தேவநேயப் பாவாணர்
தமிழ் வளர்ச்சி ஒன்றையே உயிர்மூச்சாகக் கொண்டு, பலனை எதிர்பாராது இறுதிநாள்வரை உழைத்தவர் 'மொழி ஞாயிறு', 'செம்மொழிச் செல்வர்' தேவநேயப் பாவாணர். இவர் 1902 பிப்ரவரி 7 அன்று, சங்கரநயினார் கோயிலில் வசித்த ஞானமுத்து தேவேந்திரனார் - பரிபூரணம் அம்மையார் இணையருக்கு மகவாகத் தோன்றினார். இயற்பெயர் தேவநேசன். தந்தை கணக்காயராகவும், தாயார் ஆசிரியராகவும் பணிபுரிந்தனர். ஐந்தாம் வயதில் அடுத்தடுத்துப் பெற்றோரை இழந்தார். பாவாணரை வளர்க்கும் பொறுப்பை ஆம்பூரில் வசித்த மூத்த சகோதரி பாக்கியத்தம்மாள் ஏற்றுக்கொண்டார். நடுநிலைக் கல்வி வரை அங்கே பயின்றார். பேராயர் ஒருவரது ஆதரவால் பாளையங்கோட்டைத் திருச்சபை ஊழியக் கழக உயர்நிலைப்பள்ளியில் (C.M.S. பள்ளி) பயின்று பள்ளியிறுதி வகுப்பை முடித்தார். அப்போது அவருக்குத் தமிழைவிட ஆங்கிலமே மிகவும் பிடித்ததாக இருந்தது. ஆங்கிலத்தில் தங்கு தடையில்லாமல் பேசும், எழுதும் ஆற்றல் கைவரப் பெற்றிருந்ததால் ஆங்கில அகராதியை உருவாக்கிய சாமுவேல் ஜான்சனைக் குறிக்கும் வகையில் 'ஜான்சன்' என்றே நண்பர்களால் அழைக்கப்பட்டார். பத்தொன்பதாம் வயதில் தம்மை ஆதரித்த பேராயர் யங் நடத்தி வந்த சீயோன் மலை உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியராகப் பொறுப்பேற்று தம் பணியைத் துவக்கினார்.

1921ல் அவர் படித்த ஆம்பூர் பள்ளியிலேயே தமிழ் பயிற்றும் வாய்ப்பு வந்தது. அந்தப் பணியில் கடுமையாக உழைத்தார். தமிழாசிரியராக உயர்ந்தார். அக்காலத்தில் மிகவும் அரிதான பண்டிதர் தேர்வு எழுதி வெற்றி பெற்றார். மொழிமீது இயல்பாக இருந்த ஆர்வத்தினால் ஓய்வு நேரத்தைப் புத்தகங்கள் படிப்பதிலும், ஆய்வு செய்வதிலும் செலவிட்டார். அதுவரை இருந்த ஆங்கில மோகம் குறைந்து தமிழின் மீதான ஆர்வம் தலைதூக்கியது. அது கிட்டத்தட்ட தமிழ் வெறியாகவே மாறியது. ஆங்கிலத்தில் பேசுவதையும், எழுதுவதையும் தவிர்த்தார், பிறர் பேசினாலும் புறக்கணித்தார். கிட்டத்தட்ட பத்தாண்டுகள் ஆங்கிலத்தோடு தொடர்பற்றிருந்த அவர், கல்வி மற்றும் சமுதாயச் சூழலால் மீண்டும் ஆங்கிலத்தின்மீது கவனம் செலுத்தினார். இதுபற்றி அவர், "தமிழாராய்ச்சியில் மூழ்கி தமிழின் அடிமட்டத்தைக் கண்டேனாயினும் பத்தாண்டுகட்குப் பிறகே என் கண் திறந்தது. அதன்பிறகே நான் ஆங்கிலத்தை மீண்டும் படிக்கத் தொடங்கினேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

பாவாணர் அற்புதமான பல கட்டுரைகளை, கடிதங்களை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். ஆம்பூரைவிடச் சென்னை முன்னேற்றத்துக்கு உகந்ததாக இருக்கும் எனக் கருதிய அவர் சென்னை கெல்லட் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் பொறுப்பேற்றார். பின்னர் தாம்பரம் கிறிஸ்துவ உயர்நிலைப்பள்ளியிலும், பெரம்பூர் கலவல கண்ணனார் உயர்நிலைப் பள்ளியிலும் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். இக்கால கட்டங்களில் அவர் புலவர் தேர்வு எழுதியும் B.O.L. தேர்வு எழுதியும் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து மன்னார்குடி பின்லே கல்லூரியில் ஆறாண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றினார். ஓய்வு நேரத்தை மொழியாராய்ச்சியில் செலவிட்டவர், இராஜகோபாலர் என்பவரிடம் முழுமையாக இசை பயின்று தேர்ந்தார். ஏற்கனவே சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக நிறுவனர் வ. சுப்பையாப் பிள்ளையுடன் நட்பு பூண்டிருந்த பாவாணர், அவர்கள் நடத்தி வந்த 'செந்தமிழ்ச் செல்வி' இலக்கிய இதழில் 'ஒப்பியல் மொழியாராய்ச்சி' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டார். அதுதான் அவரது முதல் கட்டுரை.
மறைமலையடிகளைப் பின்பற்றி தனித்தமிழ் பேசுவதிலும் எழுதுவதிலும் ஆர்வம் கொண்ட பாவாணர் "எங்கும் தமிழ்; எதிலும் தமிழ் என்ற மொழிக்கு முன்மாதிரியாக வாழ்ந்தார். தொடர்ந்து திருச்சி பிஷப் ஹீபர் கண்காணியார் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் பணி கிடைத்தது. அக்கால கட்டத்தில் தொடர்ந்து பாவாணர் எழுதிய பல ஆய்வுக் கட்டுரைகள், நூல்கள் கழக வெளியீடாக வரத் துவங்கின. அதுவரை "ஆய்வாளர்கள்" பலர் துணிந்து கூறிய ஆய்வு முடிவுகளை ஆணித்தரமான சான்றுகளுடன் பாவாணர் மறுத்தார். அதுவரை உண்மை என்று கருதப்பட்டவற்றை பாவாணரின் ஆய்வு முடிவுகள் புரட்டிப் போட்டன. குறிப்பாக அவரது 'ஒப்பியன் மொழிநூல்', 'வேர்ச் சொல் சுவடி', 'செந்தமிழ்க் காஞ்சி' போன்ற நூல்கள் அவரது நுண்மான் நுழைபுலத்தைப் பறைசாற்றின. "திரவிட மரபு தோன்றிய இடம் குமரி நாடே" என்ற முனைவர் பட்ட ஆய்வேட்டை சென்னைப் பல்கலையில் சமர்ப்பித்தார் பாவாணர். ஆனால் சிலரது முயற்சியால் அவ்வாய்வேடு நிராகரிக்கப்பட்டது என்றாலும் மனம் தளராமல் தமது ஆய்வுகளைத் தொடர்ந்தார் பாவணர்.

எஸ்தர் என்பாருடன் திருமணம் நிகழ்ந்தது. ஆனால் 1928ல் திடீரென எஸ்தர் மரணமடைந்தார். தனிமையில் வாடினார் பாவாணர். சில ஆண்டுகளுக்குப் பின், 1930ல் தன் சகோதரி மகளான நேசமணியை மணம் புரிந்தார். நம்பி, செல்வராயன், அடியார்க்கு நல்லான், மங்கையர்க்கரசி, மணிமன்றவாணன் என்னும் மகவுகளும் வாய்த்தன. நிலையற்ற பணி காரணமாகத் தொடர்ந்து சென்னை, மன்னார்குடி, திருச்சி, சேலம் என பல இடங்களில் பணியாற்றினார். அந்தப் பயணங்களும், செலவினங்களும் அவரது தமிழாய்வுப் பணிக்கு தடைக்கற்களை ஏற்படுத்தின. சேலம் வாழ்க்கை அவரது வாழ்வின் திருப்புமுனை ஆனது. சேலம் நகராட்சிக் கல்லூரியில் துணைப் பேராராசிரியராகப் பொறுப்பேற்ற பாவாணர், தனது திறமையினால் தமிழ்த் துறைத் தலைவராக உயர்ந்தார். தமிழறிஞர் டாக்டர் வா.செ. குழந்தைசாமி, புலவர் பெருச்சித்திரனார், மேனாள் அமைச்சர் க. ராசாராம் போன்றோர் அக்காலத்தில் பாவாணரிடம் பயின்ற மாணவர்களாவர். சேலத்தைத் தொடர்ந்து அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சித் துறை துணைப் பேராசிரியராகப் பொறுப்பேற்றார் தேவநேயர். அங்கு சுமார் ஐந்தாண்டுகள் அகரமுதலி தொகுப்பாளராகப் பணியாற்றினார். சில காரணங்களால் அண்ணாமலை பல்கலையிலிருந்து பாவாணர் விலக நேரிட்டது. அதன் பின்னர் நிலையான பணி அமையாமையாலும், மனைவி திடீரென மறைந்தமையாலும் பெருந்துயருற்றார். அவர் கட்சிகளோடு தம்மைப் பிணைத்துக் கொள்ளாமையால் அவருக்கு அரசு ஆதரவு கிடைக்கவில்லை. இரண்டாம், மூன்றாம் உலகத் தமிழ் மாநாடுகளுக்கு அழைப்பில்லாமல் புறக்கணிக்கப்பட்டார். இது பாவாணர் மனதில் வருத்தத்தை ஏற்படுத்தினாலும், தனது ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்தார்.

தனித்தமிழ் வளர்ச்சிக்காக 'உலகத் தமிழ்க் கழகம்' ஏற்படுத்தப் பெற்றது. பாவாணர் அதன் தலைவராகப் பொறுப்பேற்றார். கழகம் தமிழ் வளர்ச்சிக்காப் பல்வேறு அறப் பணிகளை மேற்கொண்டது. டாக்டர் வ.சுப. மாணிக்கம், பேராசிரியர் சி. இலக்குவனார், புலவர் குழந்தை, பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரை உள்ளிட்ட தமிழறிஞர்களைக் கொண்டு மாநாடுகள் நடத்தியது. நூல்களை வெளியிட்டது. அதன் மூலம் 'திருக்குறள் தமிழ் மரபுரை' உள்ளிட்ட சில நூல்களை எழுதி வெளியிட்டார் பாவாணர். இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும் பங்குபெற்ற அவர், அது குறித்து 'இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?', 'கட்டாய இந்திக் கல்வி கண்டனம்' போன்ற பல காத்திரமான கட்டுரைகளையும், பாடல்களையும் எழுதினார்.

பாவாணர் தமிழின் சிறந்த ஆராயாச்சியாளரும் கூட. "உலக முதன்மொழி தமிழ்; இந்திய மொழிகளுக்கு மூலமும் வேரும் தமிழ்; திராவிடமொழிகளுக்குத் தாய்மொழி தமிழ்; உலகின் முதல் மாந்தன் தமிழன்; தமிழ் தோன்றிய இடம் குமரிக்கண்டம்; மொஹஞ்சதாரோ, ஹரப்பா நாகரிகம் பழந்தமிழ் நாகரிகமே!" என்பது பாவாணரது ஆய்வு முடிபு. கிரேக்கம், இலத்தீன், சம்ஸ்கிருதம் உள்ளிட்டவைகளுக்குச் சொற்கள் பலவற்றை அளித்தது தமிழ் என்று ஆய்வுகள் மூலம் பாவாணர் கூறினார். "தமிழ் திராவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமும் என்ற உண்மையை உலகமறியச் செய்ய வேண்டும். இதற்கு மிகுந்த நெஞ்சுரமும் தற்சார்பு மனப்பான்மையும் வேண்டும். இதற்காகவே இறைவன் என்னைப் படைத்தான்" என்கிறார் பாவாணர். தனித்தமிழில் பல்வேறு வகையான கலைச் சொற்களை உருவாக்கியதிலும் பாவாணருக்கு மிக முக்கிய பங்குண்டு. 'பேசினான்' என்ற ஒரு சொல்லுக்கு இணையாக நவின்றான், புகன்றான், மொழிந்தான், அறைந்தான், செப்பினான் என 44 சொற்கள் தமிழில் உண்டு என ஆய்ந்து வெளியிட்டிருக்கிறார். "ஓர் உண்மையான ஆராய்ச்சியாளன் ஒருநாளும் ஆராயாதிருக்க முடியாது. அவன் ஆராயாவிடினும் அவன் உள்ளம் ஆராயும். அதற்குக் கனவென்றும் நனவென்றும் ஊண் வேளையென்றும் உறக்க வேளையென்றும் ஒன்றுமில்லை. சொல்லாராய்ச்சியும் மொழியாராய்ச்சியும் எனக்கு இயல்பாக இன்பந்தரும் கலைகள்" என்கிறார் பாவாணர், தமது ஆராய்ச்சி ஆர்வம் குறித்து.

பாவாணர் 'தமிழ் வரலாறு', 'தமிழர் வரலாறு', 'தமிழர் மதம்', 'தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்', 'தமிழர் திருமணம்', 'பழந்தமிழராட்சி', 'பண்டைத் தமிழக நாகரிகமும் பண்பாடும்', 'சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்', 'தமிழ் இலக்கிய வரலாறு', 'வடமொழி வரலாறு', 'இயற்றமிழ் இலக்கணம்', 'ஒப்பியன்மொழி நூல்', 'தொல்காப்பியக் குறிப்புரை', 'திருக்குறள் தமிழ் மரபுரை', 'வேர்ச்சொற் கட்டுரைகள்' போன்ற நூல்களைப் படைத்துள்ளார். நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய பாவாணர் ஆங்கிலத்திலும், 'The Primary Classical Language of the World', 'The Lemurian Language and its Ramifications' போன்ற நூல்களை எழுதியிருக்கிறார். பாவாணரின் பன்மொழி ஆற்றலைப் பாராட்டி அவருக்கு 'மொழி ஞாயிறு' என்ற பட்டம் ஈ.வெ.ரா. பெரியாரால் வழங்கப்பட்டது. 'செந்தமிழ்ச் செல்வர்' விருதை எம்ஜியார் வழங்கினார். இவைதவிர 'இலக்கணச் செம்மல்', 'தனித்தமிழ் வித்தகர்' போன்ற பல சிறப்புகளும் அவருக்குக் கிடைத்தன. "சொல்லாராய்ச்சித் துறையில் தேவநேயனார் ஒப்பற்ற தனித் திறமையுடைவர் என்று யாம் உண்மையாகவே கருதுகின்றோம்," என்கிறார் மறைமலையடிகள். "பாவாணர் ஒவ்வொரு தமிழ்ச் சொல்லையும் ஆராய்ந்திருக்கிறார். தமிழரின் தகுதிக்கு உண்மையான அடிப்படைகளைத் தந்தவர் பாவாணர். அவரை நான் தமிழ்த் தெய்வமாகக் கருதுகிறேன்" என்பது முன்னாள் முதல்வர் எம்ஜியாரின் கருத்து.

தமது பெயருக்கு முன்னாலோ, பின்னாலோ பட்டங்கள் போட்டுக் கொள்வதை விரும்பாதவர் பாவாணர். 'செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி' உருவாக்குவதைத் தமது வாழ்நாள் நோக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால் அதற்கு அரசின் ஆதரவு கிடைக்கவில்லை. அதனால் 'தென்மொழி' இதழ்மூலம் அதன் உருவாக்கத்திற்கு ஓர் அமைப்பை ஏற்படுத்தி உதவினார் பாவாணரின் அன்பு மாணவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார். ஆனால் ஓராண்டுக்குப் பின் அதுவும் தடைப்பட்டது. இறுதியில் குன்றக்குடி அடிகளார் அப்போது தமிழக முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதிக்கு இத்திட்டம் பற்றி எடுத்துக் கூறித் தமிழக அரசே வெளியீட்டுப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமாறு செய்தார். 1974ல் பாவாணர் இத்திட்டத்தின் இயக்குநராகப் பொறுப்பேற்றார். இத்தகைய பொறுப்பில் இருந்தும், தனக்கென ஒரு ஊர்திகூட இல்லாமல் பேருந்தில் சென்றே பணிபுரிந்தார். பின் மூப்பின் காரணமாக இல்லத்தில் இருந்தே பணியை மேற்கொண்டார். 1980ல் மதுரையில் ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு நடத்தத் திட்டமிடப்பட்டது. பாவாணர் அதற்கு சிறப்புப் பேச்சாளராக அழைக்கப்பட்டார். ஜனவரி 5, 1981 அன்று மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு "மாந்தன் தோற்றமும், தமிழர் மரபும்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றியதுடன், தனது ஆய்வு பற்றிய விளக்கக் கையேட்டையும் வெளியிட்டார். அன்று இரவே அவரது உடல் நலம் சீர்கெட்டது. நோயிலிருந்து மீளாமல் ஜனவரி 16, 1981 அன்று இரவு மரணமடைந்தார்.

செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலியின் முதல் பாகம் 1985ல் வெளியானது. சென்னையிலுள்ள அரசு மைய நூலகத்துக்கு அவரது பெயர் வைக்கப்பட்டது. 1996ல் பாவாணரின் நூல்கள் அரசுடைமை ஆக்கப்பட்டன. தமிழ் மண் பதிப்பகம் பாவாணரின் அனைத்து நூல்களையும் மறுபதிப்பு செய்துள்ளது. 2002ல் பாவாணர் நூற்றாண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப் பெற்றது. சீயோன் மலையில் அவரது நினைவுக் கோட்டமும், நினைவு வளைவும் அமைக்கப்பெற்றது. மதுரையில் அவருக்கு நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அவரது நினைவு அஞ்சல் தலை வெளியிடப் பெற்றது. தமிழ் இணையப் பல்கலைக்கழகம் அவரது நூல்களை இலவசமாகப் படிக்கும் வண்ணம் தனது இணையதளத்தில் (www.tamilvu.org) பதிவு செய்திருக்கிறது. தேவநேயரின் மீது பேரன்பு கொண்ட சிங்கையைச் சார்ந்த வெ.கரு.கோவலங்கண்ணன், devaneyam.net என்ற இணையதளத்தை நடத்தி வருவதுடன், பாவாணரின் நூல்கள் பலவற்றையும் அனைவரும் படிக்கும்படி பார்வைக்கு வைத்திருக்கிறார். பாவாணர் பற்றி புதிய நூல்கள் வெளிவருவதிலும் உறுதுணையாக இருக்கிறார். noolaham.org என்ற இணையதளத்தில் பாவாணர் எழுதிய "தேவநேயம்" பதிமூன்று தொகுதிகளும் இலவசமாக வாசிக்கக் கிடைக்கின்றன. தமிழ் மண்ணில் 79 ஆண்டுகாலம் வாழ்ந்து, ஏறத்தாழ 55 ஆண்டுகாலம் தமிழ்மொழி ஆய்வு செய்த தேவநேயப் பாவாணர் குறிப்பிடத்தக்க முன்னோடி.

(தகவல் உதவி : தேவநேயன் மணி எழுதிய "பாவாணர் நினைவலைகள்")

பா.சு.ரமணன்

© TamilOnline.com