிளமெண்டி மீது ரவிக்கு வெறுப்பு கிடையாது, ஆனால் சற்றும் நுண்ணுணர்வு இல்லாமையால் ("colossal insensitivity") இப்படிச் செய்துள்ளார்" என்றும் கூறியுள்ளார். பாலினத் தேர்வு குறித்த சமுதாயத்தின் மனச்சாய்வுக்கு எதிரான நல்ல தீர்ப்பு இது என்று கூறும் அதே நேரத்தில் நீதிபதி பெர்மன் குற்றத்துக்கேற்ற தண்டனையே கொடுத்துள்ளார் என்றும் பலர் கருதுகின்றனர்.

*****


மாணவர் தற்கொலை என்று சொல்லும்போது, தமிழகத்தில் அன்றாடம் செய்தித்தாளில் காணப்படும் இளவயதினர் தற்கொலைச் செய்திகள் குறித்துப் பேச வேண்டியதிருக்கிறது. அதிகரித்து வரும் இந்தப் போக்கு கவலையளிக்கிறது. தேர்வில் தோல்வி, கிராமப்புற மாணவர்கள் நகர்ப்புறக் கல்வியகத் தரத்தைச் சமாளிக்க முடியாமை, காதல் குழப்பங்கள், தவறான பாலுறவு, பெற்றோர் கண்டிப்பு, ஆசிரியர் கண்டிப்பு, ஏன், அபூர்வமான ஒரு சம்பவத்தில் நாய் கடித்ததால் மனச்சோர்வு, என்று காரணங்கள் பல. நூறு சதவீதம் மாணவர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதே குறிக்கோளாகப் பள்ளிகள் எந்திர கதியில் செயல்படுகின்றன. நூறு சதவீதம் மதிப்பெண்களைத் தம் குழந்தைகள் பெற வேண்டும் என்று பெற்றோர்கள் நிர்ப்பந்திக்கின்றனர். ஆனால், செல்ஃபோன், கணினி விளையாட்டு, ஊடகங்கள் காட்டும் தவறான முன்னுதாரணங்கள் என்று மாணவர் உலகம் இலக்கற்ற, உல்லாசத்தை முதன்மையாகக் கொண்ட ஒரு வாழ்முறையை உயர்வாக நினைக்கிறது. ஒழுக்கக் கல்வியோ, உணர்வுக் கல்வியோ (Emotional Education) எங்கும் கிடைக்காத நிலையில் இளம் மனங்கள் தற்கொலையை ஒரு தப்பிக்கும் வழியாக நினைத்துவிடுகின்றன. தொழில்நுட்ப (Techies) உலகிலும் தற்கொலை, விவாகரத்து ஆகியவை மிக அதிகமாகிவிட்டதற்கும் இதே பின்னணிதான். ஆரோக்கியமான மனநிலை, சரியான உலகப் பார்வை, வலுவான வாழ்க்கை நெறி என்று இவற்றைக் கூறப் பெரியவர்களும் அமைப்புகளும் அதிகமில்லை; கூறினாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கைக் கல்வியோ சூழலோ இவர்களுக்குத் தரவில்லை. இது மிகவும் அபாயமான போக்கு. சமுதாயமும், அரசும், கல்வியாளர்களும் இதைப்பற்றித் தீவிரமாகச் சிந்தித்து சிகிச்சைக்கான வழி காண வேண்டும்.

*****


இஸ்ரேலைச் சேர்ந்த போரிஸ் கெல்ஃபண்டைத் தோற்கடித்து, ஐந்தாம் முறையாக விசுவநாதன் ஆனந்த் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இது இந்தியர்களுக்குப் பெருமை தருவது என்பதில் ஐயமில்லை. சதுரங்கம் என்ற பெயரிலான மூளைத்திறன் போராட்டமாக பாரதத்தில் தொடங்கிய இந்த ஆட்டம், ரஷ்யாவைப் புக்ககமாகக் கொண்டுள்ளது. ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் இந்தியரான ஆனந்த் இந்தப் பட்டத்தை வென்றதும் ஒருவகையில் பொருத்தமானதே. இருவருமே தொடரில் சமநிலையில் இருந்ததால், விரைவாட்டச் (Rapid) சுற்றில் அரைப்புள்ளி அதிகம் எடுத்து மீண்டும் 'சதுரங்கச் சக்ரவர்த்தி' ஆகியிருக்கிறார் ஆனந்த்.

*****


அமெரிக்கப் பயணத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்த, 'சாகித்ய அகாடமி' விருதுபெற்ற தமிழின் முன்னணி எழுத்தாளரான நாஞ்சில்நாடன் இந்த இதழில் உங்களோடு மனம்விட்டுப் பேசுகிறார். மற்றொரு நேர்காணல் விரிகுடாப் பகுதியின் பிரபல கர்நாடக இசைவாணி ஆஷா ரமேஷின் கருத்துக்களைத் தாங்கி வருகிறது. தமிழுலகம் மறக்கத் தொடங்கிவிட்ட, ஆனால் மறக்கக்கூடாத, அவ்வை டி.கே. சண்முகம், கா.சி. வேங்கடரமணி போன்றோர் குறித்த கட்டுரைகள், போட்டிச் சிறுகதைகள், சுவையான செய்தித் துணுக்குகள் என்று ஜூன் மாதத் தென்றல் உங்களை வந்தடைகிறது.

தென்றல் வாசகர்களுக்கு 'தந்தையர் தின' வாழ்த்துக்கள்!


ஜூன் 2012

© TamilOnline.com