அன்புள்ள சிநேகிதியே,
இந்தக் கடிதம் எழுதுவதில் எனக்கு மகிழ்ச்சி. காரணம், பிரச்சனையை எழுதப் போவதில்லை. ஒரு தீர்வை எழுதுகிறேன். பல வருடங்களாக நான் 'தென்றல்' வாசகி. உங்களுடைய பகுதியை அடிக்கடி படிப்பதால் உங்களுடைய approach எனக்குப் புரிபட ஆரம்பித்தது. முன்பு, உங்கள் பகுதியில் ஒரு வாசகி, கணவன்-மனைவி பிரிந்து போகும் நிலையில் இருந்தபோது எப்படி அவர்கள் அந்தரங்க வாழ்க்கையில் தான் நுழைவது என்று புரியாமல் குழம்பியபோது நீங்கள் எழுதியிருந்த பதில் எனக்கு மிகவும் பிடித்தது.
அதே போன்று ஒரு நிலை எனக்குத் தெரிந்தவர்களுக்கு ஏற்பட்டது. இவர்கள் என் பெண்ணின் (3rd Grade) வகுப்புத் தோழியின் பெற்றோர்கள். அந்தப் பெண் சுனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஒருநாள் என் பெண்ணிடம் அழுதிருக்கிறாள். அவள் அப்பா-அம்மா சண்டை போட்டுக்கொண்டு பிரியப் போகிறார்கள். அம்மா இந்தியாவிற்கு இவளை அழைத்துக் கொண்டு கிளம்பிவிடப் போகிறாள். திரும்பி வந்தால் இந்த வீடு, இந்த ஸ்கூல் இருக்கப் போவதில்லை. இதைக் கேட்டு என் பெண்ணும் தேம்பித் தேம்பி அழ எனக்குக் குழப்பமாக இருந்தது. சுனிதாவின் அம்மாவை சுமாராகத் தெரியும். பள்ளி விழாக்கள், பெற்றோர் கூட்டம் இவற்றில் சந்தித்திருக்கிறேன். மிகவும் நட்பாக இருப்பாள். ஆனால் நெருங்கிய நண்பர் அல்ல. விஷயம் எந்த அளவுக்குத் தீவீரம், உண்மை என்று தெரியவில்லை. குழந்தைகள் அழுவதைப் பார்த்து எப்படியாவது அந்த அம்மாவுடன் பேசவேண்டும் என்று தோன்றியது. தன் சோகத்தை என்னிடம் பங்கிட்டுக் கொள்வாளா என்ற சந்தேகம் இருந்தது. இருந்தாலும் ஒரு பெண் வேதனையில் இருக்கிறாள். எதையும் தெரிந்ததுபோல் காட்டிக் கொள்ளாமல் சிறிய உதவி வேண்டுவது போல் ஃபோன் செய்ய ஆரம்பித்துத் தொடர்பை அதிகரித்துக் கொண்டேன். குழந்தைகள், படிப்பு என்று முதலில் பேச்சு பொதுவாகத்தான் இருந்தது. அப்புறம் கொஞ்சம் விஷயம் புரிபட்டது.
வயதைப் பொறுத்தவரை நான் அவளைவிட 4-5 வயது பெரியவளாக இருக்கலாம். எப்படி MBA இந்தியாவில் முடித்துவிட்டு இங்கே விசா நிலைமையால் வேலை பார்க்க முடியாமல் தவித்துப் போகிறாள், டாலரை எண்ணி எண்ணிச் செலவு செய்கிறாள் என்று கொஞ்சம் புரிந்து கொள்ள முடிந்தது. ஒருநாள், அவள் ஃபோன் செய்து அவசரமாக வெளியே போக வேண்டியிருக்கிறது. அவள் பெண்ணை என் வீட்டில் இரண்டு நாள் தங்கவைத்துக் கொள்ள முடியுமா என்று கேட்டாள். நான் 'சரி' என்றேன். ஆனால் குழப்பமாக இருந்தது. கொஞ்சம் உரிமை எடுத்துக்கொண்டு அவளைப் பார்க்க முடியுமா என்று கேட்டேன். ஒரு காஃபி ப்ளேஸில் சந்தித்தேன். மெள்ள மெள்ள கையைப் பிடித்துக் கொண்டு, 'இதோ பார், நானும் ஒரு பெண்; ஒரு மனைவி; ஒரு தாய்; இந்திய வம்சாவளி. என்னிடம் நம்பிக்கை இருந்தால் கொட்டிவிடு. உதவி செய்கிறேனோ இல்லையோ புரிந்து கொள்வேன்" என்றேன். என்ன தோன்றியதோ, அழுதுவிட்டாள். அக்கம்பக்கம் பார்க்காமல் மெள்ளத் தன்னுடைய துக்கங்களைப் பகிர்ந்து கொண்டாள். எனக்குப் பரிதாபமாக இருந்தது. அவள் கணவரும் நல்லவராகத்தான் தோன்றியது. அவன் வீட்டாருக்கும் அவள் வீட்டாருக்கும் ஊரிலே நிறைய சண்டை, சச்சரவு போலிருக்கிறது. அதில் அவர் அடிக்கடி கோபத்தில் கத்துகிறார். குத்திக் காட்டுகிறார். அவள் குடும்பத்தில் யாரோ செய்த செயலால் ஏற்பட்ட அவமானம்; இவள் வேலைக்குப் போகாமல் பணம் செலவு செய்து என்று ஏதேதோ சண்டை. இவளால் பொறுக்க முடியவில்லை. திரும்பி வரக்கூடாது என்ற முடிவோடுதான் போகிறாள். அதுதான் விஷயம். கணவனுடன் பேசி ஒரு மாதம் ஆகிறது. இதுதான் சுருக்கம்.
