தெரியுமா?: அக்னி புத்ரி டெஸ்ஸி தாமஸ்
அணு ஆயுதங்களை ஏந்தி 5000 கி.மீ. தூரம்வரை சென்று தாக்க வல்ல அக்னி-5 ஏவுகணையை ஏப்ரல் 20, 2012 அன்று இந்தியா விண்ணில் செலுத்தியது. 17.5 மீட்டர் நீளமும் 50 டன் எடையும் கொண்ட இத்தகைய நவீன ஏவுகணைகள் அமெரிக்கா, ரஷியா, சீனா, ஃபிரான்சு ஆகிய நான்கு நாடுகளிடம் மட்டுமே உள்ளன. இந்தப் பணியை தலைமைப் பொறுப்பேற்று நடத்தியவர் கேரளாவைச் சேர்ந்த டெஸ்ஸி தாமஸ். கேரள மாநிலம் ஆலப்புழையில் பிறந்த டெஸ்ஸிக்கு, பள்ளியில் படிக்கும்போதே விஞ்ஞானத்தில் ஆர்வம். சந்திரனில் அப்பலோ விண்கலம் இறங்கியதை அறிந்து ராக்கெட் தொழில்நுட்பம் படிக்க ஆர்வம் கொண்டார். ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் எம்.டெக். முடித்தார். 1988ல் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டுப் பிரிவில் சேர்ந்தார். தொடர்ந்து முனைப்புடன் உழைத்தார். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் வழிகாட்டுதலின் பேரில் பல ஏவுகணை திட்டப்பணிகளை சிறப்பாக நிறைவேற்றினார். இவர் சாதனையில் ஓர் மகுடம்தான் அக்னி-5. 48 வயதான டெஸ்ஸி தாமஸ் ஏவுகணைத் திட்டத்துக்குத் தலைமை ஏற்ற முதல் பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது.



© TamilOnline.com