இந்தியாவின் முதல் உளவுச் செயற்கைக் கோளான ரிசாட்-1 (ரேடார் இமேஜிங் சேடலைட்-1) ஸ்ரீஹரிகோட்டா தளத்திலிருந்து ஏவப்பட்டு விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் எடை 1858 கிலோ. இந்தியா இதுவரை ஏவிய செயற்கைக் கோள்களிலேயே அதிக எடை கொண்டது இது. முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டதும் கூட. ISROவின் பத்தாண்டு கால முயற்சியில் உருவாக்கப்பட்ட இதன்மூலம் உளவுத் தகவல்களை மட்டுமல்லாமல் இயற்கைச் சீற்றம் பற்றிய புள்ளி விபரங்களையும் மிகத் துல்லியமாக அறிய இயலும். இதில் பொருத்தப்பட்டுள்ள் நவீன கேமராக்களால் இரவு நேரத்திலும் கண்காணிக்க இயலும். 1 மி.மீ. நீள அகலமுள்ள பொருளைக்கூட உணரும் திறன் கொண்டது. மேகக் கூட்டமோ, பனிமூட்டமோ அதிகம் இருந்தாலும் கூட ஊடுருவிப் பூமியின் மேற்பரப்பை இதனால் பார்க்க முடியுமென்பதால், இது தேசப் பாதுகாப்பு விஷயங்களுக்கு நன்றாகப் பயன்படும். விவசாய நிலங்கள் பற்றிய தகவல்களையும், எவ்வாறான நிலங்களில் விளைச்சல் சாத்தியமாகும் எனவும் கணித்துச் சொல்லும் இந்த சேடலைட்.
இதன் திட்ட இயக்குநராக இருந்து இதை விண்ணில் ஏவிய விஞ்ஞானிகள் குழுவில் முக்கியப் பங்காற்றியவர் என். வளர்மதி. ரிமோட் சென்சிங் செயற்கைக் கோள் திட்டம் ஒன்றின் இயக்குநராகச் செயல்பட்ட முதல் பெண் இவர்தான். இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். அகில இந்திய அளவில் இந்த பணியை ஏற்கும் இரண்டாவது விஞ்ஞானி இவர் என்ற பெருமையும் இவருக்குக் கிடைத்துள்ளது. பெங்களூரைச் சேர்ந்த விஞ்ஞானி டி.கே. அனுராதா தலைமையில் கடந்த ஆண்டு ஜி சாட்-12 செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது.
|