யானைக்குப் பானை
சிம்மபுரி என்ற ஊரில் சிங்காரம் என்பவன் வாழ்ந்து வந்தான். அவன் மிக நல்லவன். அவன் மகளுக்குத் திருமணம் நிச்சயமானது. மாப்பிள்ளையை ஊர்வலமாக அழைத்து வர விரும்பிய அவன் அவ்வூர் செல்வந்தனை அணுகினான். செல்வந்தனது யானையை ஒருநாள் வாடகைக்குத் தருமாறு வேண்டினான். அந்த யானை சில நாட்களாக உடல்நலமில்லாமல் இருந்தது. ஆனால் செல்வந்தனோ பணத்துக்கு ஆசைப்பட்டு அந்த விஷயத்தை மறைத்து, வாடகையாகப் பத்து வராகனைச் சிங்காரத்திடமிருந்து வாங்கிக் கொண்டு யானையை அனுப்பி வைத்தான்.

வீட்டுக்கு வந்த சிங்காரம் யானையை நன்கு அலங்கரித்தான். பின் அதன்மீது தனது மருமகனை அமர வைத்து ஊர்வலமாக அழைத்துப் போனான். திருமணம் நல்ல முறையில் நடந்தது. மறுநாள் யானையை அழைத்துக் கொண்டு செல்வந்தன் வீட்டுக்குப் போனான் சிங்காரம். செல்வந்தன் வீட்டு வாசலை மிதித்த யானை திடீரெனப் பிளிறியவாறே கீழே விழுந்தது. இறந்தது. அதைக் கண்ட சிங்காரத்துக்கு ஒரே அதிர்ச்சி. இதை முன்பே எதிர்பார்த்திருந்த செல்வந்தன் ஒன்றும் தெரியாதவன்போல் நடித்தான். கோபத்தோடு கத்தினான். யானையின் மரணத்துக்குச் சிங்காரம்தான் காரணம், அதனால் உடனடியாக அந்த யானையைப் போல் வேறொரு யானையை வாங்கித் தரவேண்டும் என்று ஊர்த் தலைவரிடம் முறையிட்டான்.

செல்வந்தனின் பேராசை பற்றி முன்னமே நன்கு அறிந்திருந்தார் ஊர்த் தலைவர். வழக்கை மறுநாளுக்கு ஒத்தி வைத்தார். அன்று இரவு சிங்காரத்தை ரகசியமாகச் சந்தித்த
அவர், மறுநாள் அவன் வழக்கு மன்றத்துக்கு வர வேண்டாம் என்றும், தன் வீட்டுக் கதவைச் சாத்தி விட்டு அதன் பின்னால் சில பழம்பானைகளை வாங்கி அடுக்கி வைத்து விடுமாறும் ஆலோசனை கூறிச் சென்றார்.

மறுநாள் அதேபோலச் சிங்காரம் சில பழம்பானைகளைக் கதவுக்குப் பின்னால் அடுக்கி வைத்துவிட்டு, வழக்கு மன்றத்துக்குச் செல்லாமல் அமர்ந்திருந்தான். வழக்கு மன்றத்தில் வெகுநேரம் காத்திருந்தான் செல்வந்தன். ஊர்த்தலைவர் அவனிடம், "அவன் பணம் கொடுக்க வேண்டுமே என்று பயந்து கொண்டு வரவில்லை போலிருக்கிறது. நீ போய்ச் சீக்கிரம் அவனை அழைத்து வா" என்று அனுப்பி வைத்தார்.

செல்வந்தன் ஆத்திரத்துடன் சென்றான். சிங்காரத்தின் வீட்டு வாசல் கதவு சாத்தியிருந்ததால் வாசல் முன்பு நின்று சிங்காரத்தை அழைத்தான். "என் பணத்தைத் தராமல் வீட்டுக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறாயா? உன்னை என்ன செய்கிறேன் பார்!" என்று ஆத்திரத்துடன் கதவைத் தள்ளினான். அவ்வளவுதான். கதவை ஒட்டி அடுக்கியிருந்த பானைகள் அனைத்தும் கீழே விழுந்தன. உடைந்து சிதறின. உடனே வீட்டினுள் இருந்து ஓடி வந்த சிங்காரம். "ஐயோ என் சொத்தெல்லாம் போச்சே! என் முன்னோர்கள் எனக்காக வைத்துப் போயிருந்த பொக்கிஷம் எல்லாம் உடைந்து போய்விட்டதே" என்று கத்தினான். பெருங்குரலில் கூக்குரலிட்டு அழுதான்.

செல்வந்தன் உடனே, "இதற்குப் பதிலாக நான் பணம் தருகிறேன், அல்லது வேறு பானைகள் வாங்கித் தருகிறேன்" என்றான். ஆனால் சிங்காரம் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. "எனக்கு இந்தப் பானையேதான் வேண்டும். இவை என் முன்னோர்கள் எங்கள் தலைமுறைக்காக விட்டுச் சென்றவை" என்று சொல்லிக் கண்ணீர் சிந்தினான்.

இறுதியில் இருவரும் வழக்கு மன்றத்திற்குச் சென்றனர். நடந்ததை விசாரித்த ஊர்த் தலைவர், "சரி, சரி! உன் ஒரே சொத்தான யானை அவனால் இறந்து போய்விட்டது. அதை மீண்டும் உயிர்ப்பித்துத் தர அவனால் இயலாது. அதுபோல அவன் ஒரே சொத்தான பானைகள் உன்னால் உடைந்து போய்விட்டன. அதைத் திரும்பத் தர உன்னாலும் முடியாது. இருவருக்கும் மற்றொருவரால் சொத்துப் போய்விட்டது. ஆக மொத்தத்தில் யானைக்கும் பானைக்கும் சரியாகப் போய்விட்டது. போய் வாருங்கள்" என்று தீர்ப்பு சொல்லி அனுப்பினார்!

சுப்புத் தாத்தா

© TamilOnline.com