மறவன்புலவு க. சச்சிதானந்தன்
மறவன்புலவு க.சச்சிதானந்தன், யாழ்ப்பாணத்திலும் தமிழகத்திலும் இயங்கி வரும் காந்தளகம் பதிப்பகத்தின் உரிமையாளர். ஐ.நா. உணவு வேளாண் அமைப்பின் ஆலோசகராக ஏழு ஆண்டுகள் 23 அரசுகளுக்குப் பணியாற்றியவர். அறுபதுக்கும் மேற்பட்ட உலகநாடுகளுக்குப் பயணம் செய்தவர். விலங்கியலிலும் தமிழிலும் முதுகலைப் பட்டம் பெற்றவர். இவர் நிறுவிய www.tamilnool.com தமிழின் முதல் இணையப் புத்தக விற்பனை வலைமனை ஆகும். பொன்னம்பலத்திலிருந்து மின்னம்பலத்திற்குச் (www.thevaaram.org) சைவத் திருமுறைகளை எடுத்துச் சென்றவர். அவற்றை உலக மொழிகள் பலவற்றில் இணையவழியே பரப்பி வருபவர். அவருடனான உரையாடலில் இருந்து...

கே: சைவத் திருமுறைகளை இணையத்தின் மூலம் (www.thevaaram.org) உலகம் முழுதும் பரவச் செய்து மிகப் பெரிய தொண்டாற்றியிருக்கிறீர்கள். அந்தப் பணி பற்றி, அதற்கான ஆர்வம், பின்புலம் பற்றிச் சொல்லுங்கள்...
ப: என் தந்தையார், பாட்டனார் என எல்லோருமே சைவ மரபினர். கண்ணீர் மல்கத் திருவாசகத்தைப் பாடுபவர்கள். எனக்கும் சிறுபருவத்திலேயே திருமுறைகளில் பயிற்சியளித்தார்கள். அந்த ஈடுபாடுதான் என்னை இப்பணிக்குள் விரும்பி ஆட்படத் தூண்டியது. கொழும்பு தட்சிணத்தார் வேளாளர் மகமை அருள்மிகு சிவசுப்ரமணியசாமி கோவிலார், முருகன் பாடல்கள், 4,800 பக்கங்களைப் 12 பகுதிகளாகப் பதிப்பிக்கும் பணியை எங்களுக்குக் கொடுத்தார்கள். கோவைக் கம்பன் கழகத்தார் கம்பராமாயணம் பதிப்புப் பணியைத் தந்தனர். புலவர் வெற்றியழகன் மெய்ப்பாளராக இருந்து கம்பராமாயணப் பணியைச் செம்மையாக நிறைவேற்றினார். பின்னர் தருமபுரம் ஆதீனம் குருமகாசந்நிதானத்தின் அழைப்பை ஏற்று, சைவத்திருமுறைகளை மீள்பதிப்புச் செய்யும் பணியில் விரும்பி ஆட்பட்டேன். 1996 தைப்பூசத்தன்று பணியைத் துவங்கினேன். 16 பகுதிகளாக, 12 திருமுறைகளை, 18,268 பாடல்களை, 20,000 பக்கங்களில் பொழிப்புரை, குறிப்புரை, கோயில் வரலாறு, அருளாளர் வரலாறு, ஆசியுரை, பதிப்புரை, ஆராய்ச்சியுரை என ஒவ்வொரு பகுதியும் சுமார் 1000-1200 பக்கங்கள் கொண்டதாகத் திட்டமிட்டு, உருவாக்க உழைத்தோம். ஓராண்டில் செய்து முடிக்க வேண்டும் என்று சொன்னார்கள். ஒரு சவாலாக நானும் ஒப்புக் கொண்டேன்.

அச்சுத் தாளை மொத்தமாக வாங்கி வைத்தேன். 20 பேரைப் பக்கமாக்கல் பணிக்கு அமர்த்தினேன். 15 பேரை மெய்ப்புப் பார்க்கும் பணியில் ஈடுபடுத்தினேன். காலை 6.00 மணிக்குத் தொடங்கினால் இரவு 10.00 மணி வரை வேலை செய்வார்கள். கிட்டத்தட்ட ஓராண்டில் பெரும்பாலான பணிகள் நிறைவுற்று விட்டன. ஒன்பதாவது மாதத்தில் அச்சிட்ட பக்கங்களை இறுதிநிலை மெய்ப்பு ஒப்புதலுக்காகத் தருமபுரம் ஆதீனத்தில் கையளித்தேன். ஒப்புதல் கொடுப்பதையும், பணத்தைக் கொடுப்பதையும், ஆசியுரை அளிப்பதையும் அவர்கள் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தனர். இவ்வாறு நடக்கும் எனப் பேரா. அ. ச. ஞா. முன்னரே என்னிடம் கூறியிருந்தார்.

1996 தொடங்கி இன்று 2012வரை 16 ஆண்டுகள் ஆகிவிட்டன. 16வது பகுதிக்கு உரிய ஆசியுரையை ஆதீனத்தில் தரவில்லை. ஆதீனத்தின் ஒத்துழைப்புக் கிடைக்கவில்லை என்பதால் பதிப்பு முன்பணம் கொடுத்தவர்கள், என் வழி இத்திருப்பணிக்கு நன்கொடை கொடுத்தவர்கள் எங்களைக் குறைசொல்லுமாறு தருமபுரம் ஆதீனத்தில் நடந்துகொண்டனர். சைவசமயக் குருபீடம் என்பதால் நான் இதைப் பெரிதுபடுத்தவில்லை.

