பிப்ரவரி 19, 2012 அன்று மிச்சிகன் மாநிலத்தின் பாண்டியாக் நகரில் உள்ள பராசக்தி ஆலயத்தில் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. டாக்டர் கிருஷ்ணகுமார் தியானத்தில் ஈடுபட்டிருந்தபோது, அன்னை பராசக்தி எழுந்தருளி தனக்கோர் ஆலயம் அமைக்குமாறு அருளிச் செய்தார். இதற்கேற்ப 1999ம் ஆண்டு இந்த ஆலயம் நிறுவப்பட்டது. சிவராத்திரியன்று ஆலயம் முழு நாளும் திறந்து வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. குபேர சிவலிங்க சன்னதியில் அபிஷேகம், ருத்ர ஹோமம் ஆகியவை காலையில் நடைபெற்றன. டாக்டர் கிருஷ்ணகுமார் ஹோமத்தின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார். பின்னர் சோமசுந்தர சிவலிங்க சன்னதியில் பூஜை நடைபெற்றது. இரவில் அன்பர்கள் ருத்ர பாராயணம் செய்தார்கள். மரகத சிவலிங்கத்திற்கு அனைத்து கால பூஜையிலும் அபிஷேகம் நடைபெற்றது. முழுநாள் உபயதாரர்களுக்கு ஸ்படிக லிங்கங்கள் வழங்கப்பட்டன.
ஸ்ரீ வெங்கடேஸ்வரர் சன்னதி முன்பு வைக்கப்பட்டிருந்த சர்வஜன சிவலிங்கத்துக்கு பக்தர்கள் பாலபிஷேகம் செய்தனர். பின்னர் 108 ஜோதிர்லிங்கத்தை ஏற்றினார்கள். அடுத்து ஆலயத்தின் நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த பனியால் செய்த சிவலிங்கத்திற்கும், குபேர லிங்கத்திற்கும் அபிஷேகங்கள் நடைபெற்றன. ஒவ்வொரு கால பூஜைக்குப் பின்னரும் பிரசாதம் வழங்கப்பட்டது. சிவராத்திரிக்கு முந்தைய தினத்தன்று உமையாள் முத்து அவர்கள் சிவராத்திரியின் சிறப்புகள் பற்றி உரையாற்றினார்.
செய்திக் குறிப்பிலிருந்து |