அவள் என்னிடம் தன்னுடைய சுமையை இறக்கியவுடன் சகஜமாகப் பேச ஆரம்பித்தாள். நானும் கொஞ்சம் எங்கள் தோழமையில் உரிமை எடுத்துக் கொண்டேன். என் கணவருடன் எல்லாவற்றையும் பகிர்ந்துவிட்டு, ஏதாவது ஒரு strategy செய்து இவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்று ஒரு முயற்சியில் இறங்கினேன். திடீரென்று அவர்கள் வீட்டில் டின்னர் சமயத்தில் அழையாமலே நுழைந்தோம். சாப்பிட்டுவிட்டுப் போகக் கட்டாயப் படுத்தினார்கள். (அவள் நன்றாகச் சப்பாத்தி செய்வாள்). இரண்டு கணவர்களும் நன்றாகப் பழகினார்கள். விருந்தாளியை உபசரிக்கும் நிலையில் அவர்கள் இருவரும் பேசிக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அவர்கள் பெண்ணின் பெருமையைப் பேசினோம். நான் அவள் கணவர் வரைந்த ஓவியங்களைப் புகழ்ந்தேன். என் கணவர் அந்த மனைவியின் சமையலைப் புகழ்ந்தார். எங்கள் வீட்டிற்கு டின்னருக்கு அழைத்தோம்.
ஆண்கள் இருவரும் டென்னிஸ் ஆடுவதற்கு நாள், இடம் குறித்துக் கொண்டனர். உறவினர் எங்கேயோ இருக்கிறார்கள். நாமெல்லாம் எப்படி support group ஆக இருக்கிறோம் என்பதுபற்றி எங்கள் வீட்டு டின்னரில் பேசினோம். அப்போது வேறு இரண்டு நண்பர்களையும் கூப்பிட்டிருந்தேன். அவர்களில் ஒருத்தி சுனிதாவின் அம்மாவைப் போல Professonal. ஆனால் வீட்டோடு இருக்கிறாள். So, they started bonding. கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் கணவன், மனைவி பேச ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் பழைய நிலை திரும்பவில்லை. பேச்சுவாக்கில் "நீ என்ன செய்தாலும் அது உன் முடிவு. ஆனால் உன் குழந்தைக்கு ஒரு தந்தையை வாங்கிக் கொடுக்க முடியாது என்பதை அடிக்கடி நினைத்துக் கொள்" என்றேன். என் கணவர் டென்னிஸ் விளையாடும் சாக்கில் மனைவிமார் இந்த ஊரில் எப்படிப் பல நெருக்கடிகளைச் சமாளிக்கிறார்கள் என்று பெருமை பாடியிருக்கிறார். கணவர் கொஞ்சம் மாறிக்கொண்டு வருகிறார் என்று என் தோழி சொல்கிறாள். இவளும் கொஞ்சம் மாறி வருவதாகத் தோன்றுகிறது. இப்போது இந்தியா ட்ரிப் பற்றி அவள் பேசவில்லை. அந்தக் குடும்பத்தை ஒன்றாக்கும் முயற்சியில் எனக்கும் என் கணவருக்கும் இன்னும் bonding கூடியிருக்கிறது. What a pleasure, when we join hands to help others! Thank you.
yours .................
அன்புள்ள சிநேகிதியே
உங்கள் செயல் அருமை. உங்கள் கடைசி வரி அதைவிட அருமை. What else can I say?
வாழ்த்துக்கள் சித்ரா வைத்தீஸ்வரன் |