தொடர்ந்து கணினித் தொழில்நுட்பம் மாறிவருகிறது. 2003வரை நான் தயாரித்த எணினித் தரவுகளைத் தொடர்நது பயன்படுத்த மாற்றுத் தொழினுட்பத்துக்கு மாறவேண்டியிருந்தது. எனவே "இதுவரை செய்த பணிகளை இணையத்தில் ஏற்றப் போகிறேன். தொழினுட்பம் மாறினாலும் தரவுகள் நிலைத்திருக்கும்" என்று சொன்னேன். அதற்குத் திருமடத்தில், "யார் இணையத்தை எல்லாம் பார்க்கப் போகிறார்கள்?" என்றனர். "நான் இவற்றை இப்படியே வைத்திருக்க முடியாது. நூற்றுக்கணக்கானவர்களின் உழைப்பு உள்ளடங்கி இருக்கிறது" என்று அடிக்கடி வலியுறுத்திச் சொன்னேன். இறுதியில் 2005ல் இணையத்தில் பதிவேற்றச் சம்மதித்தனர். நாங்கள் செய்து வைத்திருந்தவற்றை அப்படியே இணையத்துக்குள் ஏற்றினோம். 2006 தைப்பொங்கல் அன்று திருமுறைகள் இணையத்தில் வெளியானது. காலப்போக்கில் ஒருங்குறி எழுத்துரு வந்ததும் அதற்கும் மாற்றி இணையத்தில் பதிவேற்றினோம்.

கே: திருமுறைகளைப் பன்மொழிக்கு ஒலிபெயர்ப்பும் மொழிபெயர்ப்பும் சாத்தியமானது எப்படி?
ப: திருமுறைகளை இணையத்தில் ஏற்றிய சில மாதங்களிலேயே நியூசிலாந்தில் தேவாரப் பாடசாலை ஆசிரியர் பொறியாளர் சக்திவேலிடமிருந்து, "இங்கு தேவாரப் பாடசாலை இருக்கிறது. ஆனால் சிறு பிள்ளைகளுக்குத் தமிழ் தெரியாது. ஆகவே ஒரு நூறு பாடல்களையாவது நீங்கள் ஆங்கிலத்தில் ஒலிபெயர்த்துத் தட்டச்சு செய்து இணையத்தில் பதிவேற்றுங்கள்" என்ற வேண்டுகோள் விடுத்தார். கணிணியாளர்களின் உதவியுடன் 18,268 பாடல்களையும் ஆங்கிலத்தில் கணிணிவழி ஒலிபெயர்த்தோம். உடனே அவர்கள் "எங்களுக்கு ஆங்கிலப் பொருளோடு விளக்கமும் இருந்தால் பயனுள்ளதாக இருக்கும்" என வேண்டுகோள் வைத்தனர். 9, 11 தவிர பிற திருமுறைகளுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பு இருந்தது. French institute of Pondichery, சேக்கிழார் அடிப்பொடி, இராமகிருட்டின மடம் ஆகியோரிடம் உரிமை வாங்கி இணையத்தில் வெளியிட்டேன். பின் 9 மற்றும் 11ம் திருமுறைகளைக் கும்பகோணம், பேராசிரியர் ச. அ. சங்கரநாராயணன் மொழிபெயர்த்துத் தந்தார். இன்றைக்கு சைவத் திருமுறையின் 18,268 பாடல்களும் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாகி இருக்கின்றன.

இந்நிலையில் சுவிற்சர்லாந்து தேவாரப் பாடசாலையில் திருமுறைகளைக் கற்பிக்க ஜெர்மன் மொழியில் ஒலிபெயர்ப்பு வேண்டும் என அங்கு சொற்பொழிவுக்குச் சென்ற பேராசிரியர் அரங்க இராமலிங்கம் வழி செய்தி அனுப்பினர். உடனே ஜெர்மன் மொழிக்கு ஒலிபெயர்ப்புச் செய்து கொடுத்தோம். அதன்பின்னர், அரபு, ஆப்பிரிகன், உருசியன், கிரியோல், தேவநாகரி, ஹிந்தி, சீனம், சிங்களம், ஜப்பான், இந்தோனேசியா, பர்மா, தாய்லாந்து என 20 மொழி வரி வடிவங்களுக்கு ஒலிபெயர்ப்புச் செய்திருக்கிறோம். தெலுங்கில் திருமுறைகளை மொழிபெயர்க்க எண்ணியிருக்கையில் மின்தமிழ் குழுமம் மூலம் விசாகப்பட்டினம் எழுத்தாளர் திவாகரின் தொடர்பு கிடைத்தது. அவரிடம் திருமுறைகளைத் தெலுங்கில் மொழிபெயர்க்க இயலுமா எனக் கேட்டேன். அவரும் ஒப்புக் கொண்டார். அவரும் அவர் மனைவியும் சேர்ந்து முதலில் முதலாம் திருமுறையை மொழிபெயர்த்தனர். எவ்வித சன்மானத்தையும் அவர்கள் எதிர்பார்க்கவில்லை. எனினும் மொழிபெயர்ப்பிற்கான பணத்தை அவர்களுக்கு என்னால் கொடுக்கமுடியவில்லையே என மன வருத்தம் கொண்டேன்.

தமிழக அரசின் மேனாள் தலைமைச் செயலாளர் தி.வி. வெங்கட்ராமனை ஒருநாள் சந்தித்தபோது அவரிடம் தெலுங்கு மொழிபெயர்ப்புப் பணியை எடுத்துச் சொன்னேன். அவர் உடனே திருப்பதி தேவஸ்தானத் தலைவரான ஆதிகேசவலுவைத் தொடர்பு கொண்டார். அதன் விளைவாக ஆதிகேசவலு அவர்கள் சென்னை வந்தபோது சந்தித்து, ஒலி-ஒளிக் காட்சி மூலம் திருமுறைத் திட்டத்தைப் பற்றி விளக்கிச் சொன்னேன். "தமிழில் இவ்வளவு இருக்கிறதா? இதைத் தெலுங்கில் கொண்டு போகாமல் வேறு எதைக் கொண்டு போவது?" என்று வியந்து அவர் திருமுறைகளைத் தெலுங்கில் மொழிபெயர்க்கும் திட்டத்திற்கு ஒப்புக் கொண்டார். திருப்பதி தேவஸ்தானம் பன்னிரு திருமுறைகளைத் தெலுங்கில் மொழிபெயர்க்கும் திட்டத்திற்கு 15 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது. திவாகர்தான் அந்தத் திட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளராக உள்ளார். அந்தப் பணி நடந்து கொண்டிருக்கிறது. 1, 2, 3, 7, 9 திருமுறைகள் மொழிபெயர்ப்பாகின. 4, 5, 6, 8, 10, 11, 12 திருமுறைப் பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. கன்னட, மலையாள மொழிபெயர்ப்புப் பணியும் இப்படி அமைந்ததுதான். கன்னடத்தில் முதலாம் எட்டாம் ஒன்பதாம் திருமுறைகள் மொழிபெயர்ப்பாகியது. 12ஆம் திருமுறையில் பாதியை முன்பே மொழிபெயர்த்துள்ளனர்.

மலையாளத்தில் எட்டாம் திருமுறை மொழிபெயர்ப்பாகியது. கன்னட மலையாள மொழிபெயர்ப்புகளுக்கு நிதி தேடிக் கொண்டிருக்கிறோம். கடந்த சில மாதங்களுக்கு முன் நான் மியம்மா (பர்மா) போயிருந்தேன். அங்கே ஒரு பெண் - யாரென்று எனக்குத் தெரியவே தெரியாது - திடீரெனப் பத்தாயிரம் கியாட் பணம் தருகிறார், திருமுறைப் பணிக்காக வைத்துக் கொள்ளுங்கள் என்று. நான் அங்குள்ள நடராஜர் கோயில் தலைவர் மாணிக்கத்திடம் அந்தப் பணத்தைக் கொடுத்தேன். திருமுறைகளைப் பர்மிய மொழியில் மொழிபெயர்க்குமாறு கேட்டுக் கொண்டேன். தற்போது திருவாசகத்தை மொழிபெயர்த்து விட்டனர். அதற்கான நிதியை அவர்களே திரட்டினர். மற்றத் திருமுறைகளுக்கான பணிகளைச் செய்து வருகின்றனர்.

பர்மிய - மியம்மா - மொழியில் பன்னிரு திருமுறைகள்:


பின்னர் மலேசியா சென்றிருந்தேன். மலாய் பல்கலைக் கழகப் பேராசிரியர்களும் திருமுறைகளை மலாய் மொழியில் மொழிபெயர்க்கும் திட்டத்திற்கு ஒப்புக் கொண்டனர். தற்போது அதற்கான நிதியை மலேசியாவில் திரட்டி வருகின்றனர்.

மலாய் மொழி முயற்சி:


அப்பைய தீட்சிதரின் நூற்றாண்டு விழாவில் திருமுறைத் தளத்தைப் பற்றி விளக்கினேன். வடமொழிக்குக் கொண்டுசெல்லப் பலர் முன்வந்தனர். முனைவர் காமாட்சி, நான்காம் ஐந்தாம் திருமுறைகளை மொழிபெயர்த்துத் தந்தார்கள். திருவாசகம் மொழிபெயர்ப்பாகிறது. மீதித் திருமுறைகளையும் மொழிபெயர்க்க முயல்கிறோம். இப்பணிக்குப் பணம் தேவைப்பட்டது. ஆர்ஷ வித்யா குருகுலத் தலைவர் சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களை அப்போது இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் எனக்கு அறிமுகப்படுத்தினார். சுவாமிகளிடம் இப் பணிகளை எடுத்துரைத்தேன். அவர் அதை மனமுவந்து பாராட்டியதுடன் வடமொழிக்குப் பெயர்ப்பதற்கான பணிகளுக்கு நிதி அளிக்க ஒப்புக் கொண்டார். தற்போது அப்பணிகள் நடந்து வருகின்றன. (பார்க்க) இந்தியில் ஏற்கனவே சென்னைப் பல்கலைக் கழக முன்னாள் இந்திப் பேராசிரியர் முனைவர் சுந்தரம் மொழிபெயர்த்த 4, 5, 6, 7, 8, 10ஆம் திருமுறைகளின் 9,700 பாடல்களுக்கு உரிமை வாங்கித் தளத்தில் பதிவேற்றியுள்ளோம். பேராசிரியர் முனைவர் சுந்தரம் முதலாம் திருமுறையை மொழிபெயர்த்துத் தந்துள்ளார். 2, 3, 8 திருக்கோவையார், 9, 11, 12 திருமுறைகள் மொழிபெயர்க்கப்பட உள்ளன.

சிங்கள மொழிபெயர்ப்புக்காகக் கொழும்பில் இருக்கும் அகில இலங்கை இந்து மாமன்றத்தாரை அணுகினேன். அவர்கள் சிங்கள் மொழிபெயர்ப்பாளரைத் தேட,தற்போது ஒரு மொழிபெயர்ப்பாளர் கிடைத்திருக்கிறார். அதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தியத் தூதுவரிடம் இப்பணி பற்றி அவர்கள் கூற, அவரோ இதற்கான முழுச் செலவையும் இந்திய அரசு மூலம் தான் தரக்கூடுமென்றும், அந்தப் பணியை உடனடியாகத் துவங்குமாறும் கூறியிருக்கிறார். இப்படி ஒவ்வொரு மொழிக்கும் இவ்வாறு மொழிபெயர்ப்பு செய்வது என்பது ஒரு பெரிய பணி. இதில் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.

கே: பாடல்களைப் படிப்பதோடு குரலிசையில் கேட்கும்படியாகவும் தளத்தில் இட்டிருக்கிறீர்கள், அல்லவா?
ப: ஒருமுறை தூத்துக்குடியில் சைவ சித்தாந்த சபையில் பன்னிரு திருமுறைகள் இணைய தளம் பற்றியும், அதன் மொழிபெயர்ப்பு பற்றியும் காட்சி உரையாகச் சொல்லிக் கொண்டிருந்தேன். அப்போது பிரபாகரன் என்பவர் எழுந்து "எல்லாம் செஞ்சிருக்கீங்க. பாட்டுக் கேட்க ஒண்ணும் வழியில்லையே. குரலிசையைச் சேருங்கள்" என்றார். அதற்கு நான் அதற்கு அதிக நிதி வேண்டுமே என்றேன். உடனே தன் கையிலிருந்த ஐயாயிரம் ரூபாயை நிதியாகத் தந்தார். பணி செய்ய ஆள் வேண்டுமே என்றேன். நானே உங்களுக்குப் பதிவு செய்து அனுப்புகிறேன் என்றார். அதே போன்று ஒவ்வொரு பண்ணிலும் ஒவ்வொரு பாட்டாகப் பதிந்து அனுப்பினார். அதை தளத்தில் இட்டோம். தருமபுரம் சுவாமிநாதன் பாடிய பாடல்களுக்கான உரிமையை வைத்திருந்த வாணி நிறுவனத்தாரிடம் முறையாகப் பேசி, அதற்கான ஈட்டுறுதித் தொகையைச் சிங்கப்பூர் அன்பர்கள், சிறப்பாகத் திருமுறை மாநாட்டுக் குழுவினர் தந்தனர். அனுமதியைப் பெற்று தருமபுரம் ப. சுவாமிநாதன் பாடிய 10,302 பாடல்களை இணையத்தில் பதிவேற்றினோம்.

திருக்கோவையார் மற்றும் 10, 11, 12ம் திருமுறைகளில் பெரும்பகுதி ஒலிப்பதிவின்றி இருந்தது. நான் சிங்கப்பூர் சென்றிருந்தபோது உருத்திரகாளியம்மன் கோயிலாரிடமும் திருமுறை மாநாட்டுக் குழுவினரிடமும் இதுபற்றித் தெரிவித்தேன். அவர்கள் 12ம் திருமுறையின் குரலிசைப் பதிவுக்கு நிதி தந்தனர். மயிலாப்பூர் ஓதுவார் பா. சற்குருநாதன் 4,274 பாடல்களையும் பாடித் தந்தார். அதைத் தளத்தில் இட்டோம். பின். குரலிசைப் பதிவின்றி இருந்த திருக்கோவையார் மற்றும் 10, 11ஆம் திருமுறைகள் மட்டும்தான். அதையும் மாநாட்டுக் குழுவினரிடம் தெரிவிக்க அங்குள்ள அடியவர்கள் அதற்கான நிதிச் செலவை ஏற்றனர். பணி நடைபெறுகிறது. சில ஆயிரம் பாடல்கள் மட்டுமே ஒலிப்பதிவாகாமல் எஞ்சியுள்ளன.

பன்னிரு திருமுறைகளைச் சிங்களம், பர்மியம், மலாய் ஆகிய மூன்று மொழிகளுக்கு மொழிபெயர்க்கும் பணி தொடங்கவுள்ளது. ஆங்கில மொழிபெயர்ப்பு முழுமையாக முடிந்துவிட்டது. கன்னடம், மலையாளம், தெலுங்கு, சமஸ்கிருதம், ஹிந்தி ஆகிய மொழிகளுக்கு மொழிபெயர்ப்புப் பணிகள் நடந்து வருகின்றன. உலகம் முழுக்கப் பன்னிரு திருமுறைப் பாடல்களை முழுமையாக எவரும் இணையத்தில் கேட்கலாம். 274 கோயில்களின் காணொலிகளையும் பார்க்கலாம். பாட்டு முதற் குறிப்பையும், பாடலில் வரும் எந்தச் சொல்லையும் தட்டச்சு செய்து தேடி உடன் பாடலைப் பெறலாம்.

கே: பதிப்புத் துறையில் உங்களுக்கு ஈடுபாடு ஏற்பட்டது எப்படி?
ப: யாழ்ப்பாணத்தில் என் தந்தையார் ஓர் அச்சுக் கூடம் வைத்திருந்தார். அங்கேதான் பதிப்புப் பணியில் எனக்குப் பயிற்சி. சென்னையில் 1980இல் காந்தளகத்தைத் தொடங்கும்போது "ஈழத்துக்கோர் இலக்கியப் பாலம்" என்றுதான் தொடங்கினோம். இந்திய, தமிழக நூல்கள் இலங்கையில் கிடைத்தன. ஆனால் இலங்கையில் பதிப்பாகும் எழுத்தாளர் நூல்கள் இந்தியாவில் கிடைப்பதில்லை. அவை பற்றிய அறிமுகமும் இல்லை என்ற எண்ணம் இலங்கையில் உள்ளோருக்கு இருந்தது. பேரா. கைலாசபதி, சிவத்தம்பி போன்றோரது நூல்களை என்.சி.பி.எச். வெளியிட்டது. பாரி நிலையம் கணேசலிங்கத்தின் நூல்களை வெளியிட்டது. ஆனால் டொமினிக் ஜீவா, அந்தனி ஜீவா, டேனியல், செங்கை ஆழியான் போன்ற சிறந்த எழுத்தாளர்களின் நூல்கள் இங்கே கிடைக்கவில்லை. அவை இங்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் காந்தளகத்தை ஆரம்பித்தோம். ஈழத்து எழுத்தாளர் படைப்புகளைத் தமிழ்நாட்டில் சந்தைப்படுத்த வேண்டும் என்பதுதான் நோக்கம். 1986க்குப் பின்னர் தமிழகத்தில் விற்பனைக் களத்தை விரிவாக்கினோம்.'காந்தளகம்' விற்பனை மையங்களைச் சிற்றூர்கள் தோறும் தொடங்கினோம். அவை வளர்ந்து, மரமாகின.

இன்றைக்கு வவுனியா, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு என இலங்கையின் பல பகுதிகளிலும் வாழும் 500க்கும் மேற்பட்ட ஈழத்து எழுத்தாளர்களது நூல்கள் தமிழகத்தில் கிடைக்கின்றன. இன்றைக்கு தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த தமிழர்களின் நூல்களை மட்டுமே வெளியிடுபவர்களாகக் காந்தளகம், எஸ்.பொ.வின் மித்ர, செ. கணேசலிங்கத்தின் குமரன் பதிப்பகம் ஆகிய மூன்று நிறுவனங்கள் இருக்கின்றன. மணிமேகலைப் பிரசுரம் கடந்த நான்காண்டுகளில் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் 500 படைப்புகளை வெளியிட்டுள்ளது. புலம்பெயர்ந்த தமிழ்ப் படைப்பாளிகளைத் தமிழக வாசகச் சந்தைக்கு அடித்தளமிட்டது காந்தளகம். தொடர்பவர்கள் பலர்.

கே: காந்தளகத்தின் முக்கிய பணி என்று எதைச் சொல்வீர்கள்?
ப: இணையம் பரவலாக அறிமுகமான காலகட்டத்திலேயே, ஒருங்குறி எழுத்துக்கள் வராத பொழுதிலேயே, 1998ல், இணையத்தில் தமிழ்ப் புத்தக விற்பனைத் தளமான www.tamilnool.com முதன்முதலில் உருவாக்கியது ஒரு முக்கியப் பணியாகும். தமிழகத்தின் சிறு, சிறு பதிப்பாளர்களை எல்லாம் தொடர்பு கொண்டு, அவர்களது நூல்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தோம். இரண்டாயிரம் பதிப்பாளர்களின் நாற்பதினாயிரம் நூல்களைப் பற்றிய விவரங்களை வலையேற்றினோம். உலகளாவிய நிலையில் எந்தத் தமிழ் நூல் வேண்டுமானாலும் அதைப் பெறும் வண்ணம் தளத்தை வடிவமைத்தோம். சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் கிருஷ்ணா டாவின்ஸி அப்போது, "ஆங்கிலப் புத்தகங்களை வெளியிடும் அமேசான் தளத்திற்குச் சமமான தளம்" என்று 1999 குமுதம் தீபாவளி மலரில் பாராட்டி எழுதினார். அந்த ஆண்டிலேயே வலைத்தளத்தை 700 ஆசிரியர்கள், 32 பாட வகைகள், 40000 புத்தகங்கள், 2000 பதிப்பாளர்கள் கொண்டதாக வடிவமைத்து முன்னோடியான இடத்தைப் பிடித்தோம்.

இரண்டாவது பணியாகத் தமிழ்நாட்டில் தினமணியுடன் இணைந்து 44 இடங்களில் புத்தகக் காட்சியைச்சமகாலத்தில் நடத்தினோம். 175 பதிப்பாளர்களின் நூல்கள் அதில் இடம்பெற்றன. மூன்றாவதாக விற்பனையாளர்-சிறு பதிப்பாளர் வலைப்பின்னலை உருவாக்கினேன். பொதுவாகவே ஒரு தமிழ் வாசகனுக்கு எந்தெந்தத் தலைப்புகளில், என்னென்ன புத்தகங்கள் வெளியாகின்றன என்பது தெரியாது. சிறு பதிப்பாளர்கள் தாம் இருக்கும் ஊர்களில் புத்தகத்தைப் பதிப்பித்து விற்பனை செய்வார்களே தவிர அது பரவலாக வாசக கவனத்திற்கு வராது. விழுப்புரத்தில், பாண்டிச்சேரியில், நாமக்கல்லில் வெளியாகும் புத்தகங்களைப் பற்றிச் சென்னை வாசகனுக்குத் தெரியாது. அதனை மாற்ற, நான் பதிப்பாளர்களைத் தொடர்பு கொண்டு, ஒரு வலைப்பின்னலை உருவாக்கினேன். அதனால் தற்போது சிறுபதிப்பாளர்களைத் தெரிந்து கொண்ட விற்பனையாளர்கள் தமிழகம் முழுவதும் இருக்கிறார்கள்.

நேற்று, மணிமேகலைப் பதிப்பகம், ரவி தமிழ்வாணன் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். "ஐயா, நான் உலகம் முழுக்கக் கண்காட்சி நடத்த நீங்கள்தான் எனக்குக் களம் அமைத்துக் கொடுத்தீர்கள். இன்றைக்கு நான் டோக்கியோ, துபாய் எனப் புத்தக கண்காட்சிகளுக்காகப் போய்க் கொண்டிருக்கிறேன். www.tamilnool.com மூலமாக எங்களிடம் மிக அதிகமாக புத்தகங்களை வாங்குகின்ற வாடிக்கையாளராகவும் நீங்கள் உள்ளீர்கள்" என்று அவர் எழுதியிருந்தார். பதிப்பாளர்கள் எப்போதுமே தமக்குள்ளே போட்டி மனப்பான்மையில்தான் இருப்பார்கள். ஆனால் நாங்கள் அப்படி அல்ல. எழுத்தாளர் படைப்புகள் எவர் பதிப்பித்தாலும் மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற புதுக் கண்ணோட்டம் காந்தளகத்துக்கு உண்டு. அந்தக் கண்ணோட்டத்தினால் பதிப்புலகில் பெரிய மாற்றத்தை நாங்கள் கொண்டு வந்தோம். இதற்கு 1990களிலேயே நாங்கள் அடித்தளமிட்டிருக்கிறோம்.

கே: நல்ல தமிழுக்கு காந்தளகம் என்று சொல்வார்கள். அதன் பின்னணி என்ன?
ப: பிழையில்லாமல், தவறில்லாமல், செம்மையான நூல்களைப் பதிக்க வேண்டும்; பதிப்புத் தொழிலை மேம்படுத்த வேண்டும் என்பது எங்களது அடிப்படைக் கொள்கை. கலைஞர் மு. கருணாநிதி தனது நூல்களை பதிப்புச் சீராக்க வேண்டுமென்றால் சச்சிதானந்தனிடம் கொடுங்கள் என்று சொல்லுவார். நாங்கள் தமிழைச் செம்மையாக எழுதாதவர்களின் நூல்களை வாங்குவதே இல்லை. ஆங்கிலம் கலந்து எழுதுபவர்கள், வடமொழி கலந்து எழுதுபவர்கள் - அவர்கள் பிரபல எழுத்தாளர்களாக இருந்தாலும் - நூல்களை நாங்கள் பதிப்பிக்கமாட்டோம். ஒன்றிரண்டு கலப்பு இருந்தால் ஏற்கலாம். ஆனால் அதுவே அவர்களது நடையாக இருந்தால் ஏற்க மாட்டோம். இதற்காகவே நாங்கள் தமிழ்ப் புலவர்களைப் பதிப்பாசிரியர்களாக வைத்திருக்கிறோம்.

இன்றைக்குச் சென்னையில் இருக்கும் மிகச்சிறந்த தமிழ்ப் பதிப்பாசிரியர் புலவர் வெற்றியழகன். செம்மொழி மாநாட்டு மலர் பதிப்பித்தபோது அவரேதான் தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனுடன் இணைந்து பணியாற்றினார். பேரா. க. அன்பழகனிடமிருந்து பாரதிதாசன் விருது பெற்றவர். ஒருகாலத்தில் சரியான வேலை கிட்டாமல், திருவல்லிக்கேணியில் பரிசுச்சீட்டு விற்றுக் கொண்டிருந்தார். "என்னிடம் அழைத்து வாருங்கள். நான் முழுநேரப் பணி கொடுக்கிறேன்" என்று சொன்னேன். என்னுடன் ஓராண்டு பணியாற்றினார். முருகன் பாடல்கள், கம்பராமாயாணம் போன்ற நூல்களை எல்லாம் பிழையின்றிப் பதிப்பித்தோம். இன்றைக்குத் தமிழ்நாட்டின் பல பதிப்பகங்களுக்கு அவர் பதிப்பாசிரியராக இருக்கிறார்.

கே: இன்றைய பதிப்புத் தொழில் குறித்து உங்கள் கருத்தென்ன?
ப: இன்றைக்கு பதிப்புத் தொழில் நிறையவே மேம்பட்டிருக்கிறது. 1980ல் நாங்கள் இந்தத் துறைக்கு வந்தபோது எழுத்தறிவு பெற்றவர்களின் விழுக்காடு 45 % தான். 1948ல் இது 15 % ஆக இருந்தது. ஆனால் இன்றைக்கு 91% தமிழர் எழுத்தறிவு பெற்றுள்ளனர். இந்த வளர்ச்சிக்குப் பதிப்புத் தொழிலின் இன்றைய வேகம் போதாது என்றுதான் சொல்ல வேண்டும். இணையம் இன்றைக்கு படைப்பாளிகளின் செய்திகளைத் தாங்கி வரும் ஊடகமாக வளர்ந்துள்ளது. எந்தப் படைப்பாளிக்கு இணையம் கை கொடுக்கிறதோ அவர் அங்கே இருக்கிறார். அதைப் பற்றி அறியாதவர்கள், இணையத்தைப் பயன்படுத்தும் சூழல் இல்லாதவர்கள் அச்சுப் பதிப்பாளர்களைத் தேடுகிறார்கள். தமிழ்ப் புத்தகங்களுக்கு முன்பு பர்மா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கையைத் தவிர வேறு உலகளாவிய சந்தை இல்லை. ஆனால் இன்று உலகளாவிய தமிழ் வாசகர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு வெளியே ஆந்திரா, கேரளா, கர்நாடகா, டில்லி என்று இந்தியாவின் பல மாநிலங்களில் ஒரு கோடித் தமிழர்கள் வசிக்கிறார்கள். ஆனால் பதிப்பாளர்களும் புத்தக விற்பனையாளர்களும் அந்தச் சந்தைகளை நோக்கிச் செல்வதில்லை.

கே: இந்தத் துறையின் இன்றைய பிரச்சனைகள் என்ன?
ப: முதல் பிரச்சனை மெய்ப்புப் பார்ப்பது. அதற்கான அவசியத்தை இப்போது பிழையோடும், பொருத்தமில்லாமலும் வெளிவரும் பல நூல்களைப் பார்த்தால் தெரியும். மெய்ப்புப் பார்ப்பவர்கள் ஆண்டொன்றுக்கு நூறு பேராவது இப்போது தேவை. இல்லாவிட்டால் பதிப்புத் துறை முன்னேறாது. புலவர் வெற்றியழகனைப் போன்று துல்லியமாக மெய்ப்புப் பார்ப்பவர்கள் மிகவும் குறைவு. அடுத்த முக்கியத் தேவை எடிட்டர் எனப்படும் பதிப்பாசிரியர். அவர்தான் ஒரு நூல் செம்மையாக வெளிவர உதவுகிறார். ஆனால் தற்போது கிழக்கு பதிப்பகம் தவிர பெரும்பாலான பதிப்பகங்கள் நூலாசிரியர் எழுதித் தருவதை அப்படியே வெளியிடுகின்றனரே தவிர, பதிப்பாசிரியர்களை வைத்து கருத்துப் பிழை, சொற் பிழை, தகவல் பிழை போன்றவற்றைக் களைந்து செம்மையாக்கி வெளியிட முன்வருவதில்லை.

ஒரு எழுத்தாளர் முதலில் "ஜெர்மனி" என்று எழுதியிருப்பார். பின்னர் அதே நூலில் "செர்மனி" என்று எழுதியிருப்பார். அதுபோல முதலில் "ஒருங்குறி" என்று சொல்லியிருப்பார். பின்னால் "யூனிகோட்" என்றிருப்பார். அறியாத ஒரு வாசகன் படிக்கும்போது, அவனுக்கு இரண்டும் வேறு வேறோ என்ற எண்ணம் ஏற்படும். இதுபோன்ற பிழைகளைக் களையப் பதிப்பாசிரியரால் மட்டுமே முடியும். பல நூல்கள் படிக்கச் சோர்வு தருவனவாகவும், கடின நடையிலும் தொடச்சியின்மை, பத்தி பிரிப்பின்மை போன்ற பிழைகளுடனும் வெளியாவது இப்படித்தான். விளைவு, வாசகர்கள் அதுபோன்ற நூல்களை வாங்குவதைத் தவிர்த்து விடுவர். ஒரு பதிப்பாசிரியர் எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் பாலமாய் இருக்கிறார்.

ஒரு நல்ல மெய்ப்புப் பார்ப்ப்பவரை, பதிப்பாசிரியரை உருவாக்கும் பயிற்சி அளிப்பதற்கு ஏதேனும் பல்கலைக்கழகமோ அல்லது பட்டயம் தரும் நிறுவனமோ அமைக்கப்பட வேண்டும். கல்வியாளர் இம்முயற்சிகளை மேற்கொண்டால்தான் இத்துறை மேம்படும்.

கே: பதிப்புத் தொழில் வளர்ச்சிக்காக இதழ் ஒன்று நடத்தி வந்தீர்கள் அல்லவா?
ப: ஆம். 'பதிப்புத் தொழில் உலகம்' என்ற மாதாந்திர இதழ் ஒன்றை நடத்தி வந்தேன். பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள், எழுத்தாளர்கள் நலன் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவும், அவர்களுக்கிடையே நல்லதொரு புரிந்துணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காகவும் பதிப்பாளர் - விற்பனையாளர் உடன்பாட்டு ஒப்பந்தம் ஒன்றை அதில் வெளியிட்டேன். விற்பனையாளர்களிடம் விற்கப் புத்தகங்களைக் கொடுக்கும் பெரும்பாலான சிறு பதிப்பாளர்களுக்கு அந்தப் பணம் சரிவரக் கிடைப்பதில்லை. அதுபோல எழுத்தாளர்கள் தங்களுக்கு 'ராயல்டி' சரியாகக் கிடைப்பதில்லை என்ற குறையைச் சொன்னார்கள். இந்தக் குறைகளை நீக்க ஏற்படுத்தப்பட்டதுதான் பதிப்பாளர் - விற்பனையாளர் உடன்பாடு, விற்பனையாளர்-எழுத்தாளர் உடன்பாட்டு ஒப்பந்தம். இன்று பெரும்பாலான பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் அந்த உடன்பாட்டைப் பயன்படுத்தி வருகின்றனர்.

கே: உங்களுடைய அறிவியல் ஆய்வுப்பணி பற்றிச் சொல்லுங்கள்.
ப: ஐ.நா. உணவு வேளாண் அமைப்பின் ஆலோசகராக சுமார் ஏழு ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறேன். உலகநாடுகள் பலவற்றுக்கு ஆலோசகராக இருந்திருக்கிறேன். பங்களாதேசம், தாய்லாந்து, பிரிட்டன், ஆஸ்திரேலியா எனப் பல நாடுகளின் அழைப்பின் பேரில் பல மாநாடுகளில் கலந்து கொண்டிருக்கிறேன். உலகளாவிய அளவில் 'கடலட்டை' என்னும் உணவைப் பதனிடுவது குறித்த புரிதலை ஏற்படுத்தியிருக்கிறேன்.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதன் புதிய உத்திகள் மக்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காக இந்திய கடல்சார் ஏற்றுமதி நிறுவனத்தினர் என்னை கிராமங்களுக்குச் சென்று பயிற்சி அளிக்கச் சொன்னார்கள். கருத்தரங்குகளில் பேசச் சொன்னார்கள். அதுபோல 'சேது சமுத்திரக் கால்வாய் திட்டம்' பற்றிய அறிவியல் பூர்வமான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்குத் தமிழகத்தில் சுமார் 100 இடங்களுக்குச் சென்று ஒலி-ஒளிக் காட்சி நடத்தினேன். என் அறிவியல் கண்ணோட்டம் இப்படி பல நிலைகளில் பயன்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் கடந்த 26 ஆண்டுகளாக என்னுடைய கடல்சார் அறிவு உதவியிருக்கிறது.

சச்சிதானந்தனின் சைவ, தமிழ்ப் பணிகள் மேலும் சிறக்க வாழ்த்தி விடைபெற்றோம்.

சந்திப்பு, படங்கள்: அரவிந்த் சுவாமிநாதன்

*****


புத்தகச் சந்தை
1986ல் நான் இந்தத் தொழிலுக்கு வரும்போது புத்தகச் சந்தைகளை நடத்திக் கொண்டிருந்தோர் தென்னிந்திய புத்தக பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கத்தினர். அதன் தலைவராக இருந்தவர் ஒரு ஆங்கிலப் பதிப்பாளர். வெளிநாட்டிலிருந்து ஆங்கிலப் புத்தகங்களை ஆங்கிலப் பதிப்பாளர் வரவழைப்பர். அவற்றைக் கல்வியகங்களுக்கு விற்பனை செய்வர். சங்கத்தில் தமிழ்ப் பதிப்பாளர்களை ஊறுகாய் போல ஆங்கிலப் பதிப்பாளர் பயன்படுத்தி வந்தனர். தமிழ்ப் பதிப்பாளர்களுக்கு அதனால் பயன் ஒன்றும் கிடைக்கவில்லை. ஆங்கிலப் பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர்களே எல்லாப் பொறுப்பிலும் இருப்பார்கள். கூட்டங்களை நடத்துவார்கள். 'குறிப்புகள்' எல்லாம் ஆங்கிலத்திலேயே இருக்கும். அரசாங்கத்தின் நூலக ஆணை கிடைத்து, விற்பனையானால் போதும் என்ற மனப்பான்மையிலேயே தமிழ்ப் பதிப்பாளர்கள் இருந்தார்கள்.
நான் 1986இல் அந்தச் சங்கத்தில் இணைந்தேன். 1995இல் நடந்த கூட்டத்தில் நான், "தமிழ்நூல்களைச் சந்தைப்படுத்தும் அமைப்பு இதுவா? அல்லது ஐரோப்பிய வட அமெரிக்க ஆங்கிலப் பதிப்பாளருக்குத் தமிழ்நாட்டில் சந்தை அமைத்துக் கொடுக்கும் அமைப்பு இதுவா?" எனக் கேட்டேன். ஆங்கிலத்தில்தான் பேசினேன். பிற தமிழ்ப் பதிப்பாளர்களுக்கும் புரிய வேண்டும் என்பதற்காக அதே கேள்வியைத் தமிழிலும் கேட்டேன். உடனே ஒரு ஆங்கிலப் பதிப்பாளர் எழுந்து சொன்னார், "தமிழ்ப் பதிப்பாளர்கள் தங்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் இருக்கிறார்கள்" என்றார்.

அன்றைக்குத்தான் தமிழ்ப் பதிப்பாளர்கள் விழித்துக் கொண்டார்கள். 22, 23 ஆண்டுகளாக ஆங்கிலப் பதிப்பாளர்களே கோலோச்சி வந்த அமைப்பு, என்னுடைய இடைவிடாத போராட்டத்தின்மூலம், முதன்முதலாக 2003ல் ஒரு தமிழ் பதிப்பாளர் தலைமைக்கு வந்தது. தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்கழகத்தின் தலைவர் முத்துக்குமாரசாமி தென்னிந்திய புத்தக பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கத்தின் தலைவர் ஆனார். அந்த ஆண்டு முதலே, கூட்டக் குறிப்பு தமிழில் இருக்க வேண்டும்; தணிக்கைக் கணக்குகள் அறிக்கை தமிழில் அமைய வேண்டும்; கடிதங்கள் தமிழில் இருக்க வேண்டும் என்றெல்லாம் நான் வலியுறுத்தி, அவை நடைமுறைக்கு வந்தன. இன்றைக்கு புத்தகக் காட்சியின் கோலமே மாறி விட்டது. தமிழ்நாட்டில் எங்கு புத்தகக் காட்சி நடந்தாலும் அது தமிழ்ப் பதிப்பாளர்களின் புத்தகக் காட்சியாக இருக்கிறது. சென்னை புத்தகக் காட்சியில் 600, 700 அரங்குகள் இருந்தால் அதில் 400, 500 அரங்குகள் தமிழ் பதிப்பாளர்களின் அரங்காக இருக்கிறது.

மறவன்புலவு க.சச்சிதானந்தன்

*****


என் தந்தை ஒரு முன்னோடி
யாழ்ப்பாணத்துக்கு என்று ஒரு மரபு இருக்கிறது. ஆறுமுகநாவலர் மரபு. எதை அச்சிட்டாலும் - அது விளம்பரமோ, துண்டறிக்கையோ, நூலோ - எதுவாக இருந்தாலும் அதனை அச்சிடும் முன் பண்டிதர்களை வைத்து மெய்ப்புப் பார்த்துச் செப்பனிட்ட பின்னரே அச்சிடும் வழக்கம் யாழ்ப்பாணத்தில் பலரிடம் உண்டு. அவ்வாறு மெய்ப்புப் பார்ப்பவர்களே பதிப்பாசிரியரும் ஆவர்.

என் தந்தையாரும் இதைப் பின்பற்றினார். பண்டிதர் மயில்வாகனன், புலவர் ஆறுமுகம் (தமிழ்த் திரைப்பட இயக்குநர் வி. சி. குகநாதனின் சிற்றப்பா), புலவர் சிவபாதசுந்தரம் எனப் பலர் எங்களுக்குப் பதிப்பாசிரியர்களாக இருந்தனர். பள்ளி ஆசிரியர்களாக வேலை பார்த்த இவர்கள் என் தந்தையாரின் நண்பர்களும் கூட. நாங்கள் கணிதப் புத்தகத்தை அச்சிட்டபோது இரண்டு கணித ஆசிரியர்களை பதிப்பாசிரியர்களாக வைத்திருந்தோம். ஆனால் இன்றைக்கு ஒன்றுக்கொன்று முரணான செய்திகளை ஒரே புத்தகத்தில் வெவ்வேறு பக்கங்களில் கொண்டவையாகப் பல நூல்கள் தமிழ்ப்புலமெங்கும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பாடப் புத்தகங்களில்கூட இந்தச் சீரின்மை இருக்கின்றது.

என் தந்தை எனக்களித்தது பிழைநீக்கி வெளியிடும் கொடை. சென்னைக்கு வந்து 'காந்தளகம்' அமைத்து இருபத்தைந்து ஆண்டுகளாக அதே நோக்கோடு நடத்த முயல்கிறேன். எங்களிடம் ஒரு நூல் வந்தால் அதை மெய்ப்புப் பார்த்து, தரம் பிரித்து வெளியிடக் குறைந்தது சுமார் ஒரு மாதம் ஆகும். எழுத்தாளர் கொடுப்பதை அப்படியே வெளியிடுவதில்லை. குறைந்த எண்ணிக்கையில் நாங்கள் பதிப்பித்தாலும் தரம் எங்களுக்கு மிக மிக முக்கியம்.

மறவன்புலவு க.சச்சிதானந்தன்

© TamilOnline